-ரொபட் அன்டனி

இலங்­கையில் புதிய அர­சாங்கம் பத­வி­யேற்­றுள்ள  இந்த முக்­கி­ய­மான   மற்றும்   மாற்­ற­மான புதிய  அர­சியல் சூழலில்  ஐக்­கிய நாடுகள் மனித உரிமைகள் பேர­வையின்  43ஆவது கூட்டத் தொடர்   அடுத்த வருடம்  பெப்­ர­வரி மாதம் 24ஆம் திக­தி­யி­லி­ருந்து மார்ச் மாதம்  20ஆம் திக­தி­ வரை நடை­பெ­ற­வுள்­ளமை  பாதிக்­கப்­பட்ட மக்­களைப் பொறுத்­த­வரை தீர்க்­க­மா­ன­தாக உள்­ளது.  யுத்­தத்­தால் பாதிக்­கப்­பட்ட  மக்­க­ளுக்­கான  நீதியை  நிலை­நாட்டும்  விட­யத்தில்  மிகவும்  முக்­கி­யத்­துவம்  மிக்­க­தாகக்  கரு­தப்­படும்  மற்றும் கடந்த காலங்­களில் பாரிய சர்ச்­சை­களை ஏற்­ப­டுத்­திய இலங்கை  தொடர்­பான  ஜெனிவா  பிரே­ரணை குறித்தும் இந்தக்  கூட்டத்  தொடரில் பிரஸ்­தா­பிக்­கப்­ப­ட­வுள்­ளது.    

புதிய ஜனா­தி­பதி   பத­வி­யேற்று புதிய அர­சாங்­கத்­தையும் அமைத்­துள்ள    நிலையில்  அவரின் அணு­கு­முறை   இந்த ஜெனிவா பிரே­ரணை விட­யத்தில்   எவ்­வாறு அமையும்  என்­பதை    அனைத் துத் தரப்­பி­னரும்  எதிர்­பார்த்து  இருக்­கின்­ற னர். அதா­வது இலங்கை குறித்த பிரே­ரணை தொட­ருமா? அல்­லது அகற்­றப்­பட்­டு ­வி­டுமா? அல்­லது  மாற்று யோச­னைகள் முன்­வைக்­கப்­ப­டுமா? போன்ற விட­யங்கள் குறித்துப் பேசப்­ப­டு­கின்­றன. 

 ஏற்­க­னவே  இந்தப் பிரே­ர­ணையை விட்டு  இலங்கை   வெளி­யேற   வேண்டும் என்ற கோரிக்­கைகள்  அர­சாங்க மட்­டத்தில்  தெரி­விக்­கப்­பட்டு  வரும் சூழலில்   இந்தக் கூட்டத் தொடர் நடை­பெ­ற­வுள்­ளது. இந்தக் கூட்டத் தொட­ரின்­போது   ஐக்­கிய நாடுகள்  மனித உரிமைகள் ஆணை­யாளர்  மிச்செல் பச்லெட் இலங்கை தொடர்­பான  ஓர் இடைக்­கால  அறிக்­கையை   வெளி­யிட இருக்­கின்றமை விசேட அம்­ச­மாகும்.    அதில்   உண்­மையைக்  கண்­ட­றிதல்,  மற்றும்  நீதி வழங்­குதல் தொடர்பில் கடும் அழுத்­தங்­களை   ஐ.நா. மனித உரிமை கள் ஆணை­யாளர்  பிர­யோ­கிப்பார்  என பர­வ­லாக எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. 

அதே­போன்று  அர­சாங்­கமும்  தனது மாற்று ஏற்­பாட்டை இந்த  ஜெனிவா கூட்டத் தொடரில் முன்­வைக்கும் என்றும் பர­வ­லாக எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.  அதா­வது  தற்­போது  அமுலில் இருக்கும்  இலங்கை குறித்த  பிரே­ரணை  தம்மால் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என்றும்  அதற்குப் பதி­லாக புதிய திட்­ட­மொன்­றுக்குச் செல்­லலாம் என்ற  யோச­னையை  அர­சாங்கம்  அடுத்த ஜெனிவா கூட்­டத்­தொ­டரில்  முன்­வைக்கும் என்றும்  எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. 

