13 ஆவது திருத்த சட்­டமும் தமி­ழர்­களின் அர­சியல் தீர்வும்

Published By: Digital Desk 3

03 Dec, 2019 | 12:42 PM
image

புதிய ஜனா­தி­பதி கோத்­ததாபய ராஜ­பக்ஷ  பத­வி­யேற்­றுள்ள நிலையில்  தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு  தீர்வு காணக்­கூ­டிய நிலைமை  உரு­வா­குமா என்ற கேள்வி  எழுந்­தி­ருக்­கின்­றது.  இந்­தி­யா­வுக்கு  விஜயம் செய்­தி­ருந்த ஜனா­தி­பதி கோத்­தாபய ராஜ­பக்ஷ இந்­தியப் பிர­தமர் நரேந்­தி­ர­மோடி உட்­பட  பல­ரையும் சந்­தித்து  கலந்­து­ரை­யா­டி­யுள்ளார்.  இந்த  கலந்­து­ரை­யா­ட­லின்­போது  தமிழ் ­மக்­களின் அபி­லா­ஷை­களை தீர்க்கும் வகையில் 13ஆவது திருத்த சட்­டத்­தினை அமுல்­ப­டுத்த வேண்டும் என்ற இந்­தி­யாவின் எதிர்­பார்ப்பை பிர­தமர் நரேந்­தி­ர­மோடி வெளிப்­படுத்­தி­யி­ருந்தார்.

பிர­தமர் நரேந்­தி­ர­மோ­டியின் இலங்கை தமிழர் தொடர்­பான நிலைப்­பாடு குறித்து தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு உட்­பட தமிழ் கட்­சிகள் வர­வேற்பு தெரி­வித்­தி­ருந்­தன.  இந்­த­நி­லையில்  13ஆவது திருத்த சட்­டத்தை அமுல்­ப­டுத்தும்  விட­யத்தில் கூட ஜனா­தி­பதி கோத்­தாபய ராஜ­­பக்ஷ மாற்று நிலைப்­பாட்டை கொண்­டுள்­ளமை  தற்­போது பர­க­சி­ய­மா­கி­யுள்­ளது. இந்­திய விஜ­யத்­தின்­போது அந்­நாட்டின்  ‘த இந்து‘ பத்­தி­ரிகை மற்றும் இந்­துஸ்தான் டைம்ஸ் பத்­தி­ரிகை ஆகி­ய­வற்­றுக்கு ஜனா­தி­பதி பேட்­டி­ய­ளித்­தி­ருந்தார்.

இந்தப் பேட்­டியில் அவர் பல்­வேறு விட­யங்­களை சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.  இலங்­கையின் பெரும்­பான்மை சமூ­கத்­தி­னரின் விருப்­புக்கு மாறாக எத­னையும்  செய்ய முடி­யாது என்றும்  13ஆவது திருத்தம் இலங்­கையின்  அர­சி­ய­ல­மைப்பின் ஒரு­ப­கு­தி­யாக உள்­ள­துடன் அது ஏற்­க­னவே நடை­மு­றையில் உள்­ளது. ஆனாலும் பொலிஸ் அதி­காரம் போன்­றவை மாத்­திரம் வழங்­கப்­ப­ட­வில்லை.  இதனை எங்­களால் நடை­மு­றைப்­ப­டுத்த முடி­யாது.  அதற்­கான மாற்­று­வ­ழிகள் குறித்து  பேச்­சு­வார்த்தை மேற்­கொள்­வ­தற்கு  நான் தயா­ராக உள்ளேன் என்று  ஜனா­தி­பதி தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

