பாலியல் தொடர்பான சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல.. பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியிருக்கின்றதே என்று அதிருப்தியில் இருந்தவர்களுக்கும் கூட வெள்ளிக்கிழமை காலை பொழுது நிச்சயமாக மகிழ்ச்சியாகவே விடிந்திருக்கும்.

காரணம் ஒரு செய்தி தான். தெலுங்கானாவில் கால்நடை பெண் மருத்துவரான 26 வயது பிரியங்கா ரெட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொன்று, உடலை எரித்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 4 பேரையும் பொலிஸார் வெள்ளிக்கிழமை அதிகாலை சுட்டுக் கொன்றுள்ளனர்.


சம்பவம் நடந்தது எப்படி என்பது குறித்து குற்றஞ் சாட்டப்பட்டவர்களை சம்பவ இடத்துக்கு அழைத்துச் சென்று நடித்துக் காட்டச் சொன்ன போது அவர்கள் தப்பியோட முயற்சித்ததாகவும் அப்போது வேறு வழியில்லாமல் பொலிஸார் குற்றம்சாட்டப்பட்டவர்களை சுட்டுக்கொன்றதாகவும் இது எதிர்பாராத வகையில் அதே சமயம் வேறு வழியில்லாமல் நடத்தப்பட்ட சுற்றி வளைப்பு தான் என்றாலும், பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கூட இதனை வரவேற்றுள்ளனர். பொலிஸாருக்கு தங்களது நேரடியான பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.


குற்றவாளிகளாக இருந்தாலும், சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தர வேண்டும், சட்டத்தை யாரும் கையில் எடுக்கக் கூடாது, குற்றம் செய்பவர்கள் எல்லோரையும் சுட்டுத் தள்ள முடியாது என்று வாதங்கள் முன்வைக்கப்படுகிறது. இதனை யாரும் எக்காலத்திலும் மறுக்க முடியாது.
ஆனால், தாமதமாகக் கிடைக்கும் நீதி, மறுக்கப்பட்டதாகவே கருதப்படும் என்ற ஆணித்தரமான வாதத்தை பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் முன்வைக்கலாம்.
இதற்குக் காரணம், 2012 டிசம்பர் மாதம் 16ஆம் திகதி புது டில்லியில், ஓடும் பஸ்ஸில் நிர்பயா என்ற பெண்ணுக்கு நடந்த கொடூரமாகும். பஸ்ஸில் பயணம் செய்த ஒரு குழுவால் பஸ்ஸிற்குள்ளேயே வைத்து அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பஸ்ஸிலிருந்து தூக்கி வெளியே வீசப்பட்டார்.
அதன் பின் சிகிச்சைக்காக சிங்கப்பூரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிர்பயா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த வழக்கில், வினய் குமார், முகேஷ், பவன், அக் ஷய் ஆகிய நான்கு பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.இச்சம்பவம் உலகத்தையே உலுக்கியது. ஆனால், அதில் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டவர்கள் இன்னும் சிறையில் தான் உள்ளனர்.
அவர்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டாலும் அது இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இது நிர்பயாவின் பெற்றோருக்கு எந்த வகையில் மன வலியை ஏற்படுத்தும் என்பது அனைத்து பெற்றோராலும் உணர முடியும்.


அதை நிர்பயாவின் தாயார் இச்சம்பவத்தில் வெளிப்படுத்தியுள்ளார். அதாவது பிரியங்காவின் இந்த நிலைமைக்கு காரணமான நான்கு பேரை பொலிஸார் சுட்டுக்கொன்றமையை அவர் வரவேற்றுள்ளார். இது குறித்து கருத்துத்தெரிவித்துள்ள நிர்பயாவின் தாயாரான ஆஷா தேவி, பிரியங்கா சம்பவத்தில் நான்கு குற்றவாளிகளையும், பொலிஸார் எண்கவுண்டர் செய்துவிட்டனர் என்ற தகவல் அறிந்தவுடன் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன், பொலிஸார் தங்கள் கடமையை சிறப்பாக செய்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.


அதே நிலைதான், 2010, ஒக்டோபர் 29 ஆம் திகதி கோவை மாவட்டத்தில் ஒரு சிறுமியும், சிறுவனும் கடத்திச் செல்லப்பட்டு, சிறுமி பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகி, இருவரும் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளி ஒருவன் எண்கவுண்டர் செய்யப்பட, மற்றொரு குற்றவாளிக்கு இன்னும் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படவில்லை.
இதேவேளை இச்சம்பவம் குறித்து பிரியங்கா ரெட்டியின் பெற்றோரும் தமது மன ஆறுதலை வெளியிட்டுள்ளனர். இது குறித்து பிரியங்காவின் தந்தை அளித்துள்ள பேட்டியில், என் மகள் உயிரிழந்து பத்து நாட்கள் ஆகின்றன.
எண்கவுண்டர் சம்பவத்துக்காக பொலிஸாருக்கும், அரசாங்கத்துக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். தற்போது என் மகளின் ஆன்மா நிச்சயம் அமைதி அடைந்திருக்கும் எனக் கூறியுள்ளார்.

மக்கள் வரவேற்பு
இந்நிலையில் பெண் மருத்துவரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, கொன்று, உடலை எரித்த சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட நால்வரும் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை மக்கள் எப்படி பார்க்கிறார்கள் என்று பார்த்தால் குற்றம்சாட்டப்பட்டவர்களை சுட்டுக் கொன்ற இடத்தில், பொதுமக்கள் - மலர்களைத் தூவி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
மேலும், தெலுங்கானாவின் சில பகுதிகளில் மக்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடுகிறார்கள். பொலிஸாருக்கு இனிப்பு வழங்கியும், பெண்கள் ஒருவருக்கொருவர் இனிப்புகளை ஊட்டியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.


நரகாசுரனை வதம் செய்த நாளையே நாம் தீபாவளிப் பண்டிகையாகக் கொண்டாடுகிறோம் என்றால், மண்ணில் வாழ துளியும் அருகதையற்ற இந்த குற்றவாளிகளை பொலிஸார் வேறு வழியில்லாமல், தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டி சுட்டுக் கொன்றுள்ள இந்த நாளையும் நாம் கொண்டாடலாம் தானே? என்பது மக்களின் விளக்கமாக இருக்கிறது.


பத்தே நாட்களில் வழக்கைமுடித்த பொலிஸார்


தெலுங்கானாவில் பாலியல் கொடூர சம்பவம் நடந்து பத்தே நாட்களில் வழக்கையே முடித்துவிட்டனர் பொலிஸார். இனி அவர்கள் சில சட்ட விவகாரங்களை சந்திக்க நேரிடும் என்றாலும், மக்கள் விரும்பும் ஒரு தீர்வை அவர்கள் அளித்துள்ளனர் என்றே சொல்லலாம்.
சம்பவம் திகதி வாரியாக
நவம்பர் 27: தெலுங்கானாவில் 26 வயது கால்நடை பெண் மருத்துவர், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பும் வழியில் மாயம்.
நவம்பர் 28: மாயமான பெண் மருத்துவரின் உடல் எரிந்த நிலையில், ஷத்நகர் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.
நவம்பர் 29: இந்த சம்பவத்தில் லொறி ஓட்டுநர் உட்பட 20 வயது முதல் 24 வயதுடைய நான்கு பேர் கைது செய்யப்படுகிறார்கள். இவர்கள் திட்டமிட்டு, அப்பெண்ணை கடத்திச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
நவம்பர் 30: தேசிய அளவில் இந்த சம்பவம் கவனத்தை பெற்றது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்படுகிறார்கள்.
டிசம்பர் 2 : நாடாளுமன்றத்தில் இந்த சம்பவம் எதிரொலிக்கிறது.
டிசம்பர் 4 : இந்த வழக்கை விரைவு நீதிமன்றத்தில் விசாரித்து, குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை வழங்க தெலுங்கானா அரசு உத்தரவிடுகிறது.


டிசம்பர் 6 : குற்றம் நடந்தது எப்படி என பொலிஸாருக்கு விளக்கமளிக்க சம்பவ இடத்துக்கு குற்றவாளிகளை பொலிஸார் அழைத்துச் சென்றனர். அவர்கள் பொலிஸாரை தாக்கி விட்டு தப்பியோட முயலும் போது நால்வரும் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள்.


இதன் மூலம் தங்களது இச்சையைத் தீர்க்க, ஒரு பெண்ணை கந்தையைப் போல கசக்கி எரிந்ததோடு அல்லாமல் உயிரோடு எரித்த குற்றவாளிகளுக்கு மக்கள் விரும்பும் ஒரு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இப்படி தண்டனை தாமதமாகும் ஒவ்வொரு நொடியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக மனவலியை ஏற்படுத்தும் என்பதுதான் இங்கே உற்று நோக்க வேண்டிய விஷயமாக இருக்கிறது.


எல்லோருக்கும் இத்தீர்ப்பு வழங்கப்படுமா?


ஐதராபாத்தில் பாலியல் வன்முறையில் ஈடுபட்டு கொலை செய்த குற்றவாளிகள் சுட்டுக்கொல்லப்பட்டது போன்று எல்லோருக்கும் அதாவது அவர்கள் பணக்காரர்களாக இருந்தாலும் இவ்வாறு கொல்லப்படுவார்களா என்று பட்மின்டன் வீராங்கனை ஜூவாலா குட்டா கேள்வி எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்த சம்பவத்தை வரவேற்றுள்ள அவர் இது குறித்து தனது டுவிட் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.


"எதிர்காலத்தில் இதுபோன்ற பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுபவர்களைத் தடுத்து நிறுத்துமா? இன்னொரு மிக முக்கியமான கேள்வி, எல்லா பாலியல் பலாத்கார குற்றவாளிகளும் இதேபோல் நடத்தப்படுவார்களா? அவர்களின் சமூக நிலையை பொருட்படுத்தாமல் செய்யப்படுமா?" என்று கேட்டுள்ளார். அதாவது, அரசியல்வாதி, பணக்கார வீட்டுப் பிள்ளைகளாக இருந்தாலும் இவ்வாறு அவர்களுக்கு தண்டனை வழங்கப்படுமா ? என்று கேட்டுள்ளார்.


