வவுனியாவில் பெய்துவரும் தொடர் மழையால், 253 குடும்பங்களை சேர்ந்த 769 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம்.கனீபா தெரிவித்தார்.

இன்று வவுனியா மாவட்ட  செயலகத்தில் தற்போதைய காலநிலை தொடர்பான ஊடக சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

தற்போது நாட்டில் தொடர்ந்து பெய்துவரும் பெரும் மழையின் காரணமாக வவுனியா மாவட்டத்தில் மாத்திரம் 253 குடும்பங்களை சேர்ந்த 769 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

இவர்கள் 5மேலதிக நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான சமைத்த உணவுகளை  அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் பிரதேச செயலகங்கள் வழங்கி வருகின்றனர்.

மேலும் வவுனியா மாவட்டத்தில்  தற்போது 95 குளங்கள் வான் பாய்ந்துள்ளது. 

கடும் மழையின் காரணமாக செட்டிக்குளம் உடையார் குளம் மாத்திரம் உடைக்கப்பட்டுள்ளது. அக்குளம்  கமநல சேவை திணைக்களத்தின் ஏற்பாட்டில்  கமநல அமைப்பின் ஊடாக  புனரமைக்கப்பட்டுள்ளது.

மேலும் குளங்களில் தேங்கும் மேலதிக நீரை வெளியேற்றுவதற்காக கமநல திணைக்களமும் கமநல அமைப்புக்களும் இணைந்து இதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர் எனத் தெரிவித்தார்.