தமிழ் மக்­க­ளுக்கு நீதி,  சமத்­துவம் ஆகி­ய­வற்றை வலி­யு­றுத்தி  இந்­திய அர­சாங்கம் வேண்­டுகோள் விடுத்­துள்­ளமை தொடர்பில்  எழுப்­பப்­பட்ட கேள்­விக்கு  பதி­ல­ளித்த ஜனா­தி­பதி கோத்­தாபய ராஜ­பக் ஷ பெரும்­பான்மை சமூ­கத்தின் விருப்­பங்­க­ளுக்கு எதி­ராக எத­னையும் செய்ய முடி­யாது என நான் கரு­து­கிறேன்.  பெரும்­பான்மை சமூ­கத்தின் விருப்­பத்­திற்கு மாறாக யாரா­வது ஏதா­வது வாக்­கு­றுதி அளித்தால் அது பொய்­யாகும்.  பிர­தே­சங்­களை  அபி­வி­ருத்தி செய்­ய­வேண்டாம் என்றோ,  வேலை­வாய்ப்பை வழங்­க­வேண்டாம் என்றோ எந்த சிங்­க­ள­வர்­களும் கூற­மாட்­டார்கள். ஆனால்  அர­சியல் விவ­கா­ரங்கள் வேறு­மா­தி­ரி­யா­னவை என்றும் தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

13ஆவது திருத்த சட்டம் முழு­மை­யாக அமுல்­ப­டுத்­தப்­ப­ட­வேண்­டி­யதன் அவ­சி­யத்தை இந்­தியப் பிர­தமர் நரேந்­தி­ர ­மோடி தமது எதிர்­பார்ப்­பாக  வலி­யு­றுத்­திய நிலையில்  ஜனா­தி­பதி கோத்­தாபய ராஜ­­பக்ஷ  அந்த விட­யமும் முழு­மை­யாக  சாத்­தி­யப்­ப­டக்­கூ­டி­ய­தொன்­றல்ல என்­பதை பத்­தி­ரி­கை­க­ளுக்­கான பேட்­டி­களில் எடுத்­துக்­கூ­றி­யி­ருக்­கின்றார்.

உண்­மை­யி­லேயே ஜனா­தி­ப­தியின் இத்­த­கைய கருத்­தா­னது  தமிழ் மக்­களைப் பொறுத்­த­வ­ரையில் ஏமாற்­றத்தை அளிக்கும் செயற்­பாடா­கவே அமைந்­தி­ருக்­கின்­றது.  இந்­தியப் பிர­தமர் நரேந்­தி­ர­மோடி  ஜனா­தி­பதி கோத்­தாபய ராஜ­­பக்ஷவை சந்­தித்த பின்னர் இடம்­பெற்ற கூட்டு செய்­தி­யாளர் மாநாட்டில்  13ஆவது திருத்த சட்­டத்தின் அமு­லாக்­கத்தை வலி­யு­றுத்­தி­யி­ருந்தார். இதனை  தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு  வர­வேற்­றி­ருந்­தது.

ஆனாலும்  தற்­போ­தைய ஜனா­தி­ப­தியின்  நிலைப்­பாடு தொடர்பில் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு அதி­ருப்­தியை கொண்­டுள்­ளது. 13ஆவது திருத்­தத்தின் அவ­சி­யத்தை இந்­தியப் பிர­தமர் வலி­யு­றுத்­தி­ய­போதும்  ஜனா­தி­பதி கோத்­தாபய ராஜ­பக்ஷ அதற்கு உரிய பதிலை உட­ன­டி­யாக தெரி­விக்­க­வில்லை.  கூட்டு செய்­தி­யாளர் மாநாட்டில் அவர்  மெள­னம்­காத்­தி­ருந்தார். ஆனால்  ஊட­கங்­க­ளுக்­கான பேட்­டி­களில்  தமிழர் பிரச்­சினை தொடர்பில் உரிய கருத்­துக்­களை ஜனா­தி­பதி தெரி­விக்­க­வில்லை. இது எமக்கு ஏமாற்­றத்தை அளிக்­கின்­றது.  எனவே இந்த விடயம் தொடர்பில் இந்­தி­யா­வுடன் கலந்­து­ரை­யாட எண்­ணி­யுள்ளோம் என்று தமிழ்  தேசி­யக்­கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும்  இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலை­வ­ரு­மான மாவை சேனா­தி­ராஜா தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

இதே­போன்றே  13ஆவது திருத்தம் முழு­மை­யாக அமுல்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும் என்ற இந்­தியப் பிர­தமர் நரேந்­தி­ர­மோ­டியின் வலி­யு­றுத்­தலை வர­வேற்­றி­ருந்த தமிழ்  தேசி­யக்­கூட்­ட­மைப்பின்  பேச்­சா­ளரும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ. சுமந்­திரன்  13க்கு அப்பால் சென்று தீர்வு காணப்­ப­ட­வேண்­டி­யதன் அவ­சி­யத்தை  வலி­யு­றுத்­தி­யி­ருந்தார்.

