புத்தூர் மேற்கு, சிறுப்பிட்டி கலைமதி கிந்துப்பிட்டி மாயானத்தில் சுற்றுமதில் அமைத்த பின் சடலங்களை எரியூட்டுவதற்கு அனுமதியளித்து மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அத்துடன், இந்து மயானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து அங்கு அமைக்கப்படும் மதில்களை உடைத்து அடாவடியில் ஈடுபடும் தரப்பை எச்சரித்த மல்லாகம் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, எல்லை மீறுவோர் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு அச்சுவேலி பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

புத்தூர் கலைமதி கிராமத்தில் உள்ள மயானத்தை அகற்றுமாறு மயானத்தை சூழ வசிக்கும் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்தனர். அதேவேளை அந்த மயானத்தில் சடலங்களை எரியூட்டுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என ஒரு பகுதியினர் மல்லாகம் நீதிமன்றை நாடி இருந்தனர்.

அந்த வழக்கை விசாரித்த மல்லாகம் நீதிவான் அந்தோனிப்பிள்ளை ஜூட்சன், மயானத்தை சூழ பத்தடி உயர மதிலைக் கட்டி , சடலங்களை எரியூட்டுமாறும் , ஒரு வருடகாலத்துக்குள் மின்தகன மயானமாக அதனை மாற்றுமாறும் கட்டளையிட்டிருந்தார்.

மல்லாகம் நீதிவான் மன்றின் கட்டளைக்கு ஆட்சேபனை தெரிவித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் மயானத்தை சூழவுள்ள மக்கள் சார்பில் சீராய்வு மனுத் தாக்கல் செய்தனர்.

வழக்கின் எதிர்மனுதாரர்களாக கிந்துப்பிட்டி மயான நிர்வாகம், அச்சுவேலி பொலிஸார் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டனர்.

அந்த மனு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் 2017ஆம் ஆண்டு செப்ரெம்பர் 19ஆம் திகதி விசாரணைக்கு எடுத்து கொள்ளபப்ட்டது. இதன்போது இந்து மயானத்தில் சடலங்களை எரியூட்டுவதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.

இந்த சீராய்வு மனு மீதான விசாரணை சுமார் இரண்டு வருடங்களாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இடம்பெற்று வந்தது. மனு மீதான இறுதிக் கட்டளை கடந்த நவம்பர் 8ஆம் திகதி வழங்கப்பட்டது.

மல்லாகம் நீதிவான் நீதிமன்றால் 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி வழங்கிய கட்டளையை ரத்துச் செய்து கட்டளையிட்ட யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், சீராய்வு மனுவையும் தள்ளுபடி செய்தார்.

இந்த நிலையில் கிந்துப்பிட்டி இந்து மயானத்தில் சடலங்களை எரியூட்டுவதற்கு அனுமதி கோரும் தரப்பு மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் அணைத்து தமது விண்ணப்பத்தை மன்றில் நேற்று முன்வைத்தனர்.

“மயானத்தைச் சுற்றி மதில் அமைத்து சடலங்களை அங்கு எதியூட்ட முடியும். அதனை எதிர்த்தரப்புத் தடுக்க முடியாது. அங்கு குழப்பம் விளைவித்தாலோ மதிலை உடைத்து அத்துமீறினாலோ அந்த தரப்புக்கு எதிராக பொலிஸார் உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மதில் அமைக்கப்பட்ட பின் வரும் 18ஆம் திகதி மன்றில் அது தொடர்பில் அறிவித்தலை வழங்கவேண்டும்” என்று மல்லாகம் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா உத்தரவிட்டார்.

வழக்கு விசாரணை வரும் 18ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டது.