(எம்.மனோசித்ரா)

பாராளுமன்ற தேர்தலிலும் மொட்டு சின்னத்தில் போட்டியிட்டு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் பொதுஜன பெரமுன ஆட்சியமைக்கும் என்று தெரிவித்த கைத்தொழில் ஏற்றுமதி, முதலீட்டு ஊக்குவிப்பு, சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரனதுங்க, பொதுஜன பெரமுனவுக்கு காணப்பட்ட மக்கள் பலத்தின் காரணமாகவே ஏனைய கட்சிகளுக்கு எம்முடன் இணையக் கூடியதாக இருந்தது என்றும் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மஹர தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது : 

மொட்டு சின்னத்தில் கம்பஹா மாவட்டத்தில் தனியாக போட்டியிட்டு 2 இலட்சத்து 65 ஆயிரம் மேலதிக வாக்குககளால் நாம் வெற்றி பெற்றோம்.

உள்ளுராட்சி தேர்தலில் இவ்வாறு தனித்து போட்டியிட்டதன் காரணமாகவே ஜனாதிபதித் தேர்தலிலும் எம்மால் மொட்டு சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற முடிந்தது. 

பொதுஜன பெரமுனவுக்கு காணப்பட்ட மக்கள் பலத்தின் காரணமாகவே ஏனைய கட்சிகளுக்கு எம்முடன் இணையக் கூடியதாக இருந்தது. எனவே தான் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலலிலும் மொட்டு சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என நாம் வலியுறுத்துகின்றோம். 

எதிர்வரும் நான்கு மாதங்களுக்குள் கம்பஹா மாவட்டத்தில் 4 இலட்சத்துக்கும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கான வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுத்து வருகின்றோம். 

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு நாட்டுக்கு சேவையாற்றிய வேண்டிய கடமையும் பொறுப்பும் இருக்கிறது. அதனால் தான் முதலாவது அமைச்சரவை கூட்டத்தின் போது வரிகள் குறைக்கப்பட்டன. இவ்வாறு வரிகளைக் குறைப்பதால் அரசாங்கத்தின் வருமானம் குறைவடையும் என்றும், இவ்வாறு வருமானம் குறைவடைந்து சென்றால் எவ்வாறு அரசாங்கத்தை கொண்டு செல்ல முடியும் என்றும் சிலர் எம்மிடம் கேள்வியெழுப்புகின்றனர். 

முதலாவது அமைச்சரவை கூட்டத்தின் போது ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, ' குறைந்தளவான வியாபாரிகளைக் கொண்டு கூடுதல் வரி அறவிடுவதை விட வியாபாரிகளின் எண்ணிக்கையை அதிகரித்து வரியைக் குறைத்தால் யாருக்கும் பாதாகம் ஏற்படாமல் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் ' என்று கூறினார். 

எதிர்வரும் மூன்று மாத காலத்துக்குள் எமது இடைக்கால அரசாங்கத்தில் சிறு குறைபாடுகள் ஏற்படலாம். எனினும் மூன்று மாதங்களின் பின்னர் மூன்றில் இரண்டு பெரும்பாண்மையுடன் நாம் உருவாக்கும் அரசாங்கத்தில் மக்களின் சகல எதிர்பார்ப்புக்களையும் நிறைவேற்றக் கூடிய அத்திவாரத்தையே இன்று தயாரித்துக் கொண்டிருக்கிறோம் என்றார்.