பி.மாணிக்­க­வா­சகம்

மாவீரர் தின நிகழ்­வுகள் வடக்கு, கிழக்குப் பிர­தே­சங்­களின் பல இடங்­க­ளிலும் உணர்­வெ­ழுச்­சி­யுடன் பரந்த அளவில் நடை­பெற்­றி­ருக்­கின்­றன. முன்­னெப்­போதும் இல்­லாத அளவில் என்று குறிப்­பி­டத்­தக்க வகையில் மக்கள் இந்த நிகழ்­வு­களில் கலந்து கொண்டு, அர­சியல் விடு­த­லைக்­கான போராட்­டத்தில் தமது உயிர்­களை ஈகம் செய்த மாவீ­ரர்­களை அவர்கள் கசிந்­து­ருகிக் கண்ணீர் பெருக்கி நினைவு கூர்ந்­துள்­ளார்கள்.

கடந்த வரு­டங்­களைப் போலல்­லாமல், இந்த வருட நிகழ்வு முக்­கி­யத்­துவம் பெற்­றி­ருக்­கின்­றது. கண்ணீர் உகத்த கவ­லைக்­கு­ரிய உணர்வு பூர்வ நிகழ்­வாக அல்­லாமல், அதற்கும் அப்பால் அர­சியல் ரீதி­யான ஓர் உணர்வை வெளிப்­ப­டுத்­திய அடை­யா­ள­மா­கவும் அது நிகழ்ந்­துள்­ளது.

மாவீரர் தின நிகழ்­வுகள் தமிழ் மக்கள் வாழும் சர்­வ­தேச நாடுகள் எங்கும் நடை­பெற்­றுள்­ளன. இருப்­பினும், தாய­கமா­கிய இலங்­கையின் வடக்கு, கிழக்குப் பிர­தே­சங்­களில் இடம்­பெற்ற  நினை­வு­கூரல் நிகழ்­வுகள் அவற்றில் இருந்து வேறு­பட்­டி­ருக்­கின்­றன. அவைகள் தனித்­து­வ­மா­னவை.  தனித்­தன்மை கொண்­ட­வை­யா­கவும் அமைந்­தி­ருக்­கின்­றன.

போர்க்­குற்­றங்கள் சுமத்­தப்­பட்டு, நீதி விசா­ரணை கோரப்­பட்ட நிலையில் ஜனா­தி­பதி தேர்­தலில் குற்றம் சுமத்­தப்­பட்­ட­வரே மிகப் பெரும்­பான்மை பலத்­துடன் ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­பட்­டுள்ள ஒரு பின்­ன­ணியில் இந்த மாவீரர் தின நிகழ்வு உணர்வு பூர்­வ­மா­கவும், அர­சியல் முக்­கி­யத்­துவம் மிக்­க­தா­கவும் நடந்­தே­றி­யுள்­ளது.

யுத்த காலத்தில் பாது­காப்பு அமைச்சின் செய­லா­ள­ராக இருந்து அதீத பலத்­து­டனும், எல்லை மீறிய வகை­க­ளிலும் விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு எதி­ரான இரா­ணுவ நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்தார் என்று சர்­வ­தேச அளவில் புதிய ஜனா­தி­ப­தி­யா­கிய கோத்தாபய ராஜ­பக் ஷ மீது குற்றம் சுமத்­தப்­பட்­டி­ருந்­தது. வெள்ளை வேன்­களில் ஆட்கள் கடத்­தப்­பட்ட அபா­ய­க­ர­மான நட­வ­டிக்­கை­களில் அவ­ருக்கு நேர­டி­யாகத் தொடர்­புகள் இருந்­த­தா­கவும் அவர் மீது குற்றம் சுமத்­தப்­பட்­டி­ருந்­தது. அந்தக் குற்­றச்­சாட்­டுக்­களை அவர் முற்­றாக மறு­த­லித்­தி­ருந்த போதிலும், அந்தக் குற்­றச்­சாட்­டுக்­களில் இருந்து அவர் வெளிப்­ப­ட­வில்லை. விடு­ப­ட­வில்லை.

பெரும்­பான்மை இனத்­த­வ­ரா­கிய சிங்­கள பௌத்த மக்­களின் பேரா­த­ர­வுடன் 13 லட்ச வாக்­கு­களை மேல­தி­க­மாகப் பெற்று அவர் தேர்­தலில் அமோக வெற்­றி­யீட்­டி­யுள்ளார். அவர் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தி­யாக ஆட்சி அதி­கா­ரத்­துக்கு வந்­துள்­ள­தை­ய­டுத்து. முன்­னைய நிலை­யி­லேயே அவர் தொடர்ந்தும் செயற்­ப­டுவார் என்ற அச்சம் பர­வ­லாக நில­வு­கின்­றது.

தனக்கு எதி­ராகக் குற்றம் சுமத்­தி­ய­வர்­க­ளுக்கு எதி­ரா­கவும், மனித உரி­மைகள் மற்றும் சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்­டங்கள் தொடர்பில் ஈடு­பாட்­டுடன் செயற்­பட்­ட­வர்­க­ளுக்கு எதி­ரா­கவும் நிறை­வேற்று ஜனா­தி­பதி என்ற வகையில் அவர் கடு­மை­யாக நடந்து கொள்வார் என்ற எதிர்­பார்ப்பும் உள்­ளது. இந்த எதிர்­பார்ப்பை உறுதி செய்­வதைப் போன்று அவ­ரு­டைய ஆரம்­ப­கால நட­வ­டிக்­கை­களும் இடம்­பெற்­றி­ருக்­கின்­றன.

நாட்டின் அதி­தீ­விர குற்றச் செயல்கள் தொடர்பில் விசா­ர­ணைகள் நடத்­திய குற்றப் புல­னாய்வு பிரிவின் பணிப்­பா­ள­ராகப் பணி­யாற்­றிய சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் ஷானி அபே­சே­கர மற்றும் அவ­ருக்குக் கீழ் பணி­யாற்­றிய பொலிஸ் இன்ஸ்­பெக்டர் நிசாந்த சில்வா ஆகிய இரு­வ­ருக்கும் வழங்­கப்­பட்­டி­ருந்த பாது­காப்பு அதி­ர­டி­யாக நீக்­கப்­பட்­டது. தொடர்ந்து சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் ஷானி அபே­சே­கர காலி மாவட்ட பிரதி பொலிஸ் மா அதி­பரின் பிரத்­தி­யேக உத­வி­யா­ள­ராக உட­ன­டி­யாக இடம் மாற்றம் செய்­யப்­பட்டார். இந்தப் பத­விக்குப் பொது­வாக சப் இன்ஸ்­பெக்டர் ஒரு­வரே நிய­மிக்­கப்­ப­டு­வது வழமை.

கார­ணங்கள் எதுவும் தெரி­விக்­கப்­ப­டாமல் இவ்­வாறு சப் இன்ஸ்­பெக்டர் நிலையில் உள்ள ஒரு­வ­ரு­டைய பதவி நிலைக்கு ஷானி அபே­சே­கர தண்­டனை இடம் மாற்றம் செய்­யப்­பட்டார். அதே­வேளை, அவ­ருடன் முக்­கிய குற்­ற­வியல் சம்­ப­வங்கள் தொடர்பில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து படை அதி­கா­ரி­க­ளுக்கு எதி­ராக வழக்குத் தாக்கல் செய்த நிசாந்த சில்வா திடீ­ரென மூன்று பிள்­ளை­களைக் கொண்ட தனது குடும்­பத்­தி­ன­ருடன் சுவிற்சர்­லாந்­துக்குச் சென்­றுள்ளார். திடீ­ரென மெய்ப்­பா­து­காப்பு  நீக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து, தனது உயி­ரச்சம் கார­ண­மா­கவே அவர் நாட்­டை­விட்டு, சொல்­லாமல் கொள்­ளாமல் சுவிற்­ச­ர்லாந்­துக்குப் பறந்­துள்ளார். இதனை ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக்­ ஷவே 24ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை வெளிப்­ப­டுத்தி இருந்தார். இத­னை­ய­டுத்து புல­னாய்வு பிரிவைச் சேர்ந்த 704 புல­னாய்வு பொலிஸ் அதி­கா­ரிகள் நாட்­டை­விட்டு வெளி­யேறிச் செல்ல முடி­யா­த­வாறு தடை விதிக்­கப்­பட்டு விமான நிலைய குடி­வ­ரவு குடி­ய­கல்வு அதி­கா­ரி­க­ளுக்கு அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

