எவன்ட் கார்ட் நிறுவனத்தின் செயற்பாடுகளை கடற்படையின் கீழ் கொண்டு வந்ததன் பின்னர் ஒரு நாளைக்கு  ஒரு கோடியே  25 இலட்சம் ரூபா கிடைக்கின்றது.   ஆனால் கடந்த காலத்தில் 25 இலட்சம் ரூபா கிடைத்ததாகவே  கூறப்பட்டது. அப்படியாயின் ஒரு கோடி ரூபாவுக்கு என்ன நடந்தது?  இது தொடர்பில் விசாரணை நடத்தப்படவேண்டும்.  கோத்தபாய ராஜபக்ஷ   இதனை இவ்வாறு விட்டிருக்கமாட்டார் என்று   அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான  ராஜித்த சேனாரட்ன தெரிவித்தார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற  வாராந்த அமைச்சரவை  முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில் 

எவன்ட்கார்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர்   தற்போது  சிங்கப்பூர் சென்றுள்ளார்.  மருத்துவ தேவைக்கு சென்றாராம். ஆனால் அவ்வாறு அவருக்கு மருத்துவ  தேவை இல்லாவிடின் இன்டர்போல் ஊடாக அவரை   இங்கு கொண்டு வர முடியும். தேவை ஏற்படின் அதனை நாங்கள் செய்வோம். 

கேள்வி எவன்ட் கார்ட் நிறுவன விவகாரத்தில் அனைத்து பக்கத்திலும் ஊழல் இடம்பெற்றிருக்கும் என்று அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளாரே? 

பதில் அது அவரின் கருத்தாகும்.   அவர் அறிந்த விடயமாக இருக்கலாம். 

கேள்வி எவன்ட் கார்ட் விவகாரத்தை  கடற்படைக்கு மாற்றிய பின்னர்  எவ்வாறு செயற்பாடுகள் இடம்பெறுகின்றன? 

பதில் சிறப்பாக இடம்பெறுகின்றனர். ஒரு நாளைக்கு  ஒரு கோடியே  25 இலட்சம் ரூபா கிடைக்கின்றது.   ஆனால் கடந்த காலத்தில் 25 இலட்சம் ரூபா கிடைத்ததாகவே  கூறப்பட்டது. அப்படியாயின் ஒரு கோடி ரூபாவுக்கு என்ன நடந்தது?  இது தொடர்பில் விசாரணை நடத்தப்படவேண்டும்.  கோத்தபாய ராஜபக்ஷ   இதனை இவ்வாறு விட்டிருக்கமாட்டார். 

விசேட அமைச்சரவை கூட்டம் நடைபெற்றபோது  எவன்ட் கார்ட் நிறுவனத்துக்கு ஆதரவாக பேசும்படி  மூன்று  அமைச்சர்களை கோத்தபாய ராஜபக்ஷ கேட்டிருந்தார்.   அந்த மூன்று அமைச்சர்களும் எங்களுக்கு அதனை கூறினர். 

கேள்வி நிதி புலனாய்வு பிரிவை  தற்போது அகற்றவேண்டும் என்று  அமைச்சர் டிலான் பெரெரா கூறியுள்ளாரே? 

பதில்  ஏன் இதற்கு அமைச்சர் டிலான் பெரெரா பயப்படுகின்றார் என்று புரியவில்லை.  அவ்வாறான ஒரு பிரிவை உருவாக்குவதாக நாங்கள் ஏற்கனவே கூறியிருந்தோம்.