ஐ.என்.எக்ஸ் முறைகேடு தொடர்பான அமுலாக்கத்துறை வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு நிபந்தனைகளுடன் கூடிய பிணை வழங்கப்பட்டுள்ளது.

ஐ.என்.எக்ஸ் .மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை அமுலாக்கத்துறை கடந்த ஒக்டோபர் 16ஆம் திகதி கைது செய்தது.

இந்நிலையில், ப.சிதம்பரம் தொடர்ந்த பிணை மனுவை டில்லி நீதிமன்றம் நிராகரித்திருந்த நிலையில், அவர் உச்ச நீதிமன்றத்தில் பிணை கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நிறைவடைந்துள்ள நிலையில், நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு இன்று ப.சிதம்பரத்திற்கு நிபந்தனையுடனான பிணை வழங்கியுள்ளது.

முன்னதாக, சி.பி.ஐ. தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் ஒக்டோபர் 22ஆம் திகதி உச்ச நீதிமன்றம் சிதம்பரத்திற்கு பிணை வழங்கியிருந்தது.

தற்போது, அமுலாக்கத்துறை தொடர்ந்த வழக்கிலும் பிணை வழங்கப்பட்டுள்ளதால் அவர் திஹார் சிறையிலிருந்து வெளியே வரவுள்ளார்.

இந்நிலையில், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள வழக்கில் ப.சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் இன்று பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும், அவருக்கு சில நிபந்தனைகளையும் விதித்துள்ளது. 

நீதிமன்ற அனுமதியின்றி ப.சிதம்பரம்  வெளிநாடு செல்லக்கூடாது. தன் மீதான வழக்கு தொடர்பாக பத்திரிகைகளுக்கு பேட்டி அளிக்கவோ, அறிக்கை விடவோ கூடாது. வழக்கின் சாட்சிகளை மிரட்டவோ, ஆதாரங்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபடவோ கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.