ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பெரும் கலகம் வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது போலவே, அந்தக் கட்சிக்குள் குழப்பங்கள் மேலோங்கியிருக்கின்றன.
சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்வதிலேயே ஐக்கிய தேசியக் கட்சிக்குள் கடுமையான இழுபறி நிலைகள் காணப்பட்டன. ஆனாலும், அவர் தனது பலத்தைப் பிரயோகித்து, வேட்பாளராக தன்னை நிறுத்திக் கொள்வதில் வெற்றி பெற்றிருந்தார்.
உண்மையில் ரணில் விக்கிரமசிங்க அந்த தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்பது தான் உண்மை. ஏனென்றால் அவருக்கு மூன்றாவது தடவையாகவும் தோல்வியடைய விருப்பம் இருக்கவில்லை.
தேர்தல் அறிவிப்பு வெளியாகவிருந்த சூழலில் ரணில் விக்கிரமசிங்க ஒரு கருத்தை வெளியிட்டிருந்தது பலருக்கும் நினைவில் இருந்திருக்கும்.
வெற்றிபெறக் கூடிய வாய்ப்பு இருந்தால், கட்டாயம் நானே போட்டியிடுவேன் என்று அவர் அப்போது குறிப்பிட்டிருந்தார்.
கோத்தாபய ராஜபக் ஷவை எதிர்த்துப் போட்டியிடும் போது தமக்கு சாதகமான நிலை இல்லை என்பதை அவர் புரிந்து கொண்டிருந்தார்.
அதாவது, சிங்கள பௌத்தர்கள் தம்மை அதிகளவில் நம்புகின்ற நிலையில் இல்லை என்பதை அவர் உணர்ந்திருந்தார்.
அதனால், தான் அவர் சஜித் பிரேமதாஸவுக்கு வழிவிடத் தயாராக இருந்தார். அதற்குள்ளாகவே சஜித் பிரேமதாஸ, தானே வேட்பாளர் என்று சுய பிரகடனம் செய்து கொண்டு ஐ.தே.க தலைமையுடன் முரண்டு பிடிக்கத் தொடங்கி விட்டார்.
ஜனாதிபதித் தேர்தலின் முடிவு எவ்வாறு அமையும் என்பதை உணர்ந்து கொண்டே ரணில் விக்கிரமசிங்க போட்டியில் இருந்து விலகிக் கொண்டார்.
அதேவேளை, வேட்பாளராக சஜித்தை நிறுத்துவதற்கு இணங்கிக் கொண்ட ரணில் விக்கிரமசிங்க, 2024 வரை கட்சியின் தலைமைத்துவம் தமக்கே என்பதையும் உறுதி செய்திருந்தார்.
ஆனால், சஜித் பிரேமதாஸ வேட்புமனுத் தாக்கல் செய்த பின்னர், முரண்பட்ட கருத்துக்களை வெளியிட ஆரம்பித்தார். அது ரணில் விக்கிரமசிங்கவையும், அவரது அணியினரையும், அச்சம் கொள்ள வைத்தது.
வெற்றி பெற்றால், பாராளுமன்றத்தில் ஆதரவு பெற்ற ஒருவரை பிரதமராக நியமிப்பேன் என்று அவர் கூறியது ரணில் விக்கிரமசிங்க தரப்புக்கு கடுப்பை ஏற்படுத்தியது.
அத்துடன் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களுக்கு பதவிகள் வழங்கப்படாது என்றும் அவர் கடைசி நேரப் பிரசாரங்களில் கூறத் தொடங்கினார்.
இதன் மூலம் ரணில் விக்கிரமசிங்கவை அவர் ஓரம்கட்டப் போகிறார் என்ற அச்சம், ஐ.தே.கவில் ஒரு பகுதியினரிடம் தீவிரமடைந்தது.
இதனால் தான், ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸ வெற்றி பெற்றாலும் சரி, தோல்வியடைந்தாலும் சரி, ஐ.தே.கவுக்குள் மீண்டும் கலகம் உச்சமடையும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது.
சஜித் பிரேமதாஸ வெற்றி பெற்றிருந்தால் ரணில் விக்கிரமசிங்கவை ஓரம்கட்ட அவர் முயற்சித்திருப்பார். அது கட்சிக்குள் பிளவுகளை ஏற்படுத்தியிருக்கும்.
