பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 48 ஓட்ட வித்தியாசத்தில் அவுஸ்திரேலிய அணி அபார வெற்றிப் பெற்றுள்ளது. 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடி வருகிறது. 

இரு அணிகள் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வந்தது. இந்தத் தொடரின் முதல் போட்டியை அவுஸ்திரேலிய அணி வெற்றபெற்றது.

இதனைத் தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலையட் மைதானத்தில் பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடைபெற்றது. 

முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 3 விக்கெட் இழப்பிற்கு 589 ஓட்டங்களை குவித்து முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. 

அதிகபட்சமாக டேவிட் வார்னர் 335 ஓட்டங்களையும், லபுஸ்சனே 162 ஓட்டங்களையும் எடுத்தனர். 

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்ஸில் தொடக்கம் முதலே தடுமாறியது. எனினும் 8 ஆவது வீரராக களமிறங்கிய யாசிர் ஷா மட்டும் சிறப்பாக விளையாடி டெஸ்ட் போட்டிகளில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். 

அவர் 113 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பாபர் அசாம் 97 ஓட்டங்கள் எடுத்தார். இறுதியில், பாகிஸ்தான் அணி 94.4 ஓவர்களில் 302 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 

பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பில் மிட்செல் ஸ்டார்க் அதிகபட்சமாக 6 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதனையடுத்து பாகிஸ்தான் அணிக்கு ஆஸ்திரேலிய ஃபாலோ ஆன் அளித்தது. 

இரண்டாவது இன்னிங்ஸ் ஆடிய பாகிஸ்தான் அணியில் ஷான் மசூத் 68 ஓட்டங்களை சேர்த்தார். அசாத் சஃபிக் 57 ஓட்டங்களை எடுத்தார். மற்ற வீரர்கள் மீண்டும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்த பாகிஸ்தான் அணி 82 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 239 ஓட்டங்களை மட்டும் எடுத்தது. 

இதனால் அவுஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 48 ஓட்ட வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. 

இதன்மூலம் டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் அவுஸ்திரேலிய அணி வென்றது. ஆட்ட நாயகன் மற்றும் தொடரின் நாயகன் விருதினை டேவிட் வார்னர் பெற்றார்.