இனந்தெரியாத நபர்கள் வெள்ளை வான்களில் இளம்பெண்களை பாலியல் நோக்கங்களிற்காகவும் உடல்பாகங்களை திருடுவதற்காகவும்  கடத்துகின்றனர் என்ற முகநூல் தகவல்களால் அமெரிக்காவின் சில பகுதிகளில் அச்சநிலை உருவாகியுள்ளதாக சிஎன்என் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் ஒருங்கிணைக்கப்பட்ட அளவில் இவ்வாறான குற்றச்செயல் இடம்பெறுகின்றது என்பதற்கான ஆதாரங்கள் இல்லாத போதிலும் தொடர்ச்சியாக வெளியாகியுள்ள முகநூல்பதிவுகள் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன இதன் காரணமாக ஆதாரமற்ற தகவல்களை அடிப்படையாக வைத்து அமெரிக்க நகரமொன்றின் மேயர் எச்சரிக்கை விடுத்துள்ளார் என சிஎன்என் தெரிவித்துள்ளது.

வெள்ளை வானிற்கு அருகில் உங்கள் வாகனங்களை நிறுத்தாதீர்கள் உங்களை யாராவது கடத்த முயன்றால் உங்கள் கையடக்க தொலைபேசியை பயன்படுத்துங்கள் என பல்டிமோர் மேயர்  பேர்னாட் ஜக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காவல்துறையினர் இது குறித்து எனக்கு எந்த தகவல்களையும் வழங்கவில்லை முகநூலை அடிப்படையாக வைத்தே இந்த  எச்சரிக்கையை விடுக்கின்றேன்  என அவர்தெரிவித்துள்ளார்.

பல்டிமோர் காவல்துறையினர் முகநூல் பதிவுகள் குறித்து அறிந்துள்ள போதிலும் வெள்ளை வான் கடத்தல் சம்பவங்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.

பல்டிமோர் உட்பட அமெரிக்க நகரங்களில் வெள்ளை வான்கள் குறித்த முகநூல் பதிவுகளை பல்லாயிரக்கணக்கானவர்கள் பகிர்ந்துகொண்டுள்ளதுடன்  மில்லியன் கணக்கான  முகநூல் பயனாளர்கள் அதனை பார்வையிட்டுள்ளனர்.

இதன் காரணமாக வெள்ளை வான் சாரதியொருவர் துன்புறுத்தப்பட்டுள்ளார்.

நவம்பர் 13 ம் திகதி சவுண்டிரா மரே என்ற பல்டிமோர் பிரஜையொருவர் காஸ்நிலையத்திற்கு அருகில் வெள்ளை வானை பார்த்ததாக சமூக ஊடகத்தில் பதிவு செய்திருந்தார்.

அவரின் பதிவிற்கு இன்ஸ்டகிராமில் 3200 பேர் விருப்பம் வெளியிட்டிருந்தனர்,அதற்கு சில நாட்களின் பின்னர் இன்னொரு பெண்மணி மரேயின்பதிவினை முகநூலில்பதிவு செய்திருந்தார்.அதற்கும் பெரு வரவேற்பு கிடைத்திருந்தது.

இதனை தொடர்ந்து 18ம் திகதி அதே பகுதியை சேர்ந்த பெண்மணியொருவர் வெள்ளை வான் குறித்து பதிவு செய்திருந்தார்.