உண்­மை­யி­லேயே  மூன்று தசாப்­தத்­திற்கும்  மேலாக இடம்­பெற்ற யுத்­தத்தில் பேரி­ழப்­புக்­களை சந்­தித்த தமிழ் மக்கள் தமது அபி­லா­ஷை­களைப் பூர்த்தி செய்­யக்­கூ­டிய அர­சியல்  தீர்வின் அவ­சி­யத்தை தொடர்ந்தும்  வலி­யு­றுத்தி வரு­கின்­றனர்.  இணைந்த வடக்கு, கிழக்கில்  சமஷ்டி தீர்வு வழங்­கப்­பட­வேண்டும் என்­பதே அவர்­க­ளது நிலைப்­பா­டாக உள்­ளது.  கடந்த  பல தேர்­தல்­களில் இதற்­கான ஆணை­யினை அந்த மக்கள்  வழங்­கி­யுள்­ளனர்.  ஆனால்  அந்த ஆணைக்கு ஏற்ப மாறி மாறி வந்த அர­சாங்­கங்கள் அர­சியல் தீர்­வுக்­கான முயற்­சி­களை முன்­னெ­டுக்­க­வில்லை.  பிர­தமர்  ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான நல்­லாட்சி அர­சாங்­கத்தில் இந்த விடயம் தொடர்பில் ஓர­ள­விற்கு முன்­னேற்­ற­க­ர­மான செயற்­பாடு  இடம்­பெற்­றி­ருந்­தது.

புதிய அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்­கு­வதன் மூலம் அர­சியல் தீர்­வையும்   முன்­வைக்கும் விட­யத்தில் ஓர­ள­விற்கு முற்­போக்­கான நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டி­ருந்­தது.  ஆனாலும்  ஆட்­சி­மாற்றம் கார­ண­மாக அந்த  விட­யமும் கைவி­டப்­பட்­டி­ருக்­கின்­றது.  இந்த நிலை­யில்தான் புதிய ஜனா­தி­பதி கோத்­தாபய ராஜ­­பக்ஷ மற்றும்  பிர­தமர் மஹிந்த ராஜ­­பக் ஷ தலை­மை­யி­லான புதிய அர­சாங்கம்  அர­சியல் தீர்­வுக்­கான முயற்­சி­களை  முன்­னெ­டுக்­குமா என்ற கேள்வி  எழுந்­தி­ருக்­கின்­றது.  இதன் ஒரு­ப­டி­யா­கவே ஜனாதி­பதி கோத்­தாபய ராஜ­­பக் ஷவின் இந்­திய விஜ­யமும் பிர­தமர் நரேந்­தி­ர ­மோடியின் வலி­யு­றுத்­தலும் அமையும் என்ற எதிர்­பார்ப்பு எழுந்­தி­ருந்­தது.

ஆனால் தற்­போது புதிய ஜனா­தி­பதி பெரும்­பான்மை சமூ­கத்­தி­னரின் விருப்­புக்கு மாறாக எத­னையும் செய்ய முடி­யாது என்றும்  13ஆவது திருத்­தத்தில் சில விட­யங்­களை அமுல்­ப­டுத்த முடி­யாது என்றும்  கூறி­யுள்­ளமை அர­சியல் தீர்வு விட­யத்தில் பெரும் சந்­தே­க­மான விட­யத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.  இந்த  விடயம் தொடர்பில் அமைச்சர்  கெஹெ­லி­ய ரம்­புக்­வெ­லவும் கருத்து தெரி­வித்­தி­ருக்­கின்றார்.  இந்­தியப் பிர­தமர் நரேந்­தி­ர­மோடி 13ஆவது திருத்­தத்தை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­து­மாறு  வலி­யு­றுத்­தி­யுள்­ளதை ஏற்­றுக்­கொள்­கின்றோம். எனினும் அதில் பொலிஸ் மற்றும் காணி அதி­கா­ரங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வது தொடர்பில் சிக்­கல்கள் காணப்­ப­டு­வதால் அது குறித்து ஆராய்ந்த பின்­னரே முடிவு எடுக்க முடியும் என்று  கூறி­யி­ருக்­கின்றார்.

