(இராஜதுரை ஹஷான்)

எதிர்க்கட்சி தலைவர் பதவியை தன்வசப்படுத்தும் நோக்கம் சபாநாயகருக்கு கிடையாது என முன்னாள்  அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் செயற்பாடுகள் ஒழுங்குபடுத்தல் அலுவலகத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சி தலைவர் மற்றும்  ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பதவியை  முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாஸவிற்கு வழங்க வேண்டும் என்பது 55 இலட்ச மக்களின்  அரசியல் அபிலாஷையாக காணப்படுகின்றது. இதற்கு  கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் மதிப்பளிக்க வேண்டும்

எதிர்க்கட்சி தலைவர் பதவி முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாஸவிற்கு  வழங்க வேண்டும் என்பதற்கான   முயற்சிகளே  அதிகம்  கட்சியிலும், வெளியிலும் காணப்படுகின்றது.  சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு எதிர்கட்சி  தலைவர் பதவியை  வழங்குவதற்கான பெரும்பான்மை ஆதரவு  கிடையாது.  

இப்பதவியை  தன்வசப்படுத்த  அவர் எந்நிலையிலும் முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. பெரும்பாலான ஆதரவிற்கு இணங்க தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டில் சபாநாயகர் உறுதியாக உள்ளார். ஆகவே எமது   எதிர்பார்ப்பிற்கு ஒருபோதும் அவர் தடையாக செயற்படமாட்டார்.