‘வடசென்னை’ படத்தை தொடர்ந்து இயக்குனரும், நடிகருமான அமீர் நடிப்பில் தயாராகும் புதிய படத்திற்கு ‘நாற்காலி ’என பெயரிடப்பட்டிருக்கிறது.

ஏமாளி, இருட்டு ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குனர் வி இசட் துரை இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் ‘நாற்காலி’. அரசியலை பின்னணியாக கொண்டு உருவாகும் இந்த படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார் அமீர். ‘யோகி’ படத்தின் மூலம் நடிகராகவும் தன்னை மெருகேற்றிக் கொண்ட இயக்குனர் அமீர், அதன் பிறகு யுத்தம் செய், நினைத்தது யாரோ ஆகிய இரண்டு படங்களிலும் கௌரவ வேடத்தில் மட்டுமே நடித்திருந்தார்.

இயக்கத்தில் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்த அமீரை, இயக்குனர் வெற்றிமாறன், தன்னுடைய இயக்கத்தில் உருவான ‘வட சென்னை’ படத்தில் ராஜன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருந்தார்.

அந்த படத்தில் அமீரின் நடிப்பு பாராட்டப்பட்ட நிலையில், தொடர்ந்து அவர் சில படங்களில் கதையின் நாயகனாக நடித்தார். அந்த படங்களின் வளர்ச்சிநிலை பல்வேறு கட்டங்களில் இருக்கின்றன. இந்நிலையில் இயக்குனர் வி இசட் துரையின் திரையில் இயக்கத்தில் உருவான ‘நாற்காலி’ என்ற படத்தில் கதையின் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியிருக்கிறது.

அஜயன் பாலாவின் அனல் தெறிக்கும் வசனத்தில், கிருஷ்ணசாமி ஒளிப்பதிவில் தயாராகியிருக்கும் ‘நாற்காலி’ படத்திற்கு இசையமைப்பது யார் என்று விவரம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்றாலும், யுவன் சங்கர் ராஜா இசையமைக்க கூடும் என்று தெரியவருகிறது, இந்தப் படத்தை இயக்குனர் அமீரின் நண்பரும், தயாரிப்பாளருமான ஆதம்பாவா, மூன் பிக்சர்ஸ் சார்பாக தயாரிக்கிறார்.

அமீரின் நடிப்பில் உருவாகத் தொடங்கியிருக்கும் இந்த ‘நாற்காலி’யாவது விரைவில் ரசிகர்களை சந்திக்கட்டும் என்று வாழ்த்துகிறார்கள் அவரது  நண்பர்கள்.