இலங்கை அணி பாக்கிஸ்தானில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கான அனுமதியை வழங்கிய ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிற்கு- இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபைக்கு பாக்கிஸ்தானின் முன்னாள் வீரர்கள் பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளனர்.

டெஸ்ட் தொடரிற்காக அணியை பாக்கிஸ்தானிற்கு அனுப்பியமைக்காக இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபைக்கு நன்றியை தெரிவிக்க விரும்புகின்றேன் என பாக்கிஸ்தானின் முன்னாள் வீரர் சஹீட் அப்ரீடி தெரிவித்துள்ளார்.

பாக்கிஸ்தானில் தொடர் இடம்பெறுவதை உறுதி செய்வதற்காக பாக்கிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபைக்கும் நன்றியை தெரிவிக்க விரும்புவதாக அப்ரீடி தெரிவித்துள்ளார்.

பாக்கிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் தளராத முயற்சி மற்றும்  உறுதிப்பாடு காரணமாகவே பாக்கிஸ்தானில் மீண்டும் டெஸ்ட்போட்டி சாத்தியமாகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடுகளும் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபைகளும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் ஆதரவை வழங்கவேண்டும்,கடந்த காலங்களில் நாங்கள் இலங்கைக்கு கிரிக்கெட்டிற்கு உறுதியான ஆதரவைவழங்கியுள்ளோம் எனவும் தெரிவித்துள்ள அப்ரீடி அவர்கள் அதற்கு பதிலளித்துள்ளமை குறித்து மகிழ்ச்சியடைகின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை அணியின் விஜயத்தை பாராட்டியுள்ள முன்னாள் வீரர் முகமட் யூசுவ் தங்கள் கதாநாயகர்கள் சொந்த மண்ணில் விளையாடுவதை பாக்கிஸ்தான் இரசிகர்கள் பார்க்கப்போவதுகுறித்து மகிழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது மிகச்சிறப்பான தருணம், பாக்கிஸ்தான் விளையாட்டுகளை நேசிக்கும் ஒரு தேசம்,இலங்கை அணி பாக்கிஸ்தான் வருவது ஒரு மிகப்பெரும் விடயம்,ரசிகர்களிற்கு அற்புதமான செய்தி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாக்கிஸ்தானில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி சில அற்புதமான நினைவுகள் எனக்குள்ளது,இந்த தொடர் சிறப்பானதாக அமையும்,நாங்கள் சிறந்த தரமான கிரிக்கெட்டை பார்ப்போம் ,அனைவரும் இதனை ரசிப்பார்கள் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சகலதுறை வீரர் சொயிப்மலிக்கும்  இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபைக்கும் இலங்கைஅணிக்கும் தனது நன்றிகளை தெரிவித்துள்ளார்.

சர்வதேச டெஸ்ட் போட்டிகளை பாக்கிஸ்தானிற்கு மீண்டும் கொண்டுவருவதில்  பங்களிப்பை வழங்கிய இலங்கை அணிக்கும், இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபைக்கும் நன்றியை தெரிவிக்க விரும்புகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் இதனை மறக்கமாட்டோம்,அவசியமான தருணங்களில் இலங்கையும் அதன் மக்களும்  பாக்கிஸ்தான் மக்களின் ஆதரவையும் உதவியையும் பெறுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.