குற்றப் புல­னாய்வு பிரிவின் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் ஷானி அபே­சே­கர, பொலிஸ் இன்ஸ்­பெக்டர் நிசாந்த சில்வா ஆகிய இரு­வரும் பக்­கச்­சார்­பான முறையில் தனக்கு எதி­ரா­கவும் பக்­க­ச்சார்­பான முறையில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­தி­ருந்­தனர் என்றும் ஜனா­தி­பதி கோத்தாபய ராஜ­பக் ஷ குற்றம் சுமத்­தி­யி­ருந்தார்.

மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவின் வேண்­டு­த­லை­ய­டுத்து, சண்டே லீடர் செய்­தித்­தாளின் ஆசி­ரியர் லசந்த விக்­கி­ர­ம­துங்­கவின் கொலை, ஊட­க­வி­ய­லாளர் பிரகீத் எக்­நெ­லி­கொட வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­டமை, 11 மாண­வர்கள் காணாமல் ஆக்­கப்­பட்­டமை ஆகிய மிக மோச­மான குற்றச் செயல்கள் தொடர்பில் இந்த பொலிஸ் அதி­கா­ரிகள் இரு­வரும் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து திடுக்­கிடும் தக­வல்கள் பல­வற்றைக் கண்­ட­றிந்து வெளிப்­ப­டுத்தி இருந்­தனர்.

இந்தச் சம்­ப­வங்கள் அப்­போ­தைய பாது­காப்பு அமைச்சின் செய­லா­ள­ராக இருந்­த­வ­ரா­கிய கோத்­த­பாய ராஜ­பக் ஷவே உரிய பணிப்­பு­ரை­களை விடுத்­தி­ருந்தார் என்று குற்றம் சுமத்­தப்­பட்­டி­ருந்­தது. நவம்பர் மாதம் 16ஆம் திகதி நடை­பெற்ற ஜனா­தி­பதி தேர்­தலில் வெற்றி பெற்று இலங்­கையின் ஏழா­வது ஜனா­தி­ப­தி­யாக 18ஆம் திகதி பத­வி­யேற்ற சூட்­டோடு சூடாக இந்தப் புல­னாய்வு அதி­கா­ரிகள் மீதான குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்­டி­ருந்­தது.

அதே­வேளை இன்ஸ்­பெக்டர் நிசாந்த சில்வா சுவிற்­சர்­லாந்­துக்குத் தப்பிச் சென்­றுள்­ள­தை­ய­டுத்து, கொழும்பில் உள்ள சுவிற்­ச­ர்லாந்து தூத­ர­கத்தைச் சேர்ந்த உள்ளூர் அதி­கா­ரி­யா­கிய பெண் ஒருவர் கடத்­தப்­பட்டு, கடத்­தப்­பட்ட வாக­னத்­தி­லேயே சுமார் 4 மணித்­தி­யா­லங்கள் கடு­மை­யான விசா­ர­ணைக்குப் பின்னர் விடு­விக்­கப்­பட்ட சம்­ப­வமும் இடம்­பெற்­றி­ருந்­தது. இனந்­தெ­ரி­யாத நபர்­களே இந்தக் கடத்­தலில் ஈடு­பட்­டி­ருந்­த­தாகத் தெரி­விக்­கப்­பட்­டது.

இந்தச் சம்­பவம் தொடர்பில் அமைச்­ச­ரவை முடி­வு­களை வெளி­யிடும் செய்­தி­யா­ளர்கள்  சந்­திப்பில் வின­வப்­பட்­ட­போது தகவல் வெளியிட்ட அமைச்சர் பந்­துல குண­வர்­தன இந்தக் கடத்தல் சம்­பவம் குறித்து அர­சுக்கும் – தங்­க­ளுக்கும் தெரி­யாது என தெரி­வித்­த­துடன், இது தொடர்பில் பொலி­ஸாரே அறிக்கை வெளி­யி­டுவர் என்று கூறி­யுள்ளார்.

