எம்மில் பலரும் தங்களின் உடல் எடையை குறைப்பதற்காக விதவிதமான உணவுமுறையை பின்பற்றுகிறார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு உடல் எடை குறைந்த பின். அந்த உணவு முறையை பின்பற்றுவதில் சுணக்கம் காட்டுகிறார்கள். இதனால் அவர்களுக்கு பல்வேறு வகையான உடலியல் கோளாறுகள் ஏற்படுவதாக வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

இன்றைய சூழலில் உடல் எடையை குறைக்க பேலியோ டயட், கொலஸ்ட்ரால் ஃப்ரீ டயட், எக்கோ டயட், வேகன் டயட் என பல்வேறு உணவு முறைகளை பின்பற்றுகிறார்கள். இத்தகைய உணவு முறைகளை பின்பற்றும் போது இவர்களின் உடல் எடை குறைகிறது. 

ஆனால் உடல் எடையை ஆயுள் முழுவதும் சீராக பராமரிக்க வேண்டும் என்று இவர்கள் நினைப்பதில்லை. இதன் காரணமாக எடையை ஓரளவு குறைத்த பிறகு, அந்த உணவுமுறையை பின்பற்றுவதில்லை. இதன் காரணமாக அவர்களுக்கு அல்சர் எனப்படும் வயிற்றுப் புண், வாயுத் தொல்லை, உணவு உட்கொண்ட பின்னர்  மேல் நோக்கி வரும் எதுக்களிப்பு, நெஞ்செரிச்சல் போன்ற பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அத்துடன் உடல் எடையையும் சீராக பராமரிப்பதில் கவனம் செலுத்துவதில்லை.

நீங்கள் எடை குறைப்பிற்காக பின்பற்றும் டயட்டின் காரணமாக உடலில் ஏதேனும் குறிப்பிட்ட சத்துக்கள் குறைந்து விடுகின்றன. அதன் காரணமாக  பக்கவிளைவுகள் உண்டாகின்றன. 

இந்நிலையில், வைத்தியர்கள் குறிப்பாக ஊட்டச்சத்து நிபுணர்கள், ஒவ்வொருவரின் உடல் எடையில் ஒரு கிலோவிற்கு ஒரு கிராம் என்ற அளவில் புரதச் சத்தினை நாளாந்தம் இடம் பெற வைக்க வேண்டும். இதனை பின்பற்றினால் உடல் எடை சீராக இருக்கும் என்கிறார்கள். அதேபோல் எந்த ஒரு உணவு முறையையும் ஆயுள் முழுவதும் பின்பற்ற கூடாது என்றும் அறிவுறுத்துகிறார்கள்.