உலகின் வெப்பநிலை உயர்வானது, துருவப்பிரதேச பனிப்பாறைகள் உருகுவதற்கும் கடல்நீர் மட்டம் உயர்வடைவதற்கும் காரணமாகியுள்ளது.

இதனால், உலகளவில் பல நாடுகளின் பெரும் பகுதி கடலில் மூழ்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இவ் எச்சரிக்கைகளுக்கு அமைய பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள சிடியோ பரிஹான் என்ற கிராமம்  ஆண்டுதோறும்  4 சென்ரி மீற்றர் வரை கடலில் மூழ்கிக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மணிலாவில் இருந்து சுமார் 17 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள சிடியோ பரிஹான் கிராமமானது ஒரு காலத்தில் தீவாக இருந்துள்ளது.   

2011 ஆம் ஆண்டில்  (டைபூன் நேசாட் ) எனப்படும் மிகவும் சக்திவாய்ந்த வெப்பமண்டல சூறாவளி தாக்கியதில் குறித்த தீவின் பெரும்பகுதி அழிவடைந்துள்ளது. 

அதனைத் தொடர்ந்து உலக வெப்பமாதல் காரணமாக உயர்ந்து வரும் கடல்நீர் மட்டம் இந்த கிராமத்தை  நிலப்பரப்பே இல்லாத  கடலில் மிதக்கும் கிராமமாக மாற்றியுள்ளது.

இங்கு வாழும் மக்கள் தமது நன்னீர் தேவையை ஒரே ஒரு கிணற்றில் இருந்து பெற்று கொள்கின்றனர். அத்துடன் இவர்கள் தமது அடிப்படைத் தேவைகளுக்காக பெரும் சவாலை எதிர்கொள்கின்றனர். இந்த கிராமத்திற்கு சூரிய மின்சக்தி மூலமே மின்சாரம் வழங்கப்படுகின்றது. 

இந்த கிராமத்தின் பாடசாலை,  தேவாலயம், நீதிமன்றம் என்பன கடலால் உள்வாங்கப்பட்டுள்ள  நிலையில் இங்குள்ள மாணவர்கள் பாடசாலைக்கு செல்ல 30 நிமிடம் வரை படகில் பயணிக்கின்றனர்.

பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள இந்த கிராமவாசிகள் தமது  ஜீவனோபாயத்திற்காக வேறு எங்கும் செல்ல முடியாமல் அங்கேயே வசித்து வருகின்றனர். அத்துடன் கடலின் நீர்மட்டத்தின் உயரத்திற்கு ஏற்ப  தமது வீடுகளை மூங்கில்களைக் கொண்டு உயர்த்தி வருகின்றனர்.

இருப்பினும் இது நிரந்தர தீர்வாக அமையாது  எனவும் விரைவில் இந்த கிராமம் முழுமையாகக் கடலில் மூழ்கி விடும் எனவும் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.