வவுனியா அரச – தனியார் போக்குவரத்து துறையினருக்கிடையில் நீண்ட காலமாக நிலவி வந்த பிரச்சினைகளுக்கு கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முன்னிலையில் சுமூக தீர்வு காணப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட அரசாங்க செயலகத்தில் நேற்று (திங்கட் கிழமை) இடம்பெற்ற இதுதொடர்பான கலந்துரையாடலில் இணைந்த நேர அட்டவணையின் அடிப்படையில் பேருந்துக்களை இயக்குவதற்கு அரச மற்றும் தனியார் பேருந்து சங்கப் பிரதிநிதிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே, சம்மந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் இணக்கப்பாட்டுடன் உருவாக்கப்பட்ட இணைந்த அட்டவணையின் அடிப்படையில் உடனடியாக பேருந்துளை இயக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் தர்மபால ஆகியோருடன் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் உட்பட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.