தனது அதிரடியான ஆட்டம் மூலம் இந்தியாவுக்கு எதிரான முதலாவது இருபதுக்கு - 20 கிரக்கெட் போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணி 207 ஓட்டங்களை குவித்துள்ளது.

மேற்கிந்தியத்தீவுகள் மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 தொடரின் முதலாவது போட்டி இன்றைய தினம் ஹைதராபாத்திலுள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் இன்றிரவு 7.00 மணிக்கு ஆரம்பமானது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய மேற்கிந்தியத்தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத்தீவுகள் அணி 13 ஓவருக்கு முதல் விக்கெட்டை பறிகொடுத்தாலும், 2 ஆவது விக்கெட்டுக்காக கைகோர்த்த இவன் லிவிஸ் மற்றும் பிராண்டன் கிங் ஆகியோர் நிலைத்து நின்றாடி அணியின் ஓட்ட எண்ணிக்கையை அதிகரித்தனர்.

எனினும் 5.4 ஆவது ஓவரில் இவன் லிவிஸ் மொத்தமாக 17 பந்துகளை எதிர்கொண்டு 4 ஆறு ஓட்டம், 3 நான்கு ஓட்டம் அடங்கலாக 40 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார் (64-2). 

இதன் பின்னர் களமிறங்கிய சிம்ரன் ஹெட்மெயர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த மேற்கிந்தியத்தீவுகள் அணி 10 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட் இழப்புக்கு 101 ஓட்டங்களை குவித்தது.

இந் நிலையில் 10.1 ஆவது ஓவரில் பிராண்டன் கிங் 31 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து 4 ஆவது விக்கெட்டுக்காக சிம்ரன் ஹெட்மெயர் மற்றும் பொல்லார்ட் ஜோடி சேர்ந்து இந்திய அணியினரின் பந்து வீச்சுக்களை துவம்சம் செய்ய, மேற்கிந்தியத்தீவுகள் அணி 16 ஓவர் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 155 ஓட்டங்களையும் 17 ஓவர் நிறைவில் 172 ஓட்டங்களையும் குவித்தது.

இதன் பின்னர் 17.1 ஆவது ஓவரில் சிம்ரன் ஹெட்மெயர் மொத்தமாக 41 பந்துகளை எதிர்கொண்டு, 4 சிக்ஸர்கள், 2 நான்கு ஓட்டம் அடங்கலாக 56 ஓட்டத்துடன் சஹாலின் பந்து வீச்சில் ஆட்டமிழக்க, பொல்லார்ட் அதே ஓவரின் 3 ஆவது பந்தில் மொத்தமாக 19 பந்துகளை எதிர்கொண்டு 4 சிக்ஸர்கள் ஒரு நான்கு ஓட்டம் அடங்கலாக 37 ஓட்டத்துடன் போல்ட் ஆனார் (173-5).

இறுதியாக மேற்கிந்தியத்தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 207 ஓட்டங்களை குவித்தது. ஹோல்டர் 24 ஓட்டத்துடனும், தேனேஷ் ராம்தின் 11 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் சாஹல் 2 விக்கெட்டுக்களையும், வோசிங்டன் சுந்தர், தீபக் சாஹர் மற்றும் ஜடோஜா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.