இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரை தமிழகத்திற்குள்ளேயே நுழையவிடக்கூடாது என தமிழக அரசுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக அரசுக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் ‪திரு‬.தி.வேல்முருகன்  வேண்டுகோள் விடுத்து   வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஒன்றரை இலட்சம் ஈழத் தமிழரை இனப்படுகொலை செய்த சிங்கள அரசின் தற்போதைய வெளிவிவகாரத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவை தமிழக முதல்வர் சந்திக்க அனுமதி கோரியுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. அவரை தமிழகத்திற்குள்ளேயே நுழையவிடக்கூடாது. 

சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டிருக்கும்  தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஈழத் தமிழர்களின் வடமாகாண முதல்வர்  விக்னேஸ்வரன்  வாழ்த்து தெரிவித்திருந்தார். 

அதில், எமது மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகவும் அவர்களின் பாதுகாப்புக்காகவும் யுத்தம் நடைபெற்ற காலங்களிலும் யுத்தம் முடிவடைந்த பின்னரும் கொள்கை பிறழாமல் துணிச்சலாகக் குரல் கொடுத்து வந்தவர் ஜெயலலிதா.  

பலகாரணங்களினால் எமது மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்ய முடியாத துர்ப்பாக்கிய நிலையே இங்கு  இருந்துவந்துள்ளது. 

இந்நிலை மாறவேண்டும். ஜெயலலிதா போன்ற மனிதாபிமானமுள்ள தலைவர்கள் எமது மக்களின் விமோசனத்திற்காகப் பாடுபடும் எமக்கு உறுதுணையாக இருப்பர்.

இந்நிலையில்  தமிழக முதல்வர்  ஜெயலலிதாவை சந்திக்க இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீர முயற்சிப்பதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் ஏற்பாடு செய்யும் கருத்தரங்கில் பங்கேற்பதற்காக இம் மாதம் 13,14 திகதிகளில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இந்தியா வருகை தர உள்ளார். அப்போது  தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க அவர் முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் அப்பாவி ஈழத் தமிழர்களை படுகொலை செய்த இரத்தகறைபடிந்த போர்க்குற்றவாளிகளின் கரங்களுடன் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஒருபோதும் கைகுலுக்கவேமாட்டார் என உலகத் தமிழினமே பெரும் நம்பிக்கை வைத்துள்ளது. நிச்சயம் அந்த நம்பிக்கையை  தமிழக முதல்வர் காப்பாற்றுவார்கள் என்பதும் உலகத் தமிழர்களின் எதிர்பார்ப்பு.

அத்துடன் ஈழத் தமிழரை இனப்படுகொலை செய்த இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்; ராஜபக்ஷ உள்ளிட்டோரை போர்க்குற்றவாளிகளாக பிரகடனப்படுத்த வேண்டும்; தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா  நிறைவேற்றிய சட்டமன்றத் தீர்மானங்களை மத்திய அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இத்தருணத்தில் மீண்டும் வலியுறுத்தி சிங்களவருக்கும் மங்கள சமரவீரவுக்கும் பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது எனத் தெரிவித்துள்ளார்.