இலங்கைத் தமிழர்களின் எதிர்காலம் தற்போது பணயம் வைக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்தச்சந்தர்ப்பத்தில் தமிழ் மக்கள் சமத்துவமாகவும், பாதுகாப்பாகவும் வாழ்வதற்குரிய நடவடிக்கைகளை இந்தியா உடன் எடுக்காது விட்டது எதிர்காலம் இருள்சூழந்ததாகிவிடும் என்று சுட்டிக்காட்டி பிரித்தானிய தமிழர் பேரவை இந்தியப் பிரதமர் மோடிக்கு அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பில் புலம்பெயர் தமிழர்களின் நோக்கு எனும் தலைப்பில் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,

இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்ததும் காலம் தாமதிக்காது அந்நாட்டு அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டதற்கு ஐக்கிய இராச்சியத்தில் வாழும் இலங்கை தமிழர்கள் சார்பாக பிரித்தானிய தமிழர் பேரவை மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றது.

சமத்துவம், நீதி, சமாதானம், மரியாதை போன்றவற்றை உள்ளடக்கிய தமிழ் மக்களின் அபிலாசைகளை மீழ வலியுறுத்தியதோடு நல்லினத்துக்கான வழிமுறையின் அவசியத்தையும் மற்றும் நீடிக்கக் கூடிய அரசியல் தீர்வையும் வலியுறுத்தியதற்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்

வடக்கு ,கிழக்கு ,மற்றும் மலையகப் பகுதிகளில் ஏறத்தாழ 60,000 வீடுகளை கட்டுவது என்ற பாரிய வேலைத் திட்டத்தை முன்னெடுத்ததற்கும் மற்றும் உட்கட்டுமான மேம்படுத்தல், இணைப்புநிலை, திறன் மேம்பாடு ,கல்வி, கலாச்சார பரிமாற்றம் போன்ற அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டதற்கு தங்களது அரசுக்கு நாங்கள் கடன் பட்டிருக்கிறோம்

நாங்கள் 26 மே 2019 திகதியிட்ட கடிதமொன்றை அனுப்பியிருந்தோம். அக்கடிதத்தில் குறிப்பிட்டவாறு இலங்கையில் அமைதி, ஸ்த்திரநிலை, பாதுகாப்பு, செழுமை என்பவற்றை உருவாக்கப்பட வேண்டும்.

அதற்காக, நாட்டின் பல்லின, பன்மொழி மற்றும் பல மதத் தன்மைகளையும் நிபந்தனையின்றி அங்கீகரிக்க வேண்டும், எந்த முன்னுரிமையோ அல்லது பாரபட்சமோ இல்லாமல் நாட்டில் வாழும் அனைத்து மக்களையும், சமூகங்களையும் சமமாக நடத்த வேண்டும், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களை புனரமைக்கவும் மீள் அபிவிருத்தி செய்வதற்குமான முயற்சிகளை உரிய பங்குதாரர்களின் பங்களிப்புடன் முழுமையான முறையில் துரிதகதியில் மேற்கொள்ள வேண்டும், 

பொறுப்புக் கூறல் மற்றும் நீதி கிடைத்தலை கால தாமதமின்றி உறுதிப்படுத்த வேண்டும், உண்மையான நல்லிணக்க முன்னெடுப்புகளை மேற்கொள்ளுதல் வேண்டும், இலங்கையில் தமிழர்களின் அபிலாசைகளை திருப்திப்படுத்தக் கூடிய அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுடன் கூடிய நீண்ட கால அரசியல் தீர்வை அமுல்படுத்தல் வேண்டும்

வரலாற்று ரீதியாக, இலங்கை அரசாங்கம் மேற்கூறிய நடவடிக்கைகள் எதனையும் தீவிரமாக செயல்படுத்தத் தயாராக இல்லை என்பதையே காட்டி வருகின்றது.

இலங்கையில் தமிழர்களுக்கு சமத்துவம், நீதி, சமாதானம், மரியாதை என்பன தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகின்றன. இலங்கையில் தமிழ் அடையாளத்துடன் வாழும் தமிழர்களின் எதிர்காலம் தற்போது பணயம் வைக்கப்பட்டுள்ளது. துரிதமான நடவடிக்கைகள் எடுக்காவிட்டால் அவர்களின் எதிர்காலம் மிகவும் இருள் சூழ்ந்ததாகி விடும்.

ஆதலினால், வரலாற்றின் இந்த தீர்க்கமான தருணத்தில், இலங்கை அரசாங்கத்துடன் உங்கள் ஈடுபாட்டினை விரிவுபடுத்தவும் ஆழப்படுத்தவும் நாங்கள் பணிவுடன் கேட்டுக் கொள்வதோடு மேலும் தாமதமில்லாமல்

நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோருவதோடு, அதற்கான எமது பூரண ஒத்துழைப்பினையும் வழங்க தயாராக உள்ளளோம் என்றுள்ளது.