நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு தொடர்பான சிவப்பு எச்சரிக்கை இன்று மாலை வரை நீடிக்கப்பட்டுள்ளது.

பதுளை, கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி, மொனராகலை ஆகிய மாவட்டங்களின் பல பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு தொடர்பிலான சிவப்பு எச்சரிக்கை இன்று மாலை 4.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும், அனர்த்தங்களில் சிக்கியுள்ள மக்களுக்கு நிதியுதவி வழங்கும் நடவடிக்கை துரிதமாக முன்னெடுக்கப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

அத்தோடு, சொத்துச் சேதம் உட்பட வீடுகளுக்கான சேதங்களை மதிப்பீடு செய்து, தேசிய காப்புறுதி நிதியத்தின் ஊடாக அவற்றுக்கான நட்டஈடுகள் வழங்கப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடதக்கது.