கிளிநொச்சி இரணைமடு குளத்தின் நீர்மட்டம் வெகுவாக உயர்வடைந்துள்ள நிலையில் 12 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக வருகை தரும் நீரினால் இரணைமடு குளத்தின் நீர்மட்டம் இன்று காலை வாசிப்பின் பிரகாரம் 35.6 அங்குலமாக காணப்படுகின்றது.


தொடர்ந்தும் நீர் வருகை தருகின்றமையால் மேலும் வான் கதவுகள் உயர்த்தப்படும் சாத்தியம் காணப்படுகின்றது. நான்கு வான் கதவுகள் 01'00" அடியாகவும், இரண்டு வான் கதவுகள்  01'-06" அடியாகவும், இரண்டு வான் கதவுகள்  02'-00" அடியாகவும், இரண்டு வான் கதவுகள்  02'-06" அடியாகவும், இரண்டு வான் கதவுகள் 00'06" அடியாகவும் திறந்து

விடப்பட்டுள்ளன. இரணைமடு குளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் அப்பகுதி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பொலிஸாரும் படையினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

வான் பாயும் பகுதியில் மக்கள் நெருக்கமாக சென்று பார்வையிடுவது தடை செய்யப்பட்டுள்ளது. அப்பகுதியில் விபத்துக்கள் இடம்பெறாமல் தடுக்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பொலிஸாருடன் இணைந்து படையினரும் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இரணைமடு குளத்திற்கு வருகை தரும் அதிக நீரினை வெளியேற்றுவது தொடர்பிலும், தற்போதைய காலநிலை மற்றும் பாதிப்புகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று காலை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் முக்கிய விடயங்களைப் பேசப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது,இதேவேளை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்தும் பாதுகாப்பு அமைவிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களிற்கான உணவு மற்றும் சுகாதாரம் உள்ளிட்டவற்றை மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.