முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் புதிய மாற்று அணியை கொண்ட கூட்டு விரைவில் உருவாகும் என்று தெரிவித்த ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், இரண்டரைக்கட்சிகளை கொண்டதே தமிழ் தேசியக்கூட்டமைப்பு எனவும் விமர்சித்துள்ளார்.
வவுனியாவில் உள்ள தனியார் விடுதியொன்றில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மத்தியகுழு நேற்று கூடியது. அதன் நிறைவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,
ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னரான அரசியல் நிலைவரங்கள், கள நிலைவரங்கள் பற்றி வடக்கு–கிழக்கு மாகாணங்களின் பல மாவட்டங்களிலிருந்து வந்த எங்களது மத்தியகுழு உறுப்பினர்கள் தங்களுடைய கருத்துக்களை பரிமாறியிருந்தனர். இதன்போது எதிர்வரும் மாகாணசபை மற்றும் பாராளுமன்ற தேர்தலில் முகம்கொடுப்பதற்கு எவ்வாறான ஏற்பாடுகளை செய்வது என்பது தொடர்பாகவும் நாங்கள் பல கருத்துப்பரிமாற்றங்களை செய்திருந்தோம்.
இதனூடாக தமிழர்களுக்கு மாற்றுத்தலைமையொன்று தேவை என்பதனை அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். அந்தவகையில் மாற்று அணிக்கான செயற்பாட்டை நாங்கள் முன்னின்று செயற்படுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு பலவீனமான நிலையில் அதிலும் இரண்டரைக்கட்சிகளுடன் அங்கம் வகிக்கும் நிலையில் உள்ளது. ஆகவே அவர்களுடைய தவறுகள் அவர்களுக்கு தமிழ் மக்கள் கொடுத்த ஆணைகளை கைவிட்டு செயற்பட்ட விதங்கள், அரசாங்கத்தினை பாதுகாப்பதே அவர்களது நோக்கமாக இருந்த நிலைவரங்கள், இவை எல்லாவற்றையும் நாங்கள் கவனத்தில் எடுத்து மாற்று தலைமை அவசியம் என்பது எங்கள் எல்லோராலும் உணரப்பட்டுள்ளது.
நாங்கள் ஒட்டுமொத்தமான தமிழ் கட்சிகளின் ஐக்கியத்திற்கு எதிரானவர்கள் அல்ல. திம்பு பேச்சுவார்த்தையிலிருந்து தமிழ் மக்கள் தமிழ் கட்சிகள் ஐக்கியப்படவேண்டும் என்பதில் நாங்கள் மிகவும் உறுதியாக இருந்திருக்கின்றோம். அதற்காக முன்னின்று பணியாற்றியிருக்கின்றோம். தற்போதும் அந்த விடயங்களுக்கு நாங்கள் எதிரானவர்கள் கிடையாது. தமிழ் மக்களின் உரிமைகள் வெல்லப்படுவதற்கு ஓரணியில் நிற்கவேண்டும் என்பதில் எமக்கு மாற்றுக்கருத்துக்கள் இல்லை.
ஆனால் தமிழ் தேசியக்கூட்டமைப்பு என்பது அதற்கு உகந்த ஸ்தாபனமாக தன்னை மாற்றிக்கொள்ளவில்லை. அதுவே பரவலான குற்றச்சாட்டாகவும் உள்ளது. 15 வருடங்களுக்கு மேற்பட்ட அந்த ஸ்தாபனத்திற்கான யாப்போ அதற்கான வடிவமோ அதற்கான உயர்மட்ட குழுக்களோ இல்லாமல் ஓரிருவர் மாத்திரம் முடிவெடுக்கும் அமைப்பாகவும் தேர்தலுக்கு மாத்திரம் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக ஐக்கியத்தினைப்பற்றி பேசுகின்ற நிலைமைதான் தோன்றியிருக்கின்றது.
ஆகவே இவற்றினை எல்லாம் கவனத்தில் எடுத்து ஒரு மாற்றுத்தலைமை தேவை என்பதனை இன்றைய எமது மத்திய குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அது தொடர்பான நடவடிக்கைகளை எமது கட்சி முன்னெடுத்துச் செல்லும்.
இந்தவகையில் வடக்கிலும் கிழக்கிலும் உள்ள அரசியல் நிலைமைகள் என்பது வித்தியாசப்படுகின்றன. கிழக்கிலே ஏனைய தேசிய இனங்களால் அவர்களுடன் சேர்ந்து வாழ்வதால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளுக்கு அவர்கள் முகம் கொடுத்து வருகின்றனர். கடந்த காலங்களில் மிக மோசமாக தமிழர் தரப்பு பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே கிழக்கு மாகாணத்தில் மாகாணசபையில் தமிழ் தலைமைத்துவம் தேவை என்பதிலும் கட்சி மிக உறுதியாக உள்ளது.