ஆயினும் இந்தக் கடத்தல் சம்­ப­வத்தை வன்­மை­யாகக் கண்­டித்­துள்ள சுவிற்­ச­ர்லாந்து அர­சாங்கம் தனது நாட்டில் உள்ள இலங்கைத் தூது­வரை அழைத்து தனது ஆட்­சே­ப­னையைத் தெரி­வித்­துள்­ளது. கொழும்பில் உள்ள சுவிற்­ச­ர் லாந்து தூதுவர் இந்த விடயம் குறித்து வெளி­வி­வ­கார அமைச்சர் தினேஷ் குண­வர்­த­னவை நேர­டி­யாகச் சந்­தித்து, தனது பணி­யா­ளர்­களின் பாது­காப்பு குறித்து கலந்­து­ரை­யா­டி­ய­துடன், சுவிஸ் அர­சாங்­கத்தின் கரி­ச­னை­யையும் வெளி­யிட்­டுள்ளார். இத்­த­கைய பின்­பு­லத்­தி­லேயே மாவீரர் தினம் வடக்­கிலும் கிழக்­கிலும் எழுச்­சி­யுடன் கடைப்­பி­டிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. விடு­த­லைப்­பு­லி­களை நினை­வு­கூர்­வதை இலங்கை அரசும் இரா­ணு­வமும் விரும்­பி­ய­தில்லை. ஜனா­தி­பதி ராஜ­பக் ஷ காலத்தில் அதற்குத் தடை விதிக்­கப்­பட்­டி­ருந்­தது.

மாவீ­ரர்­க­ளுக்­கான சுட­ரேற்­றலைத் தடுப்­ப­தற்­காக ஆல­யங்­க­ளில்­கூட விளக்­கேற்றக் கூடாது என்று தடை விதிக்­கப்­பட்டு இரா­ணுவ கண்­கா­ணிப்பு மிகவும் தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது. ஒரு சந்­தர்ப்­பத்தில் கார்த்­திகை விளக்­கீட்டுத் தரு­ண­மும்­கூட வடக்கில் ஆல­யங்­க­ளிலும் வீடு­க­ளிலும் விளக்­கேற்ற முடி­யாத நிலைமை ஏற்­பட்­டி­ருந்­தது.  அத்­த­கைய கடும்­போக்கைக் கொண்ட ஆட்­சி­யா­ளர்கள் மீண்டும் அதி­கா­ரத்­திற்கு வந்­துள்ள தரு­ணத்­தி­லேயே இம்­முறை மாவிரர் தினம் உணர்­வு­பூர்­வ­மாக முன்­னெடுக்கப்­பட்­டி­ருந்­தது.

இந்த மாவீரர் தின முன்­னெ­டுப்­பா­னது இரா­ணுவ தடைகள் கெடு­பி­டி­க­ளுக்கு மத்­தியில் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்த போதிலும், இது ராஜபக் ஷ ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு எதி­ரா­னது என்ற பொரு­ளு­டை­ய­தல்ல. அல்­லது அடக்­கு­மு­றைக்கு எதி­ரான எழுச்­சி­யு­மல்ல. இந்த ஜனா­தி­பதி தேர்­தலின் மூலம் சிங்­களப் பேரி­ன­வாதம் வீச்­சுடன் தலை­யெ­டுத்­துள்ள நிலையில் தமிழ் மக்­களின் அர­சியல் உரி­மைக்­கான கோரிக்­கையும் போராட்ட நிலைப்­பாடும் பெரும் அச்­சத்­திற்கும் அச்­சு­றுத்­த­லுக்கும் ஆளா­கி­யி­ருப்­ப­தையே உணர முடி­கின்­றது.

பெரும்­பான்மை பலத்தின் ஊடாக சிங்­கள பௌத்த கொள்கைப் பிடிப்­புடன் ஆட்சி பீட­மே­றி­யுள்ள கோத்­த­பாய ராஜ­பக் ஷவின் சகோ­தரர் மஹிந்த ராஜ­பக் ஷ பிர­த­ம­ராகப் பத­வி­யேற்று தற்­கா­லிக அரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்­றுள்­ளது. ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் ஆகிய இரண்டு அதி­உச்ச பத­வி­களும் ராஜ­பக்­ ஷக்­களின் கைவ­ச­மா­கி­யுள்ள நிலையில் அடுத்து வர­வுள்ள மாகாண சபைக்­கான தேர்­தல்­க­ளிலும் பொதுத் தேர்­த­லிலும் அவர்­களே – பொது­ஜன பெர­மு­னவே பெரும்­பான்­மை­யாக வெற்­றி­யீட்­டு­வ­தற்­கான சாத்­தியம் நில­வு­கின்­றது.

புதி­தாகப் பத­வி­யேற்­றுள்ள ஜனா­தி­பதி கோத்தாபய ராஜ­பக் ஷ அபி­வி­ருத்­தியின் ஊடா­கவே பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண முடியும் என்ற கொள்கைப் பிடிப்பைக் கொண்­டுள்ளார். அதே­நேரம் தேசிய பாது­காப்­புக்கும் அவர் அதி­முக்­கி­யத்­துவம் அளித்­துள்ளார். முஸ்லிம் அடிப்­ப­டை­வாதக் குண்­டுத்­தாக்­கு­தல்­க­ளினால் பெரும் அச்­சு­றுத்­த­லுக்கு உள்­ளா­கிய தேசிய பாது­காப்பைத் தட்டி நிமிர்த்த வேண்­டிய பாரிய பொறுப்பு புதிய அர­சுக்கு உள்­ளது. அதில் தீவிர கவனம் செலுத்­தப்­படும் என்றும் ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜபக் ஷ கூறி­யுள்ளார்.

தேசிய பாது­காப்பு என்­பது ராஜ­பக் ­ஷக்­களைப் பொறுத்­த­மட்டில் முஸ்லிம் அடிப்­ப­டை­வாத பயங்­க­ர­வா­தத்தை மட்டும் அடிப்­ப­டை­யாகக் கொண்­ட­தல்ல. தமிழ் மக்­களின் அர­சியல் உரி­மைக்­கான போராட்­ட­மும்­கூட அவர்­களால் பயங்­க­ர­வா­த­மா­கவே நோக்­கப்­பட்­டது. நோக்­கப்­ப­டு­கின்­றது. குறிப்­பாக விடு­த­லைப்­பு­லிகள் மீண்டும் தலை­யெ­டுத்­து­விடக் கூடாது என்­பதில் அவர்கள் மிக மிகத் தீவி­ர­மாக உள்­ளனர்.

தமிழ் மக்கள் மீண்டும் ஆயுதப் போராட்டம் ஒன்றை நாடு­வ­தற்­கான சூழல் காணப்­ப­டாத போதிலும், அத்­த­கைய நிலைமை ஒன்றை எதிர்­பார்க்­கின்ற போக்­கையே ஆட்­சி­யா­ளர்­க­ளிடம் காண முடி­கின்­றது. இது இந்த நாட்டின் ஆட்சி அர­சி­ய­லுக்கு ஒரு நிரந்­த­ர­மான கொள்கை நிலைப்­பா­டா­கவே காணப்­ப­டு­கின்­றது.

பன்மைத் தன்மை கொண்­டதோர் அர­சியல் தீர்வு ஒன்றின் மூலம் மட்­டுமே இந்த நாட்டில் நிரந்­தர அமை­தி­யையும் சமா­தா­னத்­தையும் ஏற்­ப­டுத்த முடியும் என்­பது அர­சியல் ரீதி­யான யதார்த்­த­மாகும். இத­னையே தமிழ் மக்­களும் விரும்­பு­கின்­றார்கள். பேரின மக்­க­ளா­கிய சிங்­கள மக்­க­ளுடன் சம­உ­ரிமை உடை­ய­வர்­க­ளாக, ஆட்சி மற்றும் குடி­யியல் நிலை­மை­களில் சம­சந்­தர்ப்­பங்­களைக் கொண்­ட­வர்­க­ளாக இணைந்து வாழ வேண்டும் என்­பதே அவர்­க­ளது அர­சியல் விருப்­ப­மாகும்.