  கடந்த  2015ஆம் ஆண்டு இலங்­கையில் புதிய அர­சாங்கம்  அதி­கா­ரத்­துக்கு வந்த பின்னர்  நடை­பெற்ற  ஜெனிவா மனித உரிமைகள் பேர­வையின் 30ஆவது கூட்டத்  தொடரில் இலங்கை குறித்த  30–1  என்ற பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்­டது. அப்­போது ஆட்­சியில் இருந்த  நல்­லாட்சி  அர­சாங்கம் இந்தப்  பிரே­ர­ணைக்கு  இணை அனு­ச­ரணை  வழங்­கி­யி­ருந்­தது.   யாரும் எதிர்­பார்க்­காத  வகை­யி­லேயே  இந்தப் பிரே­ர­ணைக்கு  அப்­போ­தைய  இலங்கை  அர­சாங்­கத்­தால்  அனு­ச­ரணை    வழங்­கப்­பட்­டது.  பல்­வேறு விட­யங்கள்   இந்தப் பிரே­ர­ணையில்  உள்­ள­டக்­கப்­பட்­டி­ருந்­தன.  முக்­கி­ய­மாக 20 பரிந்­து­ரைகள்  பிரே­ர­ணையில் இடம்­பெற்­றி­ருந்த நிலையில்  பொறுப்­புக்­ கூறல் பொறி­மு­றையில்  வெளி­நாட்டு நீதி­ப­திகள்  இடம்­பெ­ற ­வேண்டும் என்­பது மிக முக்­கி­ய­மான பரிந்­து­ரை­யாக  பார்க்கப்­பட்­டது.  அது­மட்­டு­மன்றி  காணாமல் போனோர் விவ­காரம், அர­சியல்  கைதிகள்  விடு­தலை விடயம், காணி விடு­விப்பு  உள்­ளிட்ட பல்­வேறு பரிந்­து­ரை­களும் இதில் இடம்­பெற்­றி­ருந்­தன. அவற்றை இரண்டு வரு­டங்­களில்   நிறை­வேற்று­வ­தாகக் கூறியே இலங்கை அர­சாங்கம் இந்தப் பிரே­ர­ணைக்கு அனு­ச­ரணை வழங்­கி­யது.

அமெ­ரிக்கா,  பிரிட்டன் உள்­ளிட்ட  நாடுகள்  இந்தப் பிரே­ர­ணையைத் தயா­ரித்து மனித உரிமைகள் பேர­வையில் சமர்ப்­பித்­தி­ருந்­தன. எனினும்  குறிப்­பிட்ட இரண்டு வருட காலத்தில்  பிரே­ரணை அமுல்­ப­டுத்­தப்­ப­டா­த­தால்   மீண்டும் 2017ஆம் ஆண்டு ஜெனி­வாவில் நடை­பெற்ற அதன்  34ஆவது  கூட்டத்  தொடரில் அந்தப் பிரே­ரணை   34–1 என்ற பெயரில்   இரண்டு வரு­டங்­க­ளுக்­காக நீடிக்­கப்­பட்­டது.  அந்த நேரத்தில்  ஜெனிவா  மனித உரிமைகள் பேர­வையில் ஒரு திருப்பு­மு­னையும் இடம்­பெற்­றது.  அதா­வது  2015ஆம் ஆண்டில்   இலங்கைப் பிரே­ர­ணையை முன்­னின்று கொண்­டு­வந்த அமெ­ரிக்கா  மனித  உரிமைகள் பேர­வை­யி­லி­ருந்து  வில­கு­வ­தாக அறி­வித்­தது. மனித உரிமைகள் பேரவை மீது கடும் விமர்­ச­னங்­களை முன்­வைத்தே அமெ­ரிக்கா அதி­லி­ருந்து வில­கு­வ­தாக அறி­வித்­தது. 