ஆகவே தேர்தல் வருகின்றபோது அதற்கேற்றவகையில் எமது வியூகங்கள் அமையும். தமிழர்களது நலன்கள் பாதிக்கப்படக்கூடாது. தமிழர்களின் நலன் பாதுகாக்கப்படவேண்டும். அந்த அடிப்படையிலிருந்து எமது முடிவுகள் எட்டப்படவேண்டும் என்ற கருத்தும் சொல்லப்பட்டுள்ளது. ஆகவே எமது முடிவுகள் அனைத்தும் வடக்கிலோ கிழக்கிலோ தமிழ் மக்களின் அரசியல் இருப்பு பொருளாதார அபிவிருத்தி அனைத்தையும் மையமாக வைத்ததாக இருக்கும்.
இந்நிலையில் கிழக்கு மாகாணத்தில் தமிழ் தலைமைத்துவம் மாகாணசபையில் தேவை என்பதற்காக தமிழ் தேசியக்கூட்டமைப்புடன் செல்வதற்கான வாய்ப்புக்கள் ஏற்படலாமா என ஊடகவியலாளர் கேட்டபோது,
அந்த நேரத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு என்னவிதமான முடிவுகளை எடுக்கப்போகின்றது என்பதில்தான் இது தங்கியிருக்கின்றது. தமிழ் தேசியக்கூட்டமைப்பு வாயளவில் தற்போது ஐக்கியம் பற்றி பேசுகின்றது. சுமந்திரன் சில நாட்களுக்கு முன்பாக ஐக்கியத்தினைப்பற்றி பேசியிருந்தார். ஆனால் ஐக்கியத்தினை உருவாக்குவதற்கு ஏதுவான நிலை கூட்டமைப்புக்குள் இல்லை. அவ்வாறான சூழ்நிலையில் ஐக்கியம் பற்றி பேசப்படுகின்றபோது அதற்கு தகுந்ததாக அந்த அமைப்பு மாற்றப்படவேண்டும் என்பதே உண்மை. ஆகவே அவை அனைத்தும் மாற்றப்பட்டு வருகின்றபோது நிச்சயமாக அதனைப்பற்றி ஆய்வு செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்றார்.
இந்நிலையில் உங்களது அரசியல் எவ்வாறு அமையப்போகின்றது என கேட்டபோது?
தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை ஒருபுறம் அபிவிருத்தி மறுபுறம் என்பதாக உள்ளது. தேசிய இனப்பிரச்சினை தொடர்பாக தமிழ் தேசிய எல்லைக்குள் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் ஒருமித்த கருத்து இருக்கின்றது. அவற்றை அடைவதற்கான வியூகங்களை அமைப்பதும் வேலைத்திட்டங்களை உருவாக்குவதும் அவற்றை செயல்முறைப்படுத்துவதும் நாங்கள் கூட்டாக எடுக்க வேண்டிய விடயங்களாகும். நிச்சயமாக அந்த முடிவுகள் கூட்டாக எடுக்கப்படும்.
அபிவிருத்தி என்று வருகின்றபோது வடக்கு மாகாண அபிவிருத்தி, கிழக்கு மாகாண அபிவிருத்தி என இருக்கின்றது. கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் புறந்தள்ளப்பட்டிருக்கின்றார்கள். அதுபோல வடக்கிலும் போரால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கும் அபிவிருத்தி கிடைக்காமல் உள்ளது.
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷவுடன் கலந்துரையாடுவீர்களா என கேட்டபோது?
கோத்தபாய ராஜபக் ஷ என்பவர்தான் இந்த நாட்டின் ஜனாதிபதி. ஆகவே அந்த ஜனாதிபதியுடன் பேசக்கூடாது என யாரும் சொன்னால் அது சரியான கருத்தாக இருக்க முடியாது. அது அபிவிருத்தியாக இருந்தாலும் சரி அரசியலாக இருந்தாலும் சரி. அவர் இந்தியாவுக்கு சென்றபோது மோடி இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அவரிடம்தான் சொல்லியிருக்கின்றார். அவர் தீர்ப்பாரா இல்லையா என்பது வேறு பிரச்சினை. ஆகவே அவருடன் பேச வேண்டிய தேவை சகலருக்கும் இருக்கின்றது. நாங்கள் இலங்கை பிரஜை என்ற அடிப்படையில் தமிழ் மக்களை பிரதிநிதிப்படுத்துபவர்கள் என்ற வகையில் அவருடன் பேச வேண்டி ஏற்பட்டால் பேசத்தான் வேண்டும். பேசுவது தவறு என்றும் கருதவில்லை.
முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் ஒரு கூட்டு உருவாகுமா? அதனை ஏற்பீர்களா?
நிச்சயமாக அவ்வாறான கூட்டு மிக விரைவில் உருவாகும் எனவும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM