(எம்.மனோசித்ரா)

வத்தளையிலுள்ள தங்க ஆபரண விற்பனை நிலையமொன்றில் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி மூன்று கோடிக்கும் அதிக பெறுமதியுடைய நகைகளை கொள்ளையிட்ட இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. 

அண்மையில் குறித்த தங்க ஆபரண விற்பனை நிலையத்தில் பொலிஸ் சீருடையுடன் நுழைந்த இரு சந்தேகநபர்கள் அங்கிருந்தவர்களை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி மூன்று கோடியே 18 இலட்சத்துக்கும் அதிக பெறுமதியுடைய நகைகளை கொள்ளையிட்டு சென்றுள்ளனர். இவ்விரு சந்தேகநபர்களும் திங்கட்கிழமை மினுவங்கொட - புலுகஹமுல விளையாட்டு மைதானத்திற்கருகில் கைது செய்யப்பட்டதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. 

இவ்வாறு கைது செய்யப்பட்ட இரு சந்தேநபர்களில் முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவரும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவர்களிடமிருந்து கொள்ளையிடப்பட்ட நகைகளில் சிலவும், கொள்ளையிட்ட பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள், போலியான இலக்க தகடுகள் இரண்டும், கையடக்க தொலைபேசிகள் இரண்டும், அவற்றிலுள்ள சிம் அட்டைகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

சம்பவம் நடைபெற்ற கடந்த 15 ஆம் திகதி குறித்த நகை விற்பனை நிலைய உரிமையாளர் வீடு திரும்பும் போது பொலிஸ் சீருடையை ஒத்த உடை அணிந்த நால்வர் தம்மை கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் என்று அடையாளப்படுத்தி அவரை கடத்திச் சென்றுள்ளனர் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

குறித்த நால்வரும் கடத்திய நபரின் முகத்தையும், கைகளையும் துணியால் கட்டி ஜாஎல பிரதேசத்திலுள்ள பாழடைந்த வீடொன்றிற்கு அழைத்து சென்று உயிர் அச்சுறுத்தல் விடுத்து இவ்வாறு நகைகளை கொள்ளையடிதுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

சந்தேகநபர்கள் 40 மற்றும் 48 வயதுடையவர்களாவர். இந்த கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்கள் மற்றும் கொள்ளையிடப்பட்ட நகைகள் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.