விராட் கோலியின் பொறுப்பான ஆட்டத்தினால் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு - 20 போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது.

மேற்கிந்தியத்தீவுகள் மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 தொடரின் முதலாவது போட்டி இன்றைய தினம் ஹைதராபாத்திலுள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் இன்றிரவு 7.00 மணிக்கு ஆரம்பமானது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய மேற்கிந்தியத்தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்களை இழந்து 207 ஓட்டங்களை குவித்தது.

208 என்ற கடினமான இலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இந்திய அணி 18.4 ஓவரில் 4 விக்கெட்டுக்களை இழந்து மேற்கிந்தியத்தீவுகள் அணி நிர்ணயித்த வெற்றியிலக்கை அடைந்தது.

ரோகித் சர்மா 8 ஓட்டத்துடனும், ராகுல் 40 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 5 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 62 ஓட்டத்துடனும், ரிஷாத் பந்த் 18 ஓட்டத்துடனும், ஸ்ரேயஸ் ஐயர் 4 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்து வெளியேற, அணியின் வெற்றிக்காக பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி மொத்தமாக 50 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 6 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 94 ஓட்டத்துடனும், சிவம் டூப் எதுவித ஓட்டமின்றியும் ஆட்டமிழக்காதுள்ளனர்.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு -20 தொடரில் இந்திய அணி 1:0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.