கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் முக்கிய மற்றும் அதி முக்கிய பிரமுகர்களின் ஓய்விடம் தொடர்பாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக, சமூக ஊடகங்களில் அறிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தன. 

   இவ் அறிக்கைகளை சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நிராகரித்துள்ளார். 

   மேற்படி சமூக ஊடக அறிக்கை கடந்த 2 ஆம் திகதி பேஸ் புக்கில் வெளியாகியிருந்தது.

   இந்தியாவுக்கு மேற்கொண்ட தமது முதலாவது வெளிநாட்டு விஜயத்தின் பின் நாடு திரும்பிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள முக்கிய மற்றும் அதி முக்கிய பிரமுகர்களின் ஓய்விடத்தை மிகவும் தேவைப்படும் சமயங்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், அவ்வாறின்றி மேற்படி ஓய்விடத்தைத் தான் உள்ளிட்ட வேறு முக்கிய பிரமுகர்களுக்கு கட்டாயமாகத் திறக்க வேண்டிய நிலை ஏற்படின் ஆயிரம் டொலர் கொடுப்பனவை அறவிடுமாறும், விமான நிலைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாக மேற்படி பேஸ்புக் பதிவில் கூறப்பட்டிருந்தது. 

   இதுபற்றி அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, அவ்வாறான தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என்றும், குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தால் அது செய்தியறிக்கை அல்லது ஊடகவியலாளர் மாநாட்டின் மூலம் தெரிவிக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.