(ஆர்.யசி)

எதிர்க்கட்சியில் உறுப்பினர்கள் எவரையும் அரசாங்கத்துடன் இணைத்துக்கொள்ளும் நோக்கம் தமக்கு இல்லை எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இணைந்த அரசாங்கத்தை மட்டுமே கொண்டுசெல்ல வேண்டும் என ஜனாதிபதி , அற்றுக் பிரதமர் இருவரும் வலியுறுத்தியுள்ளனர் எனவும் அமைச்சர் சி.பி.ரத்நாயக கூறுகின்றார்.

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதான நபர்கள் சிலரை ஆளும் கட்சியுடன் இணைத்துக்கொண்டு பயணிக்க நடவடிக்கைகள் எடுப்பதாக சில தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென வினவிய போதே அவர் இதனைக் கூறினார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில். 

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலுடன் எமது பலம் என்ன என்பது மீண்டும் உணர்த்தப்பட்டுள்ளது. கடந்த நான்கரை ஆண்டுகால அரசாங்கத்தை மக்கள் நிராகரித்து கோத்தபாய ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் புதிய அரசாங்கம் ஒன்றினை முன்னெடுத்து செல்வதற்கான அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது. 

இந்நிலையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலரை நாம் இணைத்துக்கொண்டு செல்ல முயற்சிகள் எடுப்பதாகவும் பாராளுமன்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மையை உருவாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது. ஆனால் இந்த கருத்தில் உண்மை இல்லை. 

எக்காரணம் கொண்டும் ஐக்கிய தேசிய கட்சியின் எவரையும் எம்முடன் இணைத்துக்கொண்டு அதிகாரங்களை பங்கிட நாம் ஒருபோதும் தாயரில்லை.

இது மக்கள் ஆணையை மீறும் செயலாக அமையும். பொதுத் தேர்தலின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இணைந்த கூட்டணியாக நாம் போட்டியிடுவோம். இதில் வேறு எந்தக் கட்சிகளையும் இணைத்துக்கொண்டு பயணிக்கும் நோக்கம் எமக்கு இல்லை. 

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் தலைமையில் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக  தலைமை தாங்கும் எமது புதிய அரசாங்கத்தில் எமது கட்சியின் உறுப்பினர்கள் மட்டுமே அங்கம் வகிப்பவர்கள். 

கடந்த ஆட்சியின் மிகப்பெரிய ஊழல் வாதிகள், குற்றவாளிகள் உள்ளனர்.

அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக ராஜித சேனாரத்ன போன்றவர்கள் கடந்த காலங்களில் இருந்தே பொய்களை கூறி மக்களை ஏமாற்றும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அவர்களை எம்முடன் மீண்டும் இணைத்துக்கொண்டு பயணிக்க நினைத்தால் எம்மையும் மக்கள் புறக்கணித்து தேர்தலில் தோற்கடித்துவிடுவார்கள். 

ஆகவே எமது தனி அரசாங்கமே அடுத்ததாக ஆட்சி அமைக்கும். இந்த நிலைப்பாட்டில் ஜனாதிபதியும் பிரதமரும் உறுதியாக உள்ளனர் என அவர் தெரிவித்தார்.