(எம்.எப்.எம்.பஸீர்)

கடத்தப்பட்டு, அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் கொழும்பில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தில் கடமையாற்றும் இலங்கையைச் சேர்ந்த பெண் ஊழியர், பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பதை துல்லியமாக கண்டறிய  இன்று அவர் விஷேட சட்ட வைத்திய பரிசோதனைகளுக்குட்படுத்தப்பட்டார். 

குறித்த பெண்ணின் சட்டத்தரணியான சிரேஷ்ட சட்டத்தரணி உபுல் குமரப்பெரும மன்றில் முன்வைத்த விடயங்கள், சி.ஐ.டி.  முன்வைத்த கோரிக்கைகளை ஆராய்ந்து கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன இன்று விடுத்த உத்தரவுக்கு அமைய இந்த சட்ட வைத்திய பரிசோதனைகள் இடம்பெற்றன. 

இவ்விரு விடயங்களுக்கு மேலதிகமாக குறித்த பெண் மானசீக ரீதியாக அழுத்தங்களுக்குட்பட்டுள்ளாரா என்பதையும் பரீட்சிக்கவும் இதன்போது கொழும்பு சட்ட வைத்திய அதிகாரிக்கு நீதிவான் உத்தரவிட்டார்.

அதன்படி இன்று பிற்பகல் 1.00 மணியளவில் இரண்டாவது நாளாக வாக்கு மூலமளிக்க சி.ஐ.டி. தலைமையகத்துக்கு வருகை தந்த சுவிட்சர்லாந்து தூதரகத்தில் கடமையாற்றும் குறித்த பெண் அதிகாரி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணை அதிகாரியான  பிரதான பொலிஸ் பரிசோதகர் ரஞ்ஜித் முனசிங்க தலமையிலான குழுவினரால் பிற்பகல் 1.45 மணியளவில் கொழும்பு  சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.

இதன்போது அங்கு சுமார் இரண்டு மணி நேர விஷேட பரிசோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்டு, மாலை 4.00 மணியளவில் அவ் வலுவலகத்திலிருந்து வெளியேறினார். 

அங்கிருந்து வெளியேறிய அவர் நேரடியாக கோட்டையில் உள்ள சி.ஐ.டி. தலைமையகமான  நான்காம் மாடிக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், அங்கு இரண்டாவது நாளாக அவரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டது.

வெளிநாட்டுப் பயணத் தடை நீடிப்பு

இந்த விவகாரம் குறித்த வழக்கு விசாரணைகள் இன்று கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இதன்போது சுவிஸ் தூதரக பெண் சார்பில் ஆஜரான சட்டத்தரணி உபுல் குமரப்பெரும, தனது சேவை பெறுநரின் வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரினார். 

எனினும் இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்கு அப் பெண்ணின் சாட்சியம், வாக்கு மூலம் மிக முக்கியமானது என்பதை கருத்தில் கொண்டு, அப்பெண் சி.ஐ.டி.க்கு வாக்கு மூலம் ஒன்றினை வழங்கும்  வரையில் தற்காலிகமாக  வெளிநாட்டுப் பயணத் தடையை குற்றவியல் சட்டத்தின் 7 ஆம் அத்தியாயத்துக்கு அமைய விதிக்கப்பட்டதை சுட்டிக்கடடிய நீதிவான், வாக்கு மூலம் பெறும் நடவடிக்கை முழுமை பெறாத நிலையில், அந்த பயணத் தடை தொடர்ந்தும்  அடுத்த வழக்குத் தவணை வரையில் அமுலில் இருக்கும் என அறிவித்து வழக்கை எதிர்வரும் 12 ஆம் திகதி வியாழக் கிழமைக்கு ஒத்தி வைத்தார். 

அத்துடன் மேற்படி பெண்னுக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டே விசாரணைகள் இடம்பெறுகின்றன என்பதை கருத்தில் கொண்டு மிக விரைவாக விசாரணைகளை முடிக்குமாறும் சி.ஐ.டி.க்கு நீதிவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டார்.