அவர் தோல்வியடைந்திருக்கும் நிலையில், அவரது அணியினர், ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்துக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தியிருக்கின்றனர்.
சஜித் பிரேமதாஸ தோல்வியடைந்ததும், கட்சியின் பிரதித் தலைவர் பதவியிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்திருந்தார். அடுத்த சில தினங்களில் அவர், சிறுத்தைகளுக்காக வாழ்வை அர்ப்பணிக்கப் போவதாகவும் கூறியிருந்தார்.
அதற்குள்ளாகவே, அவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கான மோதலுக்குத் தயாராகி விட்டார்.
மஹிந்த ராஜபக் ஷ தோல்வியடைந்ததும் சிறிது காலம் ஒதுங்கியிருந்தார். தன்னைத் தேடி வந்தவர்களைச் சந்தித்தார். அவர்களின் கோரிக்கைகளால் மீண்டும் அரசியலுக்கு வருவது போன்ற நிலையை, மெதுமெதுவாக ஏற்படுத்திக் கொண்டார்.
ஆனால், சஜித் அதற்குள்ளாகவே அவசரப்பட்டு மக்களைச் சந்தித்தார். எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கான போட்டியிலும் இறங்கினார்.
கொஞ்சம் தாமதித்தாலும் ரணில் விக்கிரமசிங்க அந்தப் பதவியை கொத்திக் கொண்டு போய் விடுவார் என்ற பயம் அவருக்குள்ளேயும், அவரது ஆதரவாளர்களுக்குள்ளேயும் இருக்கிறது,
இவ்வாறான நிலையில் தான் ஐ.தே.கவுக்குள் பெரும் புயல் வீசி வருகிறது. இந்தப் புயல் அவ்வளவு இலகுவாக ஓயப் போவதில்லை.
ஏனென்றால், ஐ.தே.கவுக்குள் தன்னை மறுசீரமைத்துக் கொள்வதற்கும், அடுத்த அடியைத் தாங்கிக் கொள்வதற்கும் சிறிது காலஅவகாசம் தான் உள்ளது.
பாராளுமன்றத் தேர்தல் எப்படியும் இன்னும் ஆறு மாதங்களுக்குள் நடத்தப்பட வேண்டும். அதில் ஐ.தே.க வெற்றி பெறுவதென்பதை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது,
ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸ தோல்வியடைந்தாலும் கௌரவமான தோல்வியைத் தான் சந்தித்தார் அவருக்கு சுமார் 55 இலட்சம் மக்களின் ஆதரவு கிடைத்திருந்தது.
அந்த கௌரவமான நிலைக்குக் காரணம், தமிழ், முஸ்லிம்களின் வாக்குகள் தான் என்பதில் சந்தேகமில்லை. எனினும், பொதுத்தேர்தல் அவ்வாறானதாக இருக்காது.
சஜித்துக்கு ஆதரவாக வாக்களித்த தமிழர்கள், ஐ.தே.கவுக்கு வாக்களிக்கப் போவதில்லை. அவர்களுக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி என்று பல தெரிவுகள் இருக்கும். அவற்றின் பக்கமே அவர்கள் திரும்புவார்கள்.
கோத்தாபய ராஜபக் ஷவை வரவிடக் கூடாது என்பதற்காக சஜித்துக்கு வாக்களித்த தமிழ், முஸ்லிம் மக்கள், பொதுத் தேர்தலில் பெரும்பாலும், தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்கே வாக்களிப்பார்கள்.
எனவே, ஐ.தே.க எந்தளவுக்கு மோசமான நிலையில் இருக்கிறது என்பதை பொதுத்தேர்தல் தான் வெளிப்படுத்தப் போகிறது.
பொதுத்தேர்தலில் ஐ.தே.க வெற்றிபெற முடியாது. ஏனென்றால் ஜனாதிபதித் தேர்தலில் கிடைத்த வெற்றி பொதுஜன பெரமுனவுக்கு சாதகமானது. தேர்தல் நடக்கும் போது ஆட்சியில் இருக்கும் அரசாங்கமும் அவர்களினதாகவே இருக்கப் போகிறது.
ஐ.தே.க மீது சிங்கள பௌத்த மக்கள் நம்பிக்கையிழந்து விட்டார்கள் என்ற அடையாள முத்திரை குத்தப்படும் போது, ஏற்கனவே சஜித்துக்கு வாக்களித்தவர்களும் கூட, ஐ.தே.கவுக்கு வாக்களிக்க முன்வருவார்களா என்ற கேள்வி இருக்கும்.
இப்படிப் பல்வேறு காரணிகளால், ஐ.தே.க மீண்டும் ஆட்சியமைக்கும் வாய்ப்பு கிட்டாது.
இந்த நிலையில் ஐ.தே.கவுக்குள் முரண்பாடுகளும் பூசல்களும் மேலோங்கும் போது, நிலைமை இன்னும் மோசமடையும்.
கடந்த ஆண்டு ஒக்டோபர் ஆட்சிக்
கவிழ்ப்பின் போது, ஐ.தே.கவின் பெரும்பாலான உறுப்பினர்களை விலைக்கு வாங்க முயற்சிகள் நடந்தன
பேரம் பேசல்கள் நிகழ்ந்தன. ஆனாலும் பெரும்பாலானவர்கள் அந்தப் பக்கம் சாயத் தயாராக இருக்கவில்லை.ஆனால் வரும் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அவ்வாறான நிலை இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.
ஏனென்றால் பொதுத்தேர்தலில் மஹிந்த தரப்புக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் கிடைக்காது போனால், குதிரை பேரம் நடக்கும் என்பதில் ஐயமில்லை.
ஏனென்றால் 19 ஆவது திருத்தச்சட்டத்தை ஒழிப்பது அல்லது அதில் திருத்தங்களைச் செய்வது தான் பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவின் இலக்கு.
இதனை அவரும், பசில் ராஜபக் ஷவும், ஜனாதிபதித் தேர்தல் வெற்றிக்குப் பின்னர் மிகத் தெளிவாக கூறியிருந்தனர்.
19 ஆவது திருத்தச்சட்டத்தை ஒழிப்பதன் மூலமே, மஹிந்த ராஜபக் ஷ தனது வாரிசுகளின் அரசியலை நிலைப்படுத்த முடியும். அதற்காக அவர்கள் எந்த நிலை வரைக்கும் செல்லத் தயாராக இருப்பார்கள்.
18ஆவது திருத்தச்சட்டத்தை கொண்டு வருவதற்காக ஐ.தே.க உடைக்கப்பட்டது. இணைய மறுத்த சிறுபான்மைக் கட்சிகள் உடைக்கப் போவதாக மிரட்டிப் பணிய வைக்கப்பட்டன. அதுபோன்றதொரு நிலை வரும் பொதுத் தேர்தலுக்குப் பின்னரும் ஏற்படலாம்.
மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பொதுஜன பெரமுன பெறாது போனால், குதிரை பேரங்கள், அச்சுறுத்தல்களின் மூலம், ஆட்கள் இழுக்கப்படுவார்கள்.
அவ்வாறான ஒரு நிலை ஏற்பட்டால், அது ஐ.தே.கவுக்கு இன்னும் கடுமையான சோதனையாகவே அமையும்.
ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின் போது, சரத் பொன்சேகா போன்ற ஐ.தே.க தலைவர்கள் சிலர், இம்முறை தோல்வியடைந்தால் ஐ.தே.கவினால் 25 ஆண்டுகளுக்கு ஆட்சிக்கு வரமுடியாது என்று கூறியிருந்தனர்.
இப்போதும் கூட பலரும், இன்னும் குறைந்தது 10 ஆண்டுகளுக்கு ஐ.தே.க ஆட்சிக்கு வரமுடியாது என்றே ஆரூடம் சொல்கிறார்கள். அது 5 ஆண்டுகளாகவும் இருக்கலாம், 25 ஆண்டுகளாகவும் இருக்கலாம்.
இதனை தீர்மானிக்கப் போவது, தனியே பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் அணுகுமுறைகள் மாத்திரம் இருக்காது, ஐ.தே.கவின் அடுத்த கட்ட நகர்வுகளும், அணுகுமுறைகளும் கூட அதில் செல்வாக்குச் செலுத்தப் போகிறது.
ஐ.தே.க தன்னை மறுசீரமைத்துக் கொண்டு எல்லா தரப்பு மக்களினதும் நம்பிக்கையைப் பெற்ற கட்சியாக மாற வேண்டும். அதனை செய்யாமல், மீண்டும் ஆட்சிபீடம் ஏறுவதை இப்போதைக்கு நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.
- சத்ரியன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM