(நா.தனுஜா)

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் முக்கியத்துவம் அளித்திருந்த கல்வித்துறையின் மேம்பாடு தொடர்பான வேலைத்திட்டங்கள் விரைவாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்று கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சர்களுடனான சந்திப்பின்போது வலியுறுத்தியிருக்கின்றார்.

கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சர்களையும், அமைச்சின் அதிகாரிகளையும் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திபோதே ஜனாதிபதி இவ்விடயம் தொடர்பில் வலியுறுத்தியிருக்கின்றார். 

தொழில்நுட்பத்தை முதன்மைப்படுத்திய பொருளாதாரம் ஒன்றை நோக்கிப் பயணிப்பதற்கு முதலில் திறமையான எதிர்கால சந்ததியொன்றை உருவாக்கும் கல்விக் கட்டமைப்பை நோக்கி விரைவாகப் பயணிக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அதேவேளை சர்வதேச மட்டத்திலான பாடவிதானத்தைத் தயாரிப்பதற்கான இயலுமை குறித்தும் கலந்துரையாடினார்.

மேலும் வேலையில்லாப் பட்டதாரிகளை தற்போது வேலை வெற்றிடமுள்ள நிறுவனங்களுக்குப் பொருத்தமான வகையில் பயிற்சிகளை வழங்கி உள்வாங்கிக் கொள்வதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ வலியுறுத்தினார்.

அதுமாத்திரமன்றி கடந்த 2018 ஆம் ஆண்டில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களை வெகு விரைவில் பல்கலைக்கழகங்களில் சேர்த்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பதுடன், இவ்வருடம் உயர்தரப்பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகி சில நாட்களிலேயே அம்மாணவர்களையும் பல்கலைக்கழகத்திற்கு உள்வாங்கும் செயற்பாடுகள் விரைவுபடுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.

குறுகிய காலப்பகுதிக்குள் நாட்டிற்கு அவசியமான ஊழியப்படையைக் கட்டியெழுப்பும் விதமாக பல்கலைக்கழகக் கல்விச்செயற்பாடுகளில் டிப்ளோமா கற்கைநெறியொன்றை அறிமுகம் செய்வது தொடர்பிலும் இக்கலந்துரையாடலின் போது அவதானம் செலுத்தப்பட்டது.

அடுத்ததாக மட்டக்களப்பு பல்கலைக்கழகம் சீர்கெட்டுப்போவதற்கு இடமளிக்காமல், கூடிய விரைவில் அதனை நாட்டின் தேசிய பல்கலைக்கழகக் கட்டமைப்பிற்குள் உள்வாங்கி, அரசின் தேசிய சொத்து என்ற அடிப்படையில் அதிலிருந்து பயனடைவதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். 

அத்தோடு காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்கள் உள்ளடங்கும் விதமாக பல்கலைக்கழகம் ஒன்று உருவாக்கப்படுவதன் அவசியம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.