(நா.தனுஜா)

வன்னி மாவட்டத்தின் குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வினை வழங்க திட்டங்கள் எம்மிடமுள்ளன என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

அவற்றை முறையாக செயற்படுத்துவதே தற்போது முக்கியமானதாகும். மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவி வகித்தபோது நாட்டுமக்கள் அனைவருக்கும் மின்சாரத்தைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று உறுதிகொண்டிருந்ததுடன், அதனைச் செய்து காண்பித்தார்.

அதேபோன்று தற்போது அனைவருக்கும் சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பது அவரது நோக்கமாக இருக்கின்றது என்று நீர்வழங்கல் வசதிகள் இராஜாங்க அமைச்சர் வாசுதேச நாணயக்கார தெரிவித்தார்.

பத்தரமுல்லையிலுள்ள நீர்வழங்கல் வசதிகள் இராஜாங்க அமைச்சில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

இன்றைய தினம் எனக்கு வாழ்த்துத் தெரிவிப்பதற்காக பிரபா கணேசன் அமைச்சிற்கு வருகைதந்தார்.

அதன்போது வடக்கில், குறிப்பாக வன்னி மாவட்டத்தில் மக்கள் எதிர்நோக்குகின்ற குடிநீர் உள்ளிட்ட நீர்வழங்கல் தொடர்பான பிரச்சினைகளை எனது அவதானத்திற்குக் கொண்டுவந்தார். எனவே நாமிருவரும் இணைந்து ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி, இவ்விடயம் குறித்துத் தெளிவுபடுத்துவோம் என்று நான் அவரிடம் கூறினேன்.

பிரபா கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியும், எமது இடதசாரி முன்னணியும் ஒன்றிணைந்து மிகவும் நெருக்கமாகச் செயற்பட வேண்டும் என்று உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.

அந்தவகையில் இரு கட்சிகளின் சார்பிலும் பிரபா கணேசன் தற்போது வன்னி மாவட்டத்தில் முன்னெடுத்து வருகின்ற செயற்பாடுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதுடன், நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலிலும் எமது வெற்றியை உறுதிப்படுத்துவதற்கு அவர் முன்நின்று செயற்பட்டார்.

இந்நிலையில் வன்னி மாவட்டத்தின் குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வை வழங்கத்தக்க நீர்வழங்கல் திட்டங்கள் எம்மிடமுள்ளன. அவற்றைத் தொடர்ந்து முன்நோக்கி செயற்படுத்துவதே தற்போது முக்கியமானதாகும் என அவர் இதன்போது தெரிவித்தார்.