எதிர்க்கிறோம்


ஐதராபாத் சம்பவத்தில் அவர்கள் செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. ஆனால், விசாரணை முடிவதற்கு முன்பாகவே, அதிகாலை நேரத்தில் சம்பவ இடத்துக்கு அழைத்துச் சென்று சுட்டுக்கொல்லப்பட்டதை நாம் எதிர்க்கிறோம் என மேனகா காந்தி உள்ளிட்டவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சமூக ஊடக போராளிகள் கோரிக்கையை ஏற்று சுற்றி வளைப்பு செய்து சுட்டுக்கொல்வதாக இருந்தால் குற்றம் செய்யாதவர்களைக் கூட இதுபோன்று சம்பவங்களில் தொடர்புபடுத்தி எளிதாக கொல்ல முடியுமே என்று சிலர் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.


மாயாவதியின் அறிவிப்பு


இதேவேளை இந்த நான்கு பேரும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை வரவேற்றுள்ள உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி தெலுங்கானாவைப் பார்த்து உத்தர பிரதேச பொலிஸார் கற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரான மாயாவதி கூறுகையில், "தெலுங்கானா பொலிஸார் மிகச்சிறந்த செயலை செய்துள்ளனர். உ.பி பொலிஸார் அவர்களைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். அதேபோல, டெல்லி பொலிஸாரும் மாற வேண்டும். உ.பி-யில் பலாத்கார சம்பவங்கள் தினந்தோறும் நடக்கின்றன.
ஒரு மாவட்டத்தில் மட்டுமல்ல, உ.பி-யில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் இதுதான் நிலைமை. இளம் பெண்கள் முதல் வயதானவர்கள் வரை எந்த பெண்ணுக்குமே பாதுகாப்பு இல்லை. அந்த அளவுக்கு உத்தரப் பிரதேசத்தில் காட்டு இராஜ்ஜியம் நடக்கிறது. நான் முதல்வராக பணியாற்றிய போது தவறு செய்தது என்னுடைய கட்சியை சார்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை எடுத்தேன். அதைப் போல தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


கொல்லப்பட்டவர்களின் பெற்றோர்களின் நிலை இந்நிலையில் சுட்டுக்கொல்லப் பட்டவர்களான ஷிவா மற்றும் நவீன் ஆகியோரின் குடும்பத்தினர், 'எங்களுக்கு இந்த சம்பவம் பற்றி தகவல் எதுவும் தெரியாது. தொலைக் காட்சி செய்தியை பார்த்து தான் தெரிந்து கொண்டோம்.  இப்படி செய்தது சரிதான். ஆனால் ஏன் அனைத்து  பாலியல் வன்கொடுமைக்கும் இப்படி தண்டனை கொடுக்கவில்லை' என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.


மற்றுமொரு குற்றவாளியான முகமது பாஷாவின்  தாய், என் மகன் செத்து விட்டான். ஏன்  இப்படி செய்தார்கள் என்று தெரியவில்லை. என் மகனை கொன்றது தவறு என்று கதறியுள்ளார். குற்றவாளி சின்ன கேசவலு தாயோ,  யார் தவறு செய்தாலும் தவறு தவறு தவறுதான். என் மகனை நீங்களே எரித்து விடுங்கள்' என்று ஆவேசமாகக் கூறியுள்ளார்.


அதிரடி சம்பவத்துக்குப் பொறுப்பாகவிருந்த பொலிஸ் அதிகாரி


குறித்த இந்த அதிரடி செயலில் ஈடுபட்ட  சைபராபாத் பொலிஸ் ஆணையாளர் சஜ்ஜனாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். பொலிஸ் ஆணையாளர் சஜ்ஜனார் ஏற்கெனவே 2008- இல் வாரங்கல் எஸ்.பி.யாக இருந்தபோது இதே போன்றதொரு சம்பவத்துக்கு தலைமை தாங்கியிருக்கின்றார்.  வாராங்கல் பகுதியில் ஸ்வப்னிகா, பிரணிதா என்ற இரண்டு கல்லூரி மாணவிகள் மீது அசிட்  வீசிய 3 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று விசாரிக்கப்பட்டுள்ளனர். அப்போது அவர்கள்  தப்பித்து ஓட முயன்ற போது இவர் தலைமையிலான பொலிஸ் குழுவினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள்.  தற்போது அதேபோல் மீண்டும் ஒரு சம்பவம் இவர் தலைமையில் இடம்பெற்றுள்ளது. அதே சமயம், தெலுங்கானாவில் நடந்திருப்பது சரி என்று வாதிட முடியாவிட்டாலும், சட்டம் மறுத்தாலும் மக்கள் ஏற்றுக் கொள்ளும் ஒரு தீர்வாக இது உள்ளது.