'பலோன்டோர்' விருதை ஆறாவது முறையாக வென்று பார்சிலோனா கால்பந்து அணியின் தலைவர் மெஸ்ஸி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டின் கால்பந்து சம்மேளனம் சார்பில் சிறந்த கால்பந்து வீரருக்கான 'பலோன்டோர்' விருது வழங்கும் விழா பாரிஸில் நடைபெற்றது. 

இந்த விருதினை பார்சிலோனா கால்பந்து அணியின் தலைவர் மெஸ்ஸி ஆறாவது முறையாக பெற்று சாதனை படைத்துள்ளார். 

கடந்த முறை இந்த விருதை பெற்ற ரியல் மாட்ரிட் வீரர் லூகா மாட்ரிக், நடப்பு ஆண்டுக்கான பலோன்டோர் விருதை மெஸ்ஸிக்கு வழங்கினார். 

கால்பந்தில் தொடர்ந்து, தனது ஆதிக்கத்தை செலுத்தி வரும் மெஸ்ஸி நடப்பு ஆண்டில் மட்டும் பிபாவின் சிறந்த வீரருக்கான விருது, அதிக கோல்கள் அடித்தமைக்காக வழங்கப்படும் கோல்டன் பூட் விருதை ஆறு முறை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் பலோன்டோர் விருதை ஆறாவது முறையாக பெற்றதன் மூலம், மிகச் சிறந்த மூன்று விருதுகளையும் தலா ஆறு முறை பெற்ற ஒரே வீரர் என்ற சிறப்பையும் மெஸ்ஸி பெற்றுள்ளார்.   

இந்த விருது சர்வதேச கால்பந்து சம்மேளனம் வழங்கும் விருதுக்கு நிகராக மதிக்கப்படுகிறது. 

இந்நிலையில், 2019 ஆம் ஆண்டுக்கான பலோன்டோர் விருதை மெஸ்ஸி பெற்றுள்ளார். 

விர்ஜில் வான் டிஜ்க் இரண்டாம் இடம் பிடித்த நிலையில், 5 முறை பலோன்டோர் விருதை வென்ற ரொனால்டோ மூன்றாம் இடம் பிடித்துளார்.

கடந்த 2008 ஆம் ஆண்டில் இருந்து மெஸ்ஸி அல்லது ரொனால்டோ மட்டுமே மாறிமாறி இந்த விருதைப் பெற்று வந்த நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு லூகா மாட்ரிக் பெற்றார். பெண்கள் பிரிவில் மேகன் ரேப்பினோ இந்த ஆண்டிற்கான விருதைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.