(ஆர்.ராம்)

8ஆவது பாராளுமன்றத்தின் நான்காவது அமர்வு எதிர்வரும் ஜனவரி மாதம் 3ஆம் திகதி முற்பகல் 10மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதன்போது பாராளுமன்ற சம்பிரதாயங்களின் பிரகாரம் புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அக்கிராசன உரை ஆற்றவுள்ளார். 

இச்சமயத்தில் எதிர்க்கட்சித்தலைவர் ஆசனத்தில் அமரப்போவது யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

எட்டாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் தற்போது நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையிலேயே ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் எதிர்க்கட்சித்தலைவராக சஜித் பிரேமதாஸ பெயரிடப்பட்டு சபாநாயகர் கருஜயசூரியவிற்கு எழுத்துமூலமான அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இருந்த போதும் பாராளுமன்ற அமர்வொன்று இடம்பெற்று அதில் எதிர்க்கட்சித்தலைவரின் பெயர் அறிவிக்கப்பட்ட பின்னரே அவருக்குரிய ஆசனத்தில் அமருவது முதல் எதிர்க்கட்சித்தலைவருக்கு உத்தியோக பூர்வமான அதிகாரங்கள் கிடைக்கப்பெறும் என்பதே சம்பிரதாயமாகவுள்ளது.

இவ்வாறான நிலையில் எதிர்வரும் 3ஆம் திகதி முற்பகல் 10மணிக்கு நடைபெறும் நான்காவது பாராளுமன்றத்தொடரின் முதல் அமர்வில் ஜனாதிபதி கோத்தபாயவின் கொள்கைப்பிரகடன விடயங்களை முன்வைக்கும் அக்கிராசன உரை மட்டுமே இடம்பெறவுள்ளது. அதனையடுத்து பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படும் என்றும் உள்ளகத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ஜனாதிபதியின் அக்கிராசன உரைக்கு முன்னதாக எதிர்க்கட்சித்தலைவருக்கான அறிவிப்பினை விடுக்கும் சம்பிரதாயமொன்றும் இல்லை. இவ்வறான நிலையில் தான் அக்கிராசன உரையின்போது எதிர்க்கட்சித்தலைவர் ஆசனத்தில் அமரப்போது யார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராலோ அல்லது செயலாளராலோ பாராளுமன்ற எதிர்க்கட்சி ஆசனத்தினை சஜித்பிரேமதாஸவுக்கு வழங்க வேண்டும் என்ற பரிந்துரை செய்யப்பட்டிருக்க வேண்டும்.

இச்செய்தி அச்சுக்கு செல்லும் வரையில் அவ்வாறான பரிந்துரை செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, புதிய கூட்டத்தொடரின் முதலாவது அமர்வினை முற்பகல் ஆரம்பித்து ஜனாதிபதியின் அக்கிராசன உரையயுடன் சபையை ஒத்திவைத்தி வைத்து விட்டு பின்னர் பிற்பகல் ஒருமணிக்கு மீண்டும் சபை அமர்வினை ஆரம்பித்து நடத்துவதோடு அச்சமயத்தில் பிரதமர், சபைமுதல்வர், எதிர்க்கட்சித்தலைவர்,

எதிர்க்கட்சி பிரதம கொறடா ஆகிய பதவிகளுக்கான பெயர்கள் உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளன.

அத்துடன் சபாநாயகர் கருஜயசூரியவை பதிவி விலகச் வேண்டும் என்ற கருத்துக்கள் புதிய அரசாங்கத்திலுள்ள சிலர் மத்தியில் எழுந்துள்ள நலையில் புதிய பாராளமன்ற கூட்டத்தொடரிலும் சபாநாயகராக கருஜயசூரியவே தொடரவுள்ளதாக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி வெற்றிடத்திற்கான பெயர்கள் ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றுக்கான அனுமதியைப் அரசியலமைப்புச் சபையிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.

இதற்காக எதிர்வரும் 12ஆம் திகதி சபாநாயகர் கருஜயசூரிய தலைமையிலான அரசியலமைப்புச்சபை கூடவுள்ளது. பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித்தலைவர் பதவிக்கான உத்தியோக பூர்வ அறிவிப்பு விடுக்கப்படாத நிலையில் அக்கூட்டத்தில் பங்கேற்பதற்கு சஜித் பிரேமதாஸவுக்கு அழைப்பு விடுக்கப்பட வேண்டுமா என்பது பற்றியும் கலந்துரையாடப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் குறித்த அரசியலமைப்புச் சபை கூட்டத்தில் எதிர்க்கட்சித்தலைவராக பங்கேற்கப்போவது யார் என்ற வினாவும் எழுந்துள்ளது.

இதனைவிடவும் அரசியலமைப்புச் சபைக்கு சபாநாயகர், பிரதமர், எதிர்க்கட்சித்தலைவர் நிரந்தர உறுப்பினர்களாக இருக்க, பிரதமர், எதிர்க்கட்சித்தலைவரால் இரு உறுப்பினர்களும் ஜனாதிபதியினால் ஒரு உறுப்பினரும் சிறு,சிறுபான்மை தரப்பினைச் சேர்ந்த ஒரு உறுப்பினரும், சிவில் அமைப்பினைச் சேர்ந்த மூவரும் நியமிக்கப்படுவது சம்பிரதாயமாகும்.

அந்தவகையில் முன்னாள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட உறுப்பினராக மஹிந்த சமரசிங்க உள்ளார். துற்போது புதிய ஜனாதிபதி பதவி ஏற்றுள்ள நிலையில் அந்த உறுப்பினரை மாற்ற வேண்டிய அவசியமில்லை. குhரணம் அரசியலமைப்பு சபைக்கு நியமிக்கப்படும் உறுப்பினர்களின் பதவிக்காலம் மூன்று வருடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.