இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில்  பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகளை சுமத்திய நிலையில் உயிருடன் எரிக்கப்பட்ட பெண் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

  உத்தரபிரதேசத்தின் உனாவோ மாவட்டத்தை சேர்ந்த பெண்ணே உயிருடன் தீ மூட்டி எரிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

 பாலியல் வன்முறை குறித்த விசாரணைக்காக நீதிமன்றம் சென்றுகொண்டிருந்தவேளை அவரது கிராமத்தை சேர்ந்த ஐவர் அவரை உயிருடன் எரித்து கொலை செய்ய முயன்றனர்,பெருமளவு எரிகாயங்களுடன் அவர்  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் பாலியல்வன்முறை குற்றச்சாட்டிற்கு உள்ளானவர் உட்பட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறிப்பிட்ட பெண் கடந்தமார்ச் மாதம் தனது கிராமத்தை சேர்ந்தவர்கள் மூவர் தன்னை பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய பின்னர் வீடியோ எடுத்ததாக முறைப்பாடு செய்திருந்தார்.

இதனை தொடர்ந்து குற்றச்சாட்டுகளிற்கு உள்ளான மூவரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுலை செய்யப்பட்டார்.

காவல்துறையினரிடம் சிக்காமல் தப்பியோடி நபரே இன்று பாதிக்கப்பட்ட பெண்ணை உயிருடன் எரிக்க முயன்ற குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவரின்  உடல் 95 வீதம் எரிகாயங்களால் பாதிக்கப்பட்டது,அவரால் சுவாசிக்க முடியாத நிலையேற்பட்டது,நச்சுப்புகைகளால் அவரது சுவாசக்குழாய் நிரம்பிவிட்டது என வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

உயிருடன் தீமூட்டப்பட்ட பெண் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டவேளை சுயநினைவுடன் காணப்பட்டார் என்பதுடன் தனக்கு என்ன நடந்தது என்பதை தெரிவித்திருந்தார்.