நோர்வூட் விளையாட்டு மைதானத்தில் முன்னாள் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு அமைச்சினால் கொள்வனவு செய்யப்பட்டு வைக்கப்பட்டிருக்கும் கூரைத் தகடுகள் உரியப் பயனாளர்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்று நோர்வூட் பிரதேசசபை உறுப்பினர் எம்.ராமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில்,

மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சின் முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரத்தின் பரிந்துரைக்கு அமைவாக முதற்கட்டமாக சுமார் மூன்று கோடி ரூபா பெறுமதியான 4500 கூரைத்தகடுகள் தற்காலிக கூடாரங்களில் (temporary shed) வசிப்பவர்கள் மற்றும் பழைமையான லயன்களில் மோசமான கூரைத்தகடுகள் கொண்ட தெரிவு செய்யப்பட்ட 1500 பயனாளர்களுக்கு வழங்குவதற்காகவே மேற்படி கூரைத்தகடுகள் அமைச்சினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.  

இதில் சுமார் 1100 கூரைத்தகடுகள் நாகசேனை டீமலை தோட்ட மக்களின் லயன் கூரைகளைத் திருத்தி அமைக்க என வழங்குவதற்கு அமைச்சின் முன்னாள் செயலாளர் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது அதில் சுமார் 500 கூரைத் தகடுகள் மட்டும்  ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் தோட்ட நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டுள்ளதோடு மிகுதி 600 கூரைத் தகடுகள் இன்னும் அந்த மக்களுக்கு வழங்கப்பட வில்லை தேர்தலின் பின்னர் அந்த கூரைத் தகடுகள் ஏற்றிச் செல்ல வந்த லொறியைத் தடுத்து நிறுத்தி கூரை தகடுகளை ஏற்றிச் செல்ல விடாது தடுத்தனர்.

கொள்வனவு செய்யப்பட்ட அனைத்து கூரைத்தகடுகளையும் தேர்தலின் பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் முன்னாள் அமைச்சரினால் பகிர்ந்தளிக்க முடியாத நிலைமை ஏற்பட்டது.

புதிதாக மேற்படி அமைச்சைத் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சாகப் பொறுப்பெடுத்துள்ள தரப்பினர்,  குறித்த கூரைத்தகடுகளை உரியப் பயனாளர்களுக்குப் பகிர்ந்தளிக்காது வேறு தரப்பினருக்குப் பகிர்ந்தளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகப் பாதிக்கப்பட்டவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

ஏற்கெனவே தெரிவுசெய்யப்பட்ட பயனாளர்கள் பட்டியல், பிரதேச செயலாளர், தோட்ட அதிகாரி, கிராம சேவகர் ஆகியோரினால் முன்பே உறுதிப்படுத்தப்பட்டு தெரிவு செய்யப்பட்டது.  குறித்த  பெயர் பட்டியல் மனிதவள அபிவிருத்தி தாபனத்திலும் அமைச்சிலும் இருப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே இவ்விடயத்தைக் கருத்தில் கொண்டு பாதிக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியலுக்குக் கூரைத் தகடுகள் கொள்வனவு செய்யப்பட்டு இருப்பதால் அந்த கூரைத் தகடுகளை அவர்களுக்கு வழங்குவதற்கு புதிய அமைச்சின் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோர்வூட்  பிரதேச சபை உறுப்பினர் ராமச்சந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.