வாக்காளர் பதிவில் அக்கறையின்றி இருக்கும் மலையக மக்கள், எதிர்கால நன்மையை கருத்திற்கொண்டேனும் வாக்காளர்களாக தம்மை பதிவு செய்வது அவசியம் என பிரிடோ நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. 

'ஜுன் மாதம் வாக்காளர்களை பதிவு செய்யும் மாதம் என்பதால் ஒவ்வொரு பிரதேசங்களுக்கும் கிராமசேவகர்கள், வாக்காளர் படிவங்களை விநியோகித்து வருகின்றனர்.

எனவே, மலையக மக்கள் அப்படிவங்களை பெற்று தாம் வாக்களார்கள் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்' எனவும் அந்நிறுவனம் கோரியுள்ளது. இது தொடர்பில் அந்நிறுவனத்தின் தலைவர் மைக்கல் ஜோக்கிம் மேலும் கூறியுள்ளதாவது, 'வாக்காளர் பதிவில் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் மலையக மக்கள் பின்தங்கியே உள்ளனர். வாக்காளர் பதிவில் உள்ள முக்கியத்துவத்தை அறியாமல் இருப்பதும் இதற்கு முக்கிய காரணமாகும். அதைவிட, மலையக தலைமைகள் மீதுள்ள வெறுப்பும் ஒரு காரணமாக உள்ளது.

இதனால்; பாதிக்கப்படுவது தாம்தான் என்பதை அவர்கள் உணர மறுக்கின்றனர். 'தம்மை வாக்காளர்களாக பதியாவிட்டால் தேர்தலில் வாக்களிப்பது மட்டுமே பாதிக்கப்படும் என பலர் நினைக்கின்றனர். சுமார் 50 வருடங்களுக்கு முன்னர் நமது மூதாதையர்கள் வாக்களிக்கும் உரிமையை இழந்ததால் கல்வித்துறை, தொழில்வாய்ப்பு, சுகாதாரம், காணி உரிமை என அனைத்தையும் போராடி பெற வேண்டிய நிலமைக்கு மலையக சமூகம் தள்ளப்பட்டது.

எதிர்காலத்தில் மலையகத்தில் பாரிய மாற்றங்கள் ஏற்படவுள்ளதால் அம்மாற்றங்களின் நன்மைகளை பெறவேண்டுமாயின் மக்கள் வாக்களிக்கும் உரிமையை பெற்றிருப்பது அவசியம்' என அவர் வலியுறுத்தினார். 'பெருந்தோட்டத்தில் வாக்காளரின் தொகைக்கு ஏற்பவே அப் பகுதிகளுக்கு அரசாங்கத்தினால் நிதியும் ஒதுக்கப்படுகிறது.

எனவே இந்த அடிப்படையில் ஒவ்வொருவரும் தம்மை வாக்காளர்;களாக பதிவு செய்வது அவசியமாகும். வாக்காளர்களாக பதிவு செய்ய தகுதிப் பெற்ற அனைவரும் அதனை பதிவு செய்வதை உறுதிசெய்வதற்காக பிரிடோ நிறுவனம் அந்தந்த பகுதி கிராம சேவகர் உத்தியோகத்தரின் ஒத்துழைப்போடு நடமாடும் சேவைகளை நடத்தவுள்ளது' என அவர் மேலும் கூறினார்.

(க.கிஷாந்தன்)