ஜனா­தி­ப­தியின் கூற்று மற்றும் அமைச்சர் கெஹெ­லி­ய­ரம்­புக் ­வெ­லவின் கருத்து ஆகி­யன 13ஆவது திருத்தம் கூட முழு­மை­யாக அமுல்­ப­டுத்­தப்­ப­ட­மாட்­டாது என்­பதை கட்­டி­யம் ­கூ­று­வ­தா­கவே  அமைந்­தி­ருக்­கின்­றன.

பெரும்­பான்­மை­யின மக்­களின் விருப்­பத்­திற்கு மாறாக எத­னையும் செய்ய முடி­யாது என்­பது ஏற்­றுக்­கொள்­ளத்­தக்க  கருத்­தாகும்.  ஏனெனில்  எமது நாட்டில் தமி­ழர்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு அர­சியல் தீர்வு காணப்­ப­ட­வேண்­டு­மானால் அதனை பெரும்­பான்மை சமூகம் ஏற்­றுக்­கொள்­ள­வேண்டும். அவ்­வா­றா­னால்தான்  அதனை நடை­மு­றைப்­ப­டுத்­தலாம்.  ஜனா­தி­ப­தியின் இந்­தக்­க­ருத்தில் தவறு எதுவும் இல்லை.

ஆனாலும்  அர­சியல் தலை­மைகள் தமி­ழர்­க­ளுக்கு பிரச்­சினை உண்டு. அதற்கு  தீர்வு வழங்­க­வேண்டும் என்ற நிலைப்­பாட்­டுக்கு முதலில் வர­வேண்டும்.  அவ்­வாறு  பெரும்­பான்மை சிங்­கள மக்­களின்  பேரா­த­ரவைப் பெற்ற தரப்­பினர்  தீர்வை வழங்க முன்­வ­ரும்­போது அதனை பெரும்­பான்­மை­யான சிங்­கள மக்கள் எதிர்க்­கப்­போ­வ­தில்லை.

1994ஆம் ஆண்டு முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க  பெரும் ­வெற்­றி­பெற்றார்.  அவ­ரது ஆட்­சிக்­கா­லத்தில் அர­சியல் தீர்­வுக்கு முயற்சி எடுக்­கப்­பட்­டது. பெரும்­பான்­மை­யின மக்களின் மனங்களை மாற்றுவதற்கு பல்வேறு செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அன்றைய அமைச்சர் மங்கள சமரவீர தலைமையில் வெண்தாமரை இயக்கம்  இதற்கான நடவடிக்கைகளை எடுத்தது.

இதேபோன்றே 2005ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் சமஷ்டித் தீர்வை வழங்குவேன் என்று கூறிய  அன்றைய ஐக்கிய தேசியக்கட்சியின் வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு 49 இலட்சம் மக்கள் வாக்களித்திருந்தனர்.  தமிழ் மக்கள் வாக்களிக்காமையினாலேயே அந்த தேர்தலில் அவர் தோல்வியை தழுவும் நிலை ஏற்பட்டிருந்தது. அந்த வேளையில் சிங்கள மக்கள்  அரசியல் தீர்வுக்கு ஆதரவு  தெரிவித்தே இருந்தனர்.

தற்போதைய நிலையில் புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜ­பக் ஷ சிங்கள மக்களின் பேராதரவைப் பெற்றே  வெற்றிபெற்றுள்ளார். எனவே இத்தகைய பேராதரவைப் பெற்ற  தலைவர் பிரச்சினைக்கு  தீர்வுகாண முயன்றால் அதற்கு  எதிர்ப்பு கிளம்பப்போவதில்லை எனவே இதனை உணர்ந்து அரசியல் தீர்வுக்கான நடவடிக்கையை  புதிய அரசாங்கம் எடுக்கவேண்டுமென வலியுறுத்துகிறோம்.

(03.12.2019 வீரகேசரி நாளிதழின் ஆசிரிய தலையங்கம் )

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13