அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கட்சி பேதமின்றி ஒன்றிணைந்து செயற்படவேண்டுமென அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

அனர்த்த நிலைமைகளை கைக்கொண்டு அரசியல் இலாபம் தேட வேண்டாமெனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீனா 4 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிவாரணத்தொகையாக வழங்கியபோதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். 

சீனா வழங்கிய நிவாரண பொருட்களில் 1000 கூடாரங்கள் மற்றும் 3000 மடிப்புக்கட்டில்களும் உள்ளடங்கும்.

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பரிந்துரையின் கீழ் இந்த நிவாரண உதவிகளை அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா இலங்கைக்கான சீனத்தூதுவர் சியன் லியங்விடமிருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் வைத்து பெற்றுக்கொண்டார்.

இதேவேளை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த மக்களுக்கு சீனா- இலங்கை நட்புறவு கிராமம் ஒன்றை அமைப்பதற்கு 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களையும் சீனா வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நிவாரணம் தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர்,

சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவின் பிரதிபலிப்பே இந்த நிவாரணமெனவும், சீனாவின் இது போன்ற உதவிகள் எதிர்காலத்திற்கும் தேவை எனவும் தெரித்துள்ளார்.

இதேவேளை சீனாவின் சுகாதாரம் மற்றும் நிவாரணத்துறையின் எட்டுப் பேர் கொண்ட குழுவொன்று இலங்கை வந்தடைந்துள்ளது.

இந்த குழு வெள்ளம் மற்றும் மண்சரிவு இடம்பெற்ற பகுதிகளுக்கு சென்று சுகாதாரம் மற்றும் நிவாரணம் தொடர்பான உதவிகளை செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.