(எம்.ஆர்.எம்.வஸீம்)

மிலேனியம் செலஞ் கோப்பரேஷன் ஒப்பந்தம் நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாகும் என்ற நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. அரசாங்கம் அதில் உறுதியாக இருக்கின்றது என நீர்வழங்கல் மற்றும் வசதிகள் இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

சோசலிச மக்கள் முன்னணி நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அத்துடன் அரசாங்கத்துக்கு எதிராக பல்வேறு சதித்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக சுவிசர்லாந்து தூதரகத்தில் பணிபுரியும் பெண் ஊழியரை கடத்தியதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக தூதுவரே முறைப்பாடு தெரிவித்திருக்கின்றார். பாதிக்கப்பட்ட பெண் இதுவரை முறைப்பாடு தெரிவிக்கவில்லை. அவரின் உதவி இல்லாததே விசாரணையை கொண்டுசெல்ல முடியாமல் இருக்கின்றது.

மேலும் நடைபாதை வியாபாரிகள் அகற்றப்போவதாகவும் மக்கள் மத்தியில் பொய் பிரசாரங்கள் பரவி வருகின்றன. இதுதொடர்பாகவும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அவர் இதன்போது கூறினார்.