கிளிநொச்சியில் நேற்றிரவு முதல் இன்று  காலை வரை பெய்த கனமழைக் காரணமாக மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தில் 6841 குடும்பங்களை சேர்ந்த 22262 பேர் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.

வெள்ளத்தினால் மூழ்கியுள்ள பகுதிகளில் சிக்கியிருந்த பொது  மக்களை நேற்றிரவு முதல் படையினர் மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றிருந்தனர்.

அத்தோடு க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் சில பரீட்சை நிலையங்களுக்கு   செல்ல முடியாத நிலை காணப்பட்டது. அவ்வாறான இடங்களிலும் படையினர் படகுகள் மூலம் மாணவர்களை பரீட்சை மண்டபங்களுக்கு கொண்டு சென்றுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய நான்கு பிரதேச செயலக பிரிவுகளிலும் மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்படுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதிக்கப்பட்டவர்களில் 21 பாதுகாப்பு அமைவிடங்களில் 920 குடும்பங்களை சேர்ந்த 20906 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய புள்ளி விபரம் தெரிவிக்கின்றன. கிளிநொச்சி மாவட்டத்தில் 37 வீடுகள் பகுதியளவில் சேதமாகியுள்ளதாகவும் அப்புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது.

கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் 3147 குடும்பங்களை சேர்ந்த 10220 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.

இவர்களில் 6 பாதுகாப்பான அமைவிடங்களில் 182 குடும்பங்களை சேர்ந்த 628 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 27 வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அப்புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.

கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் 3317 குடும்பங்களை சேர்ந்த 10967 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 பாதுகாப்பான அமைவிடங்களில் 714 குடும்பங்களை சேர்ந்த 2209 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இப்பிரதேசத்தில் 8 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளது.

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் 252 குடும்பங்களை சேர்ந்த 731 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1 பாதுகாப்பான அமைவிடத்தில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பூநகரி பிரதேச செயலர் பிரிவில் 125 குடும்பங்களை சேர்ந்த 344 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு பாதுகாப்பான அமைவிடத்தில் 23 குடும்பங்களை சேர்ந்த 64 புர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 02 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அப்புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது.

முகாம்களில் தங்கியுள்ள மக்களிற்கான சுகாதாரம் மற்றும் உணவு உள்ளிட்டவை மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையத்தினால் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.