இந்தியாவில் வசிக்கும் இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஜீ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது,

“இந்தியாவில் 35 ஆண்டுகளாக அகதிகளாக வாழும் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்.” என்று அதில் பதிவிட்டிருக்கிறார்.

இதனிடையே, இந்தியாவுக்கு பாகிஸ்தான், வங்காளதேசம் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் சிறுபான்மையினராக இருக்கும் மக்கள் அகதிகளாக வருகை தருகிறார்கள். அவர்களுக்கு குடியுரிமை அளிக்கும் வகையில் இந்திய குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. 

இந்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது. நேற்று நடைபெற்ற பாராளுமன்ற கூட்டத்தில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டது. நாளை மாநிலங்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.