(எம்.மனோசித்ரா)

269 ஹெக்டயர் நிலப்பரப்பைக் கொண்ட கொழும்பு துறைமுக நகரம் இலங்கையின் வரைபரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. 

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று கொழும்பு துறைமுக நகரத்தை இலங்கையின் வரைபரத்துடன் இணைக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு வானவேடிக்கைகளுடன் கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இந்த முக்கிய நிகழ்வினை முன்னிட்டு நினைவு முத்திரையும் கடித உறையும் வெளியிடப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும். 

தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி வகித்த போது , அதாவது கடந்த 2014 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 17 ஆம் திகதி கொழும்பு துறைமுக நகரத்தை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் சீன ஜனாதிபதி சி ஜின் பிங் தலைமையில் நடைபெற்றது. 

சீனாவின் ' சீன துறைமுக பொறியியல் நிறுவனத்தினால் ( C.H.E.C - China Harbor Engineering Corporation ) ' இந்த வேலைத்திட்டத்துக்காக 1.5 அமெரிக்க டொலர் முதலீடு செய்யப்பட்டுள்ளது. 

இந்த வேலைத்திட்டத்திற்காக கொழும்பு துறைமுகம் மற்றும் காலி முகத்திடல் ஆகியவற்றின் 233 ஹெக்டயர் நிலப்பரப்பு மஹிந்த அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதற்காக முழு முதலீட்டையும் சீன நிறுவனமே மேற்கொண்டிருந்த நிலையில் 20 ஹெக்டயர் நிலப்பரப்பை குத்தகைக்கு கொடுப்பதற்கு அப்போதைய அரசாங்கம் இனக்கம் தெரிவித்திருந்தது. 

எனினும் 2015 ஆம் ஆட்சி மாற்றத்தின் பின்னர் இத் துறைமுக நகர வேலைத்திட்டத்தை தற்காலிகமாக இடை நிறுத்தியதோடு சுற்றுச்சூழல் தர அறிக்கையை முன்வைத்து ஒப்பந்தத்தில் திருத்தங்களை மேற்கொண்டது. அதற்கமை வேலைத்திட்டத்துக்காக ஒதுக்கப்பட்டிருந்த நிலப்பரப்பு 269 ஹெக்டயராக அதிகரிக்கப்பட்டது. அத்தோடு சீன நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கப்படவிருந்த 20 ஹெக்டயர் நிலப்பு 116 ஹெகடயராக அதிகரிக்கப்பட்டு 99 வருட குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. 

கொழும்பு துறைமுக நகர திட்டத்திற்காக 269 ஹெக்டயர் கடற்பரப்பை மண்ணால் நிரப்பு நிலமாக்கும் பணிகள் இவ்வருடம் ஜனவர் மாதம் 16 ஆம் திகதியுடன் நிறைவடைந்திருந்தது. 

இந்நிலப்பில் 178 ஹெக்டயரில் கட்டடங்கள் அமைக்கப்படவுள்ளன. இந்த 178 ஹெக்டயரில் 116 ஹெக்டயர் நிலப்பரப்பு சீன நிறுவனத்துக்கும் எஞ்சியுள்ள 62 ஹெக்டயர் நிலப்பரப்பு இலங்கை அரசாங்கத்துக்கும் கட்டுமான பணிகளுக்காக குத்தகைக்கு வழங்க இனக்கம் காணப்பட்டுள்ளது. 

இவ்வாறு இலங்கையின் நிலப்பரப்புடன் 269 ஹெக்டயர் நிலப்பரப்பு இணைக்கப்பட்டமைக்கான விஷேட நிகழ்வே பிரதமர் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வின் பின்னர் கொழும்புதுறைமுக நகர வளாகத்தில் வான வேடிக்கைகளும் இடம்பெற்றன.