எட்டுத் தோட்டாக்கள் மற்றும் 'ஜீவி'  ஆகிய படங்களின் மூலம் புகழ் பெற்ற நடிகர் வெற்றி கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது.

ஜெ.என். சினிமாஸ் சார்பில் பார்த்தசாரதி தயாரிக்கும் புதிய படத்தை அறிமுக இயக்குநர் குரு ராமானுஜம் இயக்குகிறார். இவர் ‘கழுகு’ படத்தின் இயக்குனர் சத்ய சிவாவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர்.

இப்படத்தை சமூக விழிப்புணர்வு மற்றும் கொமர்ஷல், சென்டிமென்ட் கலந்த திரில்லர் படமாக இயக்குகிறார். வெற்றி நாயகனாக நடிக்க, இவருடன் நடிகை  தியா மயூரிகா நடிக்கிறார். மாரிமுத்து நடிக்க, கே.ஜி.எஃப் படத்தில் வில்லனாக நடித்த ராமச்சந்திர ராஜு இப்படத்திலும் வில்லனாக நடிக்கிறார். 

இந்த படத்திற்கு சி முருகேஷ்பாபு வசனம் எழுத, எம்.ராமலிங்கம் ஒளிப்பதிவுசெய்கிறார். ராஜா முகமது  படத்தை தொகுக்கிறார். இசையமைப்பாளர் மற்றும் ஏனைய நடிகர்கள் பற்றிய விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தயாரிப்பாளர் பார்த்தசாரதி தெரிவித்திருக்கிறார். 

இந்த படத்தின் படபிடிப்பை மூத்த இயக்குநர் கே.பாக்யராஜ் தொடங்கி வைத்தார்.