(நேபாளத்திலிருந்து எஸ்.ஜே.பிரசாத்)

கடந்த பத்து நாட்களாக நேபாளத்தின் தலைநகர் காத்மண்டு மற்றும் பொக்காராவில் நடைபெற்றுவந்த 13 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் நாளையுடன் முடிவுக்கு வருகின்றது. 

காத்மண்டுவில் அமைந்துள்ள தசாரத் விளையாட்டரங்களில் போட்டி நிறைவு நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வரலாறு படைத்த கபடி அணி

தெற்காசிய விளையாட்டு விழா வரலாற்றில் இலங்கை ஆண்கள் கபடி அணியானது முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி புதிய வரலாறு படைத்தது. 

மறுமுனையில் கபடிப் போட்டியில் பலம்பொருந்திய அணியான இந்தியா இறுதிக்கு நுழைந்திருந்தது. இவ்விரு அணிகளுக்கிடையில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணி 28-11 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிப்பெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச்செல்ல தோல்வியடைந்த இலங்கை அணிக்கோ வெள்ளிப் பதக்கம் சொந்தமானது. 

இதன் மூலம் தெற்காசிய விளையாட்டு விழா வரலாற்றில் முதன்முறையாக வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியது இலங்கை அணி.

கிரிக்கெட்டில் தங்கத்தை தவறவிட்ட இலங்கை ஆடவர் அணி

தெற்காசிய விளையாட்டு விழாவில் இம்முறை இணைக்கப்பட்ட இருபதுக்கு - 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியும் பங்களாதேஷ் அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இன்று பலப்பரீட்சை நடத்தின. 

இதில் பங்களாதேஷ் அணி 7 விக்கொட்டுக்களால் வெற்றிபெற்று தங்கப்பதக்கதை தட்டிச்சென்றது. 

சாதனையை தவறவிட்ட மெத்தியூ அபேசிங்க

இலங்கையின் நீச்சல் வீரர் மெத்தியூ அபேசிங்க இன்று மூன்று தங்கப்பதக்கங்களை வென்று மொத்தமாக 13 ஆவது தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் 7 தங்கப்பதக்கங்களை வென்றெடுத்தார். 

இதன் மூலம் நடப்பு தெற்காசிய விளையாட்டு விழாவில் ஒரு வீரர் அதிகூடிய பதக்கங்கள் வென்றவராக மெத்தியூ விளங்குகிறார். 

இன்று நடைபெற்ற 100 மீற்றர் பிரீ ஸ்டைல் பிரிவிலும், 200 மீற்றர் மெடலி பிரிவிலுமே 50 மீற்றர் பட்டர்ப்லை பிரிவிலும் மெத்தியூ மூன்று தங்கப்பதக்கங்களை வென்றார். 

ஏற்கனவே 4 தங்கப்பதக்கங்களை  வென்றிருந்த மெத்தியூவின் தங்க எண்ணிக்கை இதன் மூலம் ஏழானது.

கடந்த முறை அசாமில் நடைபெற்ற 12 ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் மெத்தியூ 7 தங்கப்பதக்களையும் வென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.