(எம்.மனோசித்ரா, கரைச்சி, வெல்லாவெளி நிருபர்கள்)
நாட்டில் இரு வாரங்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 இலட்சத்து 35 ஆயிரத்து 906 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை இவ்வாறான சீரற்ற காலநிலை மேலும் சில தினங்களுக்கு நீடிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சீரற்ற காலநிலை தொடரும் அதே வேளை, வட மாகாணத்திலும் அநுராதபுரம் மாவட்டத்திலும் மழை குறையக் கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
கிழக்கு , ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் மழை பெய்யக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, பொலன்னறுவை , நுரரெலியா, பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் 100 மில்லி மீற்றரை விட அதிக மழை வீழ்ச்சி பதிவாகும் என்று கூறப்பட்டுள்ளது. காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை , மாத்தளை மற்றும் கண்டி மாவட்டங்களில் 75 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் தொடக்கம் காங்கேசன்துறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்புக்கு ஊடாக அம்பாந்தோட்டை வரையான கடற்பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.
ஏனைய கடற்பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். திருகோணமலை தொடக்கம் மட்டக்களப்பு ஊடாக அம்பாந்தோட்டை வரையான கடற் பிரதேசங்களிலும் மழை பெய்யும்.
இவ்வாறு மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 70 - 80 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கும்.
பாதிப்புக்கள்
நிலவும் சீரற்ற காலநிலையால் மணிசரிவு , வெள்ளம், மரம் முறிந்து வீழ்ந்தமை, மின்னல் தாக்கம் போன்ற அனர்த்தங்களால் 20 மாவட்டங்கள் அதிக பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளன.
பதுளை, மொனராகலை, மட்டக்களப்பு , அம்பாறை, திருகோணமலை, மன்னார், முல்லைதீவு, கிளிநொச்சி, வவுனியா , கேகாலை, இரத்தினபுரி, கண்டி, நுவரெலியா, மாத்தளை, அநுராதபுரம், பொலன்னறுவை, புத்தளம், குருணாகல், அம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன.
குறித்த மாவட்டங்களைச் சேர்ந்த 13 ஆயிரத்து 542 குடும்பங்களைச் சேர்ந்த 45 ஆயிரத்து 858 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு சில அனத்தங்களுக்கு முகங்கொடுத்து 8 பேர் காயமடைந்துள்ளனர்.
வெள்ளம், மண்சரிவு போன்றவற்றினால் 20 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் 943 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. இவ்வாறு பாதிக்கப்பட்ட 2609 குடும்பங்களைச் சேர்ந்த 8553 பேர் 90 தற்காலிக நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வடக்கு கிழக்கில் பாதிப்பு
கிளிநொச்சியில் நேற்றுமுன்தினம் இரவு முதல் நேற்றுக்காலை வரை பெய்த கனமழைக் காரணமாக மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தினால் மூழ்க்கியுள்ளன.
வெள்ளத்தினால் மூழ்கியுள்ள பகுதிகளில் சிக்கியிருந்த பொது மக்களை நேற்றுமுன்தினம் இரவு முதல் படையினர் மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றிருந்தனர். அத்தோடு க.பொ.த சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் சில பரீட்சை நிலையங்களுக்கு செல்ல முடியாத நிலை காணப்பட்டது. அவ்வாறான இடங்களிலும் படையினர் படகுகள் மூலம் மாணவர்களை பரீட்சை மண்டபங்களுக்கு கொண்டு சென்றுள்ளனர்.
மேலும் கன மழைகாரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் 6841குடும்பங்களை சேர்ந்த 22262 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் இதில் 920 குடும்பங்கள் 21 நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளன என்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
இதில் கரைச்சி பிரதேசத்தில் 182 குடும்பங்களும், பளையில் ஒரு குடும்பமும், கண்டாவளையில் 714 குடும்பங்களும், பூநகரியில் 23 குடும்பங்களும் நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளன.
அத்தோடு கரைச்சி பிரதேசத்தில் 3147 குடும்பங்களும், பளையில் 252 குமும்பங்களும், கண்டாவளையில் 3317 குடும்பங்களும், பூநகரியில் 125 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன எனவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்திலும் அடை மழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் பெருமளவானோர் இடம்பெயர்ந்து உறவினர்களின் வீடுகளிலும் நலன்புரி நிலையங்களிலும் தங்கியுள்ளனர்.
இதில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்புக்கு உட்பட்ட பகுதியில் 8899 குடும்பங்களை சேர்ந்த 28831பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 236 குடும்பங்களை சேர்ந்த 797 பேர் நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
சில இடங்களில் பாலங்கள் உடைப்பெடுத்தமையினால் போக்குவரத்துக்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
அம்பாறையில்
அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் அடைமழை காரணமாக இதே வேளை, அம்பாறை மாவட்டத்தில் 39849 குடும்பங்களை சேர்ந்த 132573 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கல்லோயா குடியேற்ற கிராமங்களையும், கல்முனை நகரையும் இணைக்கும் கிட்டங்கி வீதியின் மேலாக வெள்ளம் பாய்வதனால் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் குறித்த வீதியூடாக போக்குவரத்து மேற்கொள்வதில் பிரதேச மக்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர் .
தினமும் விவசாயிகள், அலுவலக உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் நாளாந்தம் பயணிக்கும் இவ்வீதியில் வெள்ளம் பாய்ந்து வருவதால் கல்லோயா குடியேற்ற கிராமங்களிலுள்ள சவளக்கடை அன்னமலை, சொறிக்கல்முனை, 4ஆம், 5ஆம், 6ஆம், 12ஆம் கொளனிகள், நாவிதன்வெளி போன்ற பிரதேச மக்கள் பல்வேறு கஸ்டங்களுக்கு மத்தியில் தமது அன்றாட பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர் இவ் வீதிக்கான நிரந்தர பாலம் அமைக்குமாறு நீண்டகாலமாக பிரதேச மக்களினால் விடுக்கப்படும் கோரிக்கையை இதுவரைக்கும் எந்த அரசாங்கத்தினால் நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பில்
தொடர்ச்சியாக பெய்து வருகின்ற அடைமழையினால் மட்டக்களப்பு மாவட்டத்திலே இதுவரை 9953 குடும்பங்களைச் சேர்ந்த 33288 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். நேற்று முதல் 8 இடைத்தங்கல் முகாம்களில் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.
நேற்று முதல் 8 முகாம்களில் தங்கவைக்கப்பட்ட மக்கள் கடந்த 24 மணித்தியாளங்களில் கிடைத்த அதிகமான மழைவிழ்ச்சி காரணமாக 18 முகாம்களில் அமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டு அங்கு மக்கள் அமர்த்தப்பட்டு அவர்களுக்கான அடிப்படை வசதிகள்,சமைத்த உணவுகள் ,குடிநீர் என்பனவும் வழங்கப்பட்டு வருகின்றது.
கிரான் பாலத்தை ஊடறுத்து வெள்ள நீர் பாய்வதனால் அங்கு மக்களின் போக்குவரத்துக்காக 5 இயந்திரப்படகுகள் சேவையில் ஈடுபட்டுவருவது குறிப்பிடத்தக்கது அப்பகுதியிலிருந்து கல்வி பயிலும் பொது சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றும் 2 மாணவர்கள் இவ் இயந்திரப்படகுக்கூடாகவே தங்களின் பயணத்தை மேற்கொண்டு பரீட்சை எழுதிவருவது குறிப்பிடத்தக்கது .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM