(ஆர்.விதுஷா)

மிரிஹான தடுப்பு முகாமில் நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது கையடக்கத்தொலைபேசி உள்ளிட்ட பல பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் சட்டக்கட்டுப்பாட்டாளரும் ஊடகப் பேச்சாளருமான பி.ஜி.ஜி. மிலிண்ட தெரிவித்தார்.

மிரிஹான தடுப்பு முகாமில் உள்ள வெளிநாட்டுப் பிரஜைகள்   கையடக்க தொலைபேசி உள்ளிட்ட பல பொருட்களை  சட்டவிரோதமான முறையில் பயன்படுத்துவதாக கிடைக்கப்பெற்ற  தகவலை அடுத்து பொலிசார் மற்றும் விசேட  அதிரடிப்படையினருடன் இணைந்து குடிவரவு குடியகல்வு   திணைக்கள அதிகாரிகள் இன்று வியாழக்கிழமை காலை  11.30  மணியளவில் இந்த சோதனையினை நடத்தினர். 

சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தப்பட்ட 75 கையடக்க  தொலைபேசிகளும் , 5 மடிக்கணினிகளும்   1இலட்சத்து 56  ஆயிரம் ரூபாய்  பணமும்  கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த முகாமில் 178  வெளிநாட்டவர்கள்  தடுத்து  வைக்கப்பட்டுள்ள  நிலையில் , அவர்களில் 55 பேர்     நைஜீரியப்பிரஜைகள் என குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின்  ஊடகப்பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.