இந்தியா மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகளை கொண்ட இருபதுக்கு - 20 தொடரின் முதல் போட்டி இன்றைய தினம் இரவு 7.00 மணிக்கு ஹைதராபாத், ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

பங்களாதேஷுடனான இருபதுக்கு - 20 தொடரின் பின்னர் ஓய்வு எடுத்துக் கொண்ட இந்திய அணித் தலைவர் விராட் கோலி மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். இதனால் துடுப்பாட்டம் வலுப்பெறும். ஷிகர் தவன் காயம் காரணமாக இந்தத் தொடரில் பங்கேற்காததால் ரோஹித் சர்மாவுடன் கே.எல்.ராகுல் ஆரம்ப வீரராக களமிறங்க உள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகள் அணியானது தனது சொந்த மண்ணில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற இருபதுக்கு - 20 தொடரை இந்தியாவிடம் இழந் திருந்தது. 

இதற்கு பதிலடி கொடுக்க அந்த அணி முயற்சிக்கக்கூடும். எனினும் அண்மையில் லக்னோவில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற இருபதுக்கு - 20 தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 1-2 என தோல்வி கண்டிருந்தது. இது அந்த அணிக்கு பின்னடை வாக கருதப்படுகிறது. 

இந் நிலையில் சாதனையை நோக்கி பயணிக்கும் ரோகித் சர்மா இன்னும் ஒரு சிக்சர் அடித்தால், ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் 400 சிக்ஸர்களை அடித்த முதல் இந்தியர் என்ற மைல்கல்லை எட்டுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.