மட்டக்களப்பு நகரையும் மண்முனை மேற்கு  படுவான்கரை பிரதேசத்தையும் இணைக்கும் வலையிறவுப் பாலம் மழை வௌ்ளத்தால்  மூழ்கியுள்ளது.

இதன்காரணமாக இப் பாதையால் போக்குவரத்து செய்யும் மக்கள்  பலர் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.

இதனால் மட்டக்களப்பிலிருந்து வவுணதீவு பிரதேசத்தை நோக்கியும் வவுணதீவு பிரதேசத்திலிருந்து மட்டக்களப்பு நகர் நோக்கியும் சென்ற மக்கள் இவ் அசௌகரியத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

தற்போது உன்னிச்சை குளத்தில் தண்ணீர் அதிகம் தேங்குவதால் குளத்தின் வான் கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளது.

இதேவேளை மண்முனை மேற்கு பிரதேசத்திலுள்ள சாமந்தியாறு, கண்டியனாறு, மங்கிகட்டு , முள்ளாமுனை, போன்ற இடங்களிலுள்ள வீதிகளை ஊடறுத்து வௌ்ள நீர் பாய்ந்து செல்கின்றது.

இவ் வீதியால் சென்ற மோட்டார் சைக்கிள், முச்சக்கரவண்டி போன்ற வாகனங்கள் சிலவற்றுக்கு தண்ணீர்  உட்சென்றதன் காரணமாக  பழுதடைந்த நிலையில் காணக்கூடியதாகவுள்ளது.

தற்போது பெய்யும்  மழை  தொடர்ந்து பெய்யுமானால் இவ் வீதிகளால் பரவிச் செல்லும் நீர்மட்டம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.