  எனினும் பிரிட்டன்  மற்றும்  ஜெர்மன் ஆகிய நாடுகள் முன்­னின்று இலங்கை குறித்த    பிரே­ர­ணையை   நீடிப்­ப­தற்­கான  செயற்­பாட்டை முன்­னெ­டுத்­தி­ருந்­தன.      அதற்­க­டுத்த இரண்­டு ­வ­ரு­ட­ கா­லத்­திலும்      இந்தப் பிரே­ரணை இலங்­கை­யினால் முழு­மை­யாக  அமுல்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.    ஒரு  சில நட­வ­டிக்­கைகள்  எடுக்­கப்­பட்­டி­ருந்­தன. குறிப்­பாக  காணாமல் போனோர் அலு­வ­லகம்  மற்றும் நட்­ட­ஈடு வழங்கும்  அலு­வ­லகம் ஆகி­யன நிறு­வப்­பட்­டன.    உண்­மையைக்  கண்­ட­றியும் ஆணைக்­ கு­ழுவை  நிய­மிக்கும்  நட­வ­டிக்­கை­களும்   எடுக்­கப்­பட்­டி­ருந்­தன.  

எனினும் ஜெனிவா பிரே­ரணை முழு­மை­யாக  அமுல்­ப­டுத்­தப்­ப­டா­ததன் கார­ண­மாக  இவ்­வ­ருடம் மார்ச் மாதம் நடை­பெற்ற ஜெனிவா மனித உரிமைகள் பேர­வையின் 40ஆவது கூட்டத் தொடரில் குறித்த பிரே­ரணை 40 –1 என்ற பெயரில்  மீண்டும் இரண்டு வரு­டங்­க­ளுக்­காக நீடிக்­கப்­பட்­டது. இம்­மு­றையும்  பிரிட்டன் முன்­னின்று பிரே­ர­ணையை நீடிக்கும் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­தி­ருந்­தது.  அதன்­படி எதிர்­வரும் 2021ஆம் ஆண்­டு­ வரை இந்தப் பிரே­ரணை நடை­மு­றையில்  இருக்கும். 

இந்தச் சூழ­லி­லேயே    2020 ஆம்  ஆண்டு மார்ச் மாதம் நடை­பெ­ற­வுள்ள 43ஆவது கூட்டத் தொடரில் இந்தப் பிரே­ரணை அமு­லாக்கம் குறித்து  ஐக்­கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணை­யாளர் அறிக்கை ஒன்றை சமர்ப்­பிக்­க­வுள்ளார்.    இந்தப் பிரே­ரணை 2015ஆம் ஆண்டு முதன்­மு­த­லாக ஜெனிவா  மனித உரிமைகள் பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட போது அப்­போ­தைய  கூட்டு எதி­ரணி   கடு­மை­யாக எதிர்த்­தி­ருந்­தது.  குறித்த பிரே­ரணை ஊடாக நாட்டின் இறைமை கேள்­விக்­கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­பட்­டன. இந்த நிலையில் அதனை கடு­மை­யாக எதிர்த்த அப்­போ­தைய கூட்டு எதி­ரணி இன்று  ஆட்­சிக்கு வந்­துள்ள நிலையில்  இந்த ஜெனிவா பிரே­ர­ணையின் அடுத்த  கட்டம் என்ன  என்­பது தொடர்­பான  கேள்­விகள் எழுந்­துள்­ளன.  

அதா­வது புதிய  அர­சாங்கம்  இந்தப் பிரே­ர­ணையை  முன்­கொண்டு செல்­லுமா?   அல்­லது  முற்­றாக இரத்து செய்­து­வி­டுமா? அல்­லது   இதற்­காக  ஒரு மாற்றுத் திட்­டத்தை முன்­னெ­டுக்­குமா? போன்ற கேள்­வி­களே  எழுந்­துள்­ளன.  

ஒரு­புறம்  பாதிக்­கப்­பட்ட மக்கள்  நீதிக்­காக  காத்­துக்­கொண்­டி­ருக்­கின்ற நிலையில்     புதிய நிலைமை உரு­வா­கி­யி­ருக்­கி­றது.   தமது உற­வு­களை தொலைத்­து­விட்ட மக்கள்   அவர்­க­ளுக்கு  என்ன நடந்­தது என்­பதை   வெளிப்­ப­டுத்­து­மாறு   கோரி­ வ­ரு­ கின்­றனர்.  அர­சாங்கம்  அடுத்து  என்ன செய்­யப்­போ­கி­றது என்­பதே பிர­தான கேள்­வி­யாக  எழுந்துள்ள நிலையில் புதிய அர­சாங்­கத்தின்  அமைச்­சர்­களது  கருத்­துகள்  மூலம் அடுத்து என்ன நடக்­கப்­போ­கின்­றது  என்­பதை ஊகிக்க முடி­கின்­றது. 

இராஜாங்க அமைச்சர்  கெஹெ­லிய ரம்­புக்­வெல  இது தொடர்பில் தெரி­வித்­துள்ள விட­யங்கள்  இவ்­வாறு அமைந்­துள்­ளன. 

"இந்த  ஜெனிவா பிரே­ரணை முழு­மை­யாக மீளாய்வு செய்­யப்­ப­டு­வது அவ­சி­ய­மாகும்.  2015 ஜெனிவா பிரே­ர­ணைக்கு அமைச்­ச­ர­வையின் அனு­மதி இன்­றியே  அப்­போ­தைய அர­சாங்கம் இணை அனு­ச­ரணை வழங்­கி­யது. பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்­டதன் பின்னர் அப்­போ­தைய ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சேன,  பிரே­ர ணையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­வாறு  வெளிநாட்டு நீதி­ப­தி­களை ஒரு­போதும் இலங்­கைக்குள் அனு­ம­திக்­க­ மாட்டேன்  என்று  குறிப்­பிட்­டி­ருந்தார்.   இவை எல்­லா­வற்­றையும் விட முக்­கி­ய­மாக இந்தப் பிரே­ர­ணையை முன்­னின்று கொண்­டு­வந்த  அமெ­ரிக்கா  ஜெனிவா மனித உரிமைகள் பேரவை மீது கடும் விமர்­ச­னங்­களை வெளி­யிட்­டு ­விட்டு அதி­லி­ருந்து வெளியே­றி­ விட்­டது.  எனவே இலங்கை குறித்த இந்தப் பிரே­ரணை விட­யத்­தில் பல  முரண்­பா­டு­களும் சர்ச்­சை­களும் உள்­ளமை தெளிவா­கின்­றது. அதனால்  இதனை முழு­மை­யாக மீளாய்வு செய்­ய­ வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். இந்தப் பிரே­ர­ணையை  அகற்­றி­விட முடி­யாது. இதில் எம்மால் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய சில விட­யங்கள் உள்­ளன. அவற்றை நாம் செய்­யலாம்.  ஆனால் சர்ச்­சைக்­கு­ரிய விட­யங்கள் பல உள்­ளன. அதனால் அதனை  முழு­மை­யாக மீளாய்வு செய்­ய ­வேண்டும் என்­பதே எமது நிலைப்­பா­டாகும்’’  இவ்­வாறு இரா­ஜாங்க அமைச்சர் கெஹெ­லி­ய ­ரம்­புக்­வெல   குறிப்­பிட்­டி­ருக்­கிறார்.    

ஜனா­தி­பதி கோத்­த­பாய அர­சா­ங்கத்தில் முக்­கிய அமைச்­ச­ராகப் பார்க்­கப்­படும் கெஹெ­லிய ரம்­புக்­வெல இந்த விட­யத்தை முன்­வைத்­துள்ளார்.  

இதே­வேளை   வெளி­வி­வ­கார அமைச்சர் தினேஷ்  குண­வர்த்­தன  இந்தப் பிரே­ரணை தொடர்பில் இவ்­வாறு   குறிப்­பிட்­டி­ருக்­கின்றார்.  

