(பா.ருத்ரகுமார்)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்ப ஆட்சியை வேறோடு அழித்த போதும் தற்போதுள்ள சுகாதார அமைச்சரின் குடும்ப ஆட்சியை அழிக்க முடியாதுள்ளது. தனது மனைவி மற்றும் மகனின் பேச்சுக்கு தலையாட்டுபவராக சுகாதார அமைச்சர் இருப்பாராக இருந்தால் குறித்த அமைச்சை அவரின் மனைவியிடம் கொடுத்துவிட்டு போகலாம் என  அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.  

மேலும் தொழிற்சங்க போராட்டத்தை மேற்கொண்டு பொதுமக்களை நிர்க்கதிக்குள்ளாக்கும் எந்த நோக்கமும் எமக்கில்லை. இதனாலேயே வெள்ள அனர்த்தங்களில் சிக்குண்ட மாவட்டங்களில் நாம் எவ்விதமான தொழிற்சங்க நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை. 

இவ்வாறான நிலையில்  சுகாதார அமைச்சராக இருந்துக்கொண்டு அவ்வமைச்சின் பணிப்பாளரினூடாக கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளம் ஏற்படவில்லை எனவும் முடிந்தால் அம்மாவட்டத்தில் தொழிற்சங்க போராட்டத்தை மேற்கொண்டு பாருங்கள் என்றும்  எமக்கு சவால் விடுக்கின்றமை பெரும் அநாகரிமான செயலாகும் எனவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.  

வெள்ளப்பாதிப்பு ஏற்பட்ட பிரதேசங்களையே அடையாளம் காணமுடியாத அமைச்சரும் அவருக்கு வாலாட்டி பின்செல்லுபவர்களினாலும்   சுகாதார சேவை அழிவடைவது உறுதியாகும். 

எனவே அதனை பாதுகாக்கவே நாம் தற்போது போராடி வருகின்றோம்.  இந்த போராட்டத்தை ஒரு நாள் பணி பகிஷ்கரிப்பாக நீடிப்பது தொடர்பிலும் நாளை முடிவெடுப்போம் என  சங்கத்தின் செயளாளர் வைத்தியர்  நவீன் சொய்சா தெரிவித்தார்.

தொழில்சார் நிபுணர்கள் அமைப்பின் கேட்போர் கூடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே    அவர் மேற்கண்டவாறு   குறிப்பிட்டார்.