ஆனால் அர­சியல் தீர்­வுக்கும். உரிமைப் பகிர்­வுக்கும் இட­மில்லை என்­பதே ராஜ­பக் ஷக்­களின் நிலைப்­பாடு. தேசிய ரீதி­யி­லான அபி­வி­ருத்தி ஒனறே பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்­கான சரி­யான வழி என்­பதே அவர்­களின் அர­சியல் தீர­மானம். உரிமை மீறல்கள், போர்க்­குற்றச் செயற்­பா­டுகள் என்று நடந்து முடிந்­த­வற்றைப் பேசு­வ­திலும், அவற்றில் கவனம் செலுத்­து­வதும் அடிப்­ப­டையில் அர்த்­த­மற்ற நட­வ­டிக்­கைகள் என்­பதை புதிய ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக் ஷ தெளி­வாகக் குறிப்­பிட்­டுள்ளார்.

இந்த நிலையில் மாவீரர் தின நினை­வு­கூர­லின்­போது உணர்­வெ­ழுச்­சி­யுடன் ஒன்­றி­ணைந்த தமிழ் மக்கள் அபி­வி­ருத்தி அர­சியல் அல்ல,  உரிமை அர­சி­யலே தங்­க­ளு­டைய நிலைப்பாடு என்­பதை அழுத்தம் திருத்­த­மாக வெளிப்­ப­டுத்தியுள்­ளனர்.

ஏழா­வது ஜனா­தி­ப­திக்­கான தேர்­தலின் மூலம் புதிய பாதை­யொன்றில் - தீவி­ர­மான இன­வாதப் போக்கில் அடி­யெ­டுத்து வைத்­துள்ள இலங்கை அர­சி­யலின் போக்கில் அபி­வி­ருத்தி அர­சி­யலும், உரிமை அர­சி­யலும் எதிர் எதிர் முனை­களில் அணி­வ­குத்து நிற்­ப­தையே காண முடி­கின்­றது.

அபி­வி­ருத்தி அர­சியல் என்­பது ராஜ­பக் ஷக்­களின் அர­சியல் கொள்­கை­க­ளின்­படி உரிமை மறுப்பு அர­சி­ய­லா­கவே தமிழ்த்­த­ரப்­புக்­கான தரி­ச­ன­மாகும். யுத்­தத்தின் பின்­ன­ரான இலங்­கையின் அர­சியல் பூகோள அர­சியல் அலையில் அபி­வி­ருத்­தியை அடிப்­ப­டை­யாகக் கொண்டு செயற்­பட வேண்­டிய நிர்ப்­பந்­தத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது என்­பதை மறுக்க முடி­யாது. அதுவே பிராந்­திய அர­சியல் போட்டி கார­ண­மாக எழுந்­துள்ள அர­சியல் சூழல் என்றே கூற வேண்டும்.

பிராந்­திய அர­சியல் ஒட்­டத்­துக்கு ஈடு­கொ­டுப்­ப­தற்­காக அபி­வி­ருத்தி அர­சி­யலில் கவனம் செலுத்த வேண்­டிய கட்­டாயம் எழுந்­துள்­ளது என்­பதை மறுக்க முடி­யாது. இது புற­நிலை அர­சி­யலின் தத்­துவம். ஆனால் அக­நிலை அர­சி­யலில்  உரிமைப் பகிர்வும் பல்­லின இறை­மையின் உறு­திப்­பாடும் அதிக முக்­கி­யத்­துவம் பெற்­றி­ருக்­கின்­றது.

அக­நிலை அர­சியல் என்­பது பன்­மைத்­தன்மை, நல்­லி­ணக்கம், இனங்­க­ளுக்­கி­டை­யி­லான புரிந்­து­ணர்வு, ஐக்­கியம் என்­ப­வற்றை

 தேசிய மட்­டத்தில் தவிர்க்க முடி­யாத நிலையில் முக்­கி­யத்­துவம் பெற்­றி­ருக்­கின்­றன.

அக­நிலை அர­சியல் உறு­தி­யாக இல்­லாத நிலையில் புற­நிலை அர­சி­யலில் வீச்­சுடன் ஈடு­ப­டு­வதும், புற­நிலை சவால்­க­ளுக்கு முகம் கொடுப்­பதும் அர­சுக்கு கடி­ன­மான காரி­ய­மா­கவே இருக்கும் என்­பதில் சந்­தே­க­மில்லை. அக­நிலை அர­சி­யலில் ஏற்­ப­டு­கின்ற பிறழ்­வு­களும் அதில் ஏற்­ப­டு­கின்ற முரண்­பா­டு­களும் வெளிச்­சக்­தி­களைக் கவர்ந்­தி­ழுப்­ப­தற்­கான வாய்ப்­புக்­க­ளையே உரு­வாக்கும். 

வெளிச்­சக்­தி­களின் தலை­யீடு என்­பது நாட்டின் அர­சியல் மற்றும் பொரு­ளா­தார ஸ்திரத்­தன்­மைக்குப் பெரும் சவா­லாக மாறி­விடும் என்­ப­திலும் சந்­தே­க­மில்லை. இது ஒரு வகையில் தேசிய பாது­காப்­புக்கு உள்­ளக அச்­சு­றுத்­த­லிலும் பார்க்க பெரும் பாதிப்பை – அச்­சு­றுத்­தலை ஏற்­ப­டுத்­து­வ­தாக அமைந்­து­வி­டு­கின்ற ஆபத்தும் உள்­ளது என்­பதை மறுக்க முடி­யாது.

மொத்­தத்தில் தற்­போ­தய ஆட்சி அர­சி­யலில் ஏற்­பட்­டுள்ள சிங்­கள பௌத்த பேரி­ன­வா­தத்தின் தலை­நி­மிர்த்­த­லா­னது, அபி­வி­ருத்தி அர­சி­ய­லுக்கும் உரிமை அர­சி­ய­லுக்கும் இடை­யி­லான முரண் நிலை­மைக்கு வழி­வ­குத்­துள்­ள­தையே உய்த்­து­ணர முடி­கின்­றது. இந்த இரு சக்திகளும் ஒன்றுக்கொன்று முட்டி மோதிக்கொள்ளுமா அல்லது ஒன்றையொன்று அனுசரித்துச் செல்லுமா என்பதை முன்கூட்டியே ஊகித்தறிவது கடினம்.

ஜனாதிபதி பதவியைக் கைப்பற்றியுள்ள ராஜபக்ஷக்கள் உரிமை அரசியலுக்கு இடந்தராத ஓர் அரசியல் போக்கை வெளிப்படுத்தியுள்ள போதிலும், இலங்கையின் உள்விவகாரங்கள் சுமுகமான முறையில் கையாளப்படுவதையே இந்தியாவும் ஏனைய சர்வதேச நாடுகளும் விரும்புகின்றன. இந்த விருப்பத்தையே அந்த நாடுகள் யுத்தத்தின் பின்னரான சூழலில் பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தி வந்துள்ளன. ஐ.நா.வும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கின்ற நாடுகளும் இதனையே பல்வேறு சந்தர்ப்பங்களில் வலியுறுத்தி வந்துள்ளன.

இராணுவத்துக்கும், இராணுவ மயமான அரசியல் போக்கிற்கும் முன்னுரிமை அளிக்கின்ற ராஜபக் ஷக்களின் ஆட்சி முறையில் சர்வதேச நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட சர்வதேச அரசியல் அமைப்புக்களும் அதிக ஆர்வம் காட்டவில்லை. இன்னும் கூறுவதென்றால், ராஜபக் ஷக்களின் அரசியல் எழுச்சியை அவற்றால் சந்தேகத்துடனும் ஒரு வகை அச்சத்துடனுமே நோக்கப்படுகின்றன என்றே கூற வேண்டும்.

எனவே அபிவிருத்தி அரசியலுக்கும் உரிமை அரசியலுக்கும் இடையில் எழுகின்ற முரண்பாடான நிலைமைகள் சர்வதேசத்தினால் எப்படி நோக்கப்படும். எத்தகைய அணுகுமுறையை அந்த நாடுகள் கடைப்பிடிக்கும் என்பதெல்லாம் அப்போதைக்கப்போது எழுகின்ற சர்வதேச அரசியல் சூழலிலேயே தங்கியுள்ளது. 

எனவே, ஏழு தசாப்தங்களாக அரசியல் உரிமைக்காகப் பேராடிவருகின்ற தமிழ்த்தரப்பு நீண்ட போராட்டத்தின் காரணமாக களைப்படைந்துள்ள நிலையில் நாட்டின் இன்றைய புதிய அரசியல் போக்கையும் அரசியல் யதார்த்தத்தையும் தீர்க்கமாகப் புரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் வியூகங்களை வகுத்துச் செயற்பட வேண்டியது அவசியம்.