தமிழகத்தில் விரிவாக்க பணிகளுக்காக வெட்டப்பட இருந்த 120 வயது ஆலமரம், தனியார் அமைப்பின் முயற்சியால் வேருடன் இடமாற்றம் செய்யப்பட்டது.

தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த ஜனப்பசத்திரம் கூட்டுசாலை அருகே, சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் வீதி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், விரிவாக்க பணிகளுக்காக அங்கிருந்த 120 ஆண்டு பழமையான ஆலமரத்தை வெட்ட அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்கு, அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அந்த ஆலமரத்தை வேருடன் பெயர்த்து, வேறு இடத்தில் நடுவதற்கு முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து அங்கு, கோவையைச் சேர்ந்த 'ஓசை' சுற்றுச்சூழல் அமைப்பினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள், ஆலமரத்தின் விழுதுகள் மற்றும் கிளைகளை வெட்டினர். பின்னர், மரத்தை சுற்றி 6 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி, வேருடன் மரத்தை கீழே சாய்த்தனர்.

தொடர்ந்து, கிளைகள் மற்றும் விழுதுகள் இல்லாத மரத்தை இரண்டு கிரேன்களின் உதவியுடன் 1000 அடி தொலைவிலுள்ள கொசஸ்தலை ஆற்றின் கரையோரத்திற்கு கொண்டு சென்று, மாற்று இடத்தில் நட்டனர்.

இதுகுறித்து, 'ஓசை' நிர்வாகி கே.சையது தெரிவித்ததாவது,

“இதுவரை 200க்கும் அதிகமான மரங்களை வேறு இடத்தில் நட்டு, அவைகளுக்கு மறுவாழ்வு வழங்கியுள்ளோம். மரங்கள்தான் நம் மூச்சுக் காற்று அதை பாதுகாக்க வேண்டியது நம் அனைவரின் கடமை.

ஒரு மரத்தை வளர்க்க பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். இதுபோன்ற மரங்கள் என்றால், நுாறு ஆண்டுகள் ஆகும். மரங்களை பாதுகாக்க வேண்டும். எந்த பகுதியிலும் மரங்களை மாற்று இடத்தில் வைக்க சேவை மனப்பான்மையுடன் உதவ நாங்கள் தயாராக உள்ளோம். எங்களை, 70103 50066 மற்றும் 84288 59911 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்” என்று தெரிவித்தார்.