அதா­வது "கடந்த காலத்தில், 2015ஆம் ஆண்டில் அர­சாங்கம் ஜெனி­வாவில் முன்­னெ­டுத்த நகர்­வுகள் முற்­றிலும் தவ­றா­ன­வை­யாகும். இது ஏற்­று­க்கொள்ள முடி­யா­தவை என நாம் தொடர்ச்­சி­யாகக்  கூறி வந்­துள்ளோம். போர்க்­குற்­றங்களை நிரூபிக்க எந்த ஆதா­ரங்­களும் இல்­லாது வெறு­மனே ஒரு சிலர் கூறும் குற்­றச்­சாட்­டு­களை ஏற்­றுக்­கொள்­வதைப் போலவே கடந்த 2015 ஆம் ஆண்டு ஜெனிவா கூட்­டத்­தொ­டரின்  30/1 பிரே­ர­ணைக்கு இலங்கை அர­சாங்கம் இணை அனு­ச­ரணை வழங்­கி­யது. இந்த அனு­ச­ர­ணையை இலங்கை அர­சாங்கம் வழங்­கி­யது என்று கூறு­வதை விடவும் அப்­போ­தைய வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ரவின் தனிப்­பட்ட தீர்­மானம் என்றே கூற­ மு­டியும். எனினும் நாம் மீண்டும் இதனை பரி­சீ­லிக்­க­வுள்ளோம். வெகு விரைவில் அதற்­கான நட­வ­டிக்­கைகள்  முன்­னெ­டுக்­கப்­படும். ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வை­யுடன்  மீண்டும் கலந்­து­ரை­யாடி இலங்கை அர­சாங்கம் அங்­கீ­க­ரித்த பிரே­ரணை தொடர்பில் கலந்­து­ரை­யா­டல்­க­ளுக்கு உட்­ப­டுத்தி அதனை நீக்­கு­வ­தற்­காக சகல நட­வ­டிக்­கைகளும் முன்­னெ­டுக்­கப்­படும் என்று  வெளி­வி­வ­கார அமைச்சர் கூறி­யி­ருக்­கின்றார்.  

இரண்டு  முக்­கிய அமைச்­சர்­களின் கூற்­று­களைப் பார்க்கும் போது அடுத்த ஜெனிவா கூட்டத் தொடரில்  இலங்கை அர­சாங்கம்    இலங்கைப் பிரே­ரணை தொடர்­பாக  மாற்று  யோசனை ஒன்றை முன்­வைக்கும்  சாத்­தியம் இருப்­ப­தா­கவே தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.   அதா­வது  இந்தப் பிரே­ர­ணையை ஏற்­றுக்­கொள்ள   முடி­யாது என்றும்   அதற்குப் பதி­லாக மாற்றுத்  திட்­ட­மொன்­றுக்குச் செல்­லலாம் என்ற  யோசனை அர­சாங்கத் தரப்பில் முன்­வைக்­கப்­ப­டலாம் என்றும்   எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. 

எனினும் ஜெனிவா  தீர்­மா­னத்தை புதிய அர­சாங்கம் ஏற்­காமல் விடு­வது பாரிய அழுத்­தங்­க­ளுக்கு வழிவகுக்கும் என்­பது   தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ. சுமந்­தி­ரனின் கருத்­தாக அமைந்­துள்­ளது. இவ்­வா­றான பல்­வேறு உள் மற்றும் புறக் கார­ணி­களின் அடிப்­ப­டையில் அர­சாங்கம் எவ்­வாறு இந்த விட­யத்தை  ஆரா­யப்­போ­கின்­றது என்­பது   முக்­கிய விட­ய­மாகும்.  

இது இவ்­வா­றி­ருக்க   ஜனா­தி­பதி  கோத்­த­பாய ராஜ­பக் ஷ  தேர்தல்  விஞ்­ஞா­ப­னத்தில் ஜெனிவா பிரே­ரணை தொடர்­பாக  குறிப்­பிட்டு எந்த விட­யத்­தையும் முன்­வைக்­க­வில்லை. எனினும்  பொது­வாக பல்­வேறு விட­யங்­களைக் கூறி­யி­ருந்தார். 

 அதா­வது "புதிய அர­சி­ய­ல­மைப்பு கொண்டு வரப்­படும். இதற்­காக பாரா­ளு­மன்­றத்தில் அனைத்துக் கட்­சி­க­ளையும் உள்­ள­டக்கி பாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு அமைக்­கப்­படும். புதிய அர­சி­ய­ல­மைப்பில் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை, கலப்பு தேர்தல் முறை, மாகா­ண­ சபை முறை மற்றும் சட்­டத்தின் ஆட்­சிப்­ப­டுத்தல் தொடர்பில் அவ­தானம் செலுத்­தப்­படும்.   ஒற்­றை­யாட்சி, பௌத்த மதத்­திற்­கான முன்­னு­ரிமை, மதச் சுதந்­திரம், அடிப்­படை மனித உரிமை ஆகி­யவை அர­சி­ய­ல­மைப்பின் பகு­தி­க­ளாக இருக்கும்.  ஜனா­தி­ப­தியின் தலை­மையில் சர்­வ­மத ஆலோ­சனை சபை உரு­வாக்­கப்­படும். மாவட்ட மற்றும் பிர­தேச மட்­டத்­திலும் சர்­வ­ம­தக்­ கு­ழுக்கள் நிறு­வப்­படும். யுத்தம் தொடர்­பாக குற்­றச்­சாட்­டுக்கு உட்­பட்டு சிறையில் வாடு­கின்ற இரா­ணுவ மற்றும் புலி உறுப்­பி­னர்கள் தொடர்­பாக முறை­யான புனர்­வாழ்வு முன்­னெ­டுக்­கப்­பட்டு சுதந்­திர மனி­தர்­க­ளாக சமூ­க­ம­யப்­ப­டுத்­த­ப­டு­வார்கள்.   பயங்­கர­வாதக் குற்­றச்­சாட்டில் நீண்­ட­ கா­ல­மாக தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள அனைவர் விட­யத்­திலும் மூன்று மாத­ கா­லத்தில் வழக்கு தொட­ரப்­படும் அல்­லது விடு­தலை செய்­யப்­ப­டு­வார்கள்’’  

   பல்­வேறு முக்­கிய விட­யங்கள்   ஜனா­தி­ப­தியின்  விஞ்­ஞா­ப­னத்தில் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தன. அதா­வது ஜெனிவா மனித  உரிமைகள் பேர­வையில் இலங்கை தொடர்­பாக விவா­திக்­கப்­படும்   பல்­வேறு விட­யங்கள் குறித்த  உள்­ள­டக்­கங்கள் ஜனா­தி­ப­தியின்   விஞ்­ஞா­ப­னத்தில்  காணப்­ப­டு­கின்­றன.  எனினும் பொது­வாக  பிரே­ரணை விட­யத்தில் என்ன நட­வ­டிக்கை  எடுக்­கப்­படும் என்று  குறிப்­பி­டப்­பட்­டி­ருக்­க­வில்லை.   எப்­ப­டி­யி­ருப்­பினும்    அடுத்த ஜெனிவா  கூட்டத் தொடர் என்­பது   இலங்­கையில்  நீதிக்காகக் காத்திருக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு   மிகவும் தீர்க்க மானதாக  அமைந்திருக்கின்றது. 

   இந்தப் பிரேரணை ஊடாக  தமக்கு  நீதி கிடைக்கும் என மக்கள் எதிர்பார்த்திருந்தனர். கடந்த அரசாங்கம்   அதற்கு இணை அனுசரணையும் வழங்கியிருந்தது. எனினும்  பிரேரணை  முழுமையாக  அமுல்படுத்தப்படவில்லை.   காணாமல் போனோர் அலுவலகம் நியமிக்கப்பட்டாலும்    காணாமல் போனோர் தொடர்பான  ஒரு முறைப் பாட்டுக்குக் கூட   பதில் கிடைக்கவில்லை.  நட்டஈடு வழங்கும் அலுவலகம் இன்னும் இயங்க ஆரம்பிக்கவில்லை. அதன்படி    கடந்த அரசாங்க காலத்திலும்   பாதிக்கப்பட்ட மக்களுக்கு   நீதி கிடைக்கவில்லை என்பதே யதார்த்தமாகும். இந்த நிலையில் எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகின்றது என்பது  அடுத்த கேள்வியாக இருக்கிறது?   காணாமல் போனோரின் உறவுகள்  இன்னும்  போராட்டங்களை நடத்திக்கொண்டுதான் இருக்கின்றனர். 

இவ்வாறான தீர்க்கமானதொரு சூழலில்  ஜெனிவா கூட்டத்  தொடரில்  மனித  உரி மைகள்  ஆணையாளர் பச்லட் இலங்கை  தொடர்பாக  இடைக்கால அறிக்கையை  வெளியிடப் போகிறார். அதில் அவர்  பல பரிந்துரைகளை முன்வைக்கும் சாத்தியம் காணப்படுகின்றது. அதேபோன்று    இலங்கை அரசாங்கமும்    ஜெனிவா பிரேரணைக்குப் பதிலாக   மாற்று  யோசனை ஒன்றை முன்வைக்கும் என்றும்  எதிர்பார்க்கப்படுகின்றது. 

இந்நிலையில்   பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்குமா என்பதே   அனைவரதும் கேள்வியாக உள்ளது.