மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் பிரையன் லாராவின் சாதனையை இந்திய அணியின் ரோகித் சர்மா முறியடிப்பார் என டேவிட் வோர்னர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிராக அடிலெய்டில் நடந்து வரும் பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல் இன்னிங்சில் அவுஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் ஆட்டமிழக்காது 335 ஓட்டங்களை குவித்தார்.

பிரையன் லாரா, இங்கிலாந்துக்கு எதிராக கடந்த 2004 ஆம் ஆண்டு 400 ஓட்டங்களை பெற்றார். இதுவே டெஸ்ட் வரலாற்றில் தனிநபர் ஒருவர் பெற்ற அதிகபட்ச ஓட்டமாகவுள்ளது.

லாராவின் இந்த சாதனையை வோர்னர் முறியடிக்க வாய்ப்பு உருவான நிலையில், திடீரென அவுஸ்திரேலிய அணித் தலைவர் டிம் பெய்ன் ‘டிக்ளேர்’ செய்து விட்டார்.

இந் நிலையில் எதிர்வரும் காலங்களில் லாராவின் சாதனையை முறியடிக்க எந்த வீரர்களுக்கு வாய்ப்பு உள்ளது என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. 

அதற்கு பதிலளித்த வோர்னர்,

‘லாராவின் சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ள வீரர் ஒருவரின் பெயரை சொல்ல வேண்டும் என்றால், எனது கணிப்புபடி அது இந்திய வீரர் ரோகித் சர்மாவாகத் தான் இருக்கும். நிச்சயம் அவரால் இச்சாதனையை நிகழ்த்த முடியும்’ என்றார்.

அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் விளையாட என்னை அதிகமாக ஊக்குவித்தவர், இந்தியாவின் ஷேவாக். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி அணிக்காக விளையாடிய போது ஒரு முறை எனது அருகில் அமர்ந்திருந்த ஷேவாக் என்னிடம், ‘20 ஓவர் போட்டி வீரரை காட்டிலும் சிறந்த டெஸ்ட் வீரராக நீங்கள் உருவெடுப்பீர்கள்’ என்று தெரிவித்ததாகவும் வோர்னர் இதன்